நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.9.14

ஆச்சார்ய தேவோ பவ!

-சு.சத்தியநாராயணன்  

 

                   சிந்தனைக்களம்

 



திருப்பூர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளிகள் சங்கமும் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தினவிழாவில் (செப். 5), திருப்பூர் அறம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுள் ஒருவரான திரு.சு.சத்தியநாராயணன் ஆற்றிய உரை இது...


அன்பிற்குரிய ஆசிரியர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். நான் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். எதையும் நான் கூறும் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.


நேற்றைய தி ஹிந்து (தமிழ்) நாளிதழில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் எழுதியுள்ள ஆசிரியர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி என்னவெனில், “இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் 66% பட்டதாரிகள் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள்; இவர்களில் பொறியியல் மாணவர்களை ஒதுக்கிவிட்டால் இந்த அளவு 85% லிருந்து 90%” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு தொழில் துறைக்குத் தேவையான வசதிகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கூறக்கூடிய அமைப்பு. இவ்வமைப்பு இவ்வாறு ஒரு செய்தி வெளியிட்டிருக்குமானால் அதன் விளைவு என்ன? நம் தேசத்தின் நிலையென்ன என்ற எண்ணம் எழுகிறதல்லவா? இதனை ஆசிரியர்களாகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?


(ஒரு ஆசிரியை இன்று உள்ள கல்வித்திட்டம் தவறானது; இது மாற்றப்பட வேண்டும்; சுய சிந்தனை உள்ள மாணவர்களை உருவாக்குமாறு கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார். இந்த கருத்தையே பெரும்பாலான ஆசிரியர்கள் வலியுறுத்தினர்)


இன்றைய கல்வித்திட்டம் சரியல்ல என்கிற நீங்கள் இதை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? இதற்கான பதில் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதைத்தானே நாங்கள் செய்ய முடியும் என்றவாறு அமைந்தது. நீங்கள் இந்த பணியை ஒரு வேலையாகப் பார்க்கிறீர்களா, அல்லது வேறு எவ்வாறாவாது காண்கிறீர்களா என்றேன். உடனே ஒட்டு மொத்தமாக சேவையாகச் செய்கிறோம் என்ற பதில் கிடைத்தது.


நான் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சர்வேயை கல்வித் திட்டத்தின் குறைபாட்டை உணர்த்துவதாக மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தவறவிட்டுவிட்ட ஒரு செயலையும் சுட்டுவதாகவும் உணர்கிறேன். ஏனெனில் இங்கு லாயக்கில்லாதவர்கள் என்று இவர்கள் குறிப்பிடும் அனைவரும் முட்டாள்களல்ல. பெற்றோராலோ, சமுதாயத்தாலோ ஏதோ ஒன்றைப் படிக்கத் தள்ளிவிடப்பட்டவர்களேத் தவிர, தங்கள் விருப்பம், திறமையைக் கொண்டு தங்கள் படிப்பினைத் தீர்மானிக்கவில்லை.


பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே, தங்கள் பிள்ளைகளின் தனித் திறமையை, ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இதில் அதனை அறிந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு மிக அதிகமாக உள்ளது. இதனை நீங்கள் எத்தனை பேர் செய்திருக்கிறீர்கள்? இதனைச் செய்திருந்தாலே பல மானவர்களின் எதிர்காலம் புதிய பாதையில் பயணப்பட்டிருக்கும். உங்களின் சேவை என்ற ஒரு சொல் முழுவடிவம் கண்டிருக்கும். அப்துல் கலாமடைந்த இன்றைய நிலை அவரின் ஆசிரியர் அவருக்களித்த ஒன்று. அன்று அந்த ஆசிரியர் அவரது திறமையை ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் இன்று அவரும் அந்த லாயக்கில்லாதவர் பட்டியலிலே இடம் பெற்றிருந்திருக்கலாம்.


கல்வித் திட்டம் சரியில்லை, மாற்றுக்கல்வி வேண்டும் என்று சமுதாயத்தின் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இல்லை முழுமையாக என்று கூட சொல்லிவிடலாம் கல்விக்கூடங்களுக்கு வெளியிலிருந்துதான் எழுகிறது. உண்மையில் இது ஆசிரியர்களாகிய உங்களிடமிருந்து எழ வேண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்துக்கும், அரசுக்கும் இதனைத் தெரியப்படுத்த வேண்டும்.


இந்த மாற்றுக் கல்வித் திட்டம் வருவதற்கு முன்னர் உங்களால் உங்கள் வகுப்பறைக்குள், உங்கள் கல்விக் கூடத்திற்குள் உங்களால் என்னென்ன மாறுதலை ஏற்படுத்த முடியுமென்று யோசியுங்கள். அதற்கு உத்வேகத்துடன் தயாராகுங்கள்.

அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள சில ஆலோசனைகள்.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு 


- என்பது வள்ளுவன் வாக்கு. இங்கு நீங்கள் ஆசிரிய சேவையை துணிந்து எடுத்துள்ளீர்கள். உங்களது எண்ணமும் துணிவும் எவ்வாறு அமைய வேண்டும்?


எண்ணுக;


* பெரிதாகச் சிந்தியுங்கள் - உங்கள் இலக்குகளை பெரிதாக அமைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் கனவுகள் பெரிதாக அமையட்டும்.


* உங்கள் தெய்வீக சக்தி குறித்து சிந்தனை செய்யுங்கள் - ஆசிரியப் பணி என்பது மிக மகத்தானது. ஒரு சமுதாயத்தை சிற்பி போல செதுக்க வேண்டிய பணி. எனவே நீங்கள் தெய்வீகமானவர்கள். உங்கள் சக்தியின் அருமையை எண்ணுங்கள்.


* வித்தியாசமாகச் சிந்தியுங்கள் - ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு இப்படித்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றில்லாமல் அதன் எல்லையை விரிவு படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் வித்தியாசத்தை உணரச் செய்யுங்கள். வகுப்பறை என்றில்லாமல் மாணவன் கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் அது மரத்தடியில் கூட நிகழட்டும். இடமும் சூழலும் வித்தியாசமாய் அமையட்டும்.


* தடைகளை வெல்லும் முறைகளைப் பற்றிச் சிந்தியுங்கள் - இவையெல்லாம் செய்யமுடியாமல் உங்களுக்கு ஏற்படும் தடைகளை எவ்வாறு அகற்றுவது என்று சிந்தியுங்கள். நீங்கள் அதனைச் சிந்திக்கையில் நிச்சயம் புத்தம் புதிய ஒரு வழி பிறக்கும். மாணவர்களுக்கு கற்றலில் ஏற்படும் தடைகளை அகற்ற புதிய வழிமுறைகளைச் சிந்தியுங்கள்.


துணிக


* வெற்றிக்குத் தேவையான அளவு பணி செய்க


* தொடர்ந்து வேலை செய்க - தொடர்ச்சியான ஒரு செயலே நல்ல பலனைக் கொடுக்கும். ஆரம்ப நிலையிலேயே ஒரு செயலின் முடிவை நாம் தீர்மானித்து விட இயலாது. தொடர்ச்சியான முயற்சி வெற்றியை உறுதி செய்யும்.


* மன உறுதியுடன் வேலை செய்க - கடின உழைப்பும், தொடர்ச்சியான பணியும் அயர்ச்சியை உண்டாக்கிவிடக்கூடும். வரும் சோதனைகளும் அதிகமாகக் கூடும். இவையனைத்தையும் எதிர்கொள்ள மன உறுதி மிக அவசியம்.


* சமுதாயத்திற்காக வேலை செய்க - ஏற்கனவே நான் கூறினேன், நீங்கள் சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகள் என்று. எனவே உங்கள் பணியில் சமுதாயத்தின் நலன் முக்கியமான குறியீடாக அமைய வேண்டும். இன்று இங்கு தனி மனித உரிமை பேசப்படுகிறது. இது இந்தியாவுக்கான வார்த்தை அல்ல. இங்கு சமுதாய உரிமைதான் முக்கியம். உரிமை என்பதை விட கடமை என்ற வார்த்தை முக்கியம். தனி மனித உணர்வு ஐரோப்பியர்களுக்குச் சரியாக அமையலாம். நம்மைப் பொறுத்தவரை குடும்ப உணர்வுடன் செய்ல்படுபவர்கள். நாம் நம் சமுதாயம் மேம்பட உழைப்போம். தனி மனிதனின் தியாகம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக அமைய வேண்டுமே ஒழிய சமுதாயம் தனி மனிதனுக்காக தியாகம் செய்வதாக அமையக்கூடாது.


ஆதிசங்கரரின் வாக்காக ஒன்றைக் கூறுவார்கள்;
”கர்த்தும் அகர்த்தும் அன்யதா வா கர்த்தும் ஷக்யதே” - ஒன்றைச் செய்யவும் செய்யாதிருக்கவும், வேறு விதமாகச் செய்யவும் வேண்டிய சுதந்திரமான படைப்பாற்றல் மனிதனுக்கே உள்ளது. எனவே நீங்கள் செய்ய வேண்டிய செயல்களையும், செய்யும் விதங்களையும் தீர்மானியுங்கள்.


இதற்காக மேலும் உங்கள் தனித்திறனை மதிப்பிற்குரியதாக ஆக்கிக் கொள்ள சில ஆலோசனைகள்.


உள்ளார்ந்த நேயம் - நேயம் என்பது வெறும் நாடகமாகிவிடக்கூடாது. நமது உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். இரு உதாரணங்களைக் கூறலாம்.


ஒன்று மகாபாரதத்தில் கண்ணன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு வந்த அனைவரையும் பாதங்கழுவி அழைத்தது. இதன் பலன் யாகத்தின் முதல் பூஜை அவன் வசமானது. இங்கு தென்னகத்தே ராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்கும் சிற்பிக்கு வெற்றிலைச் சாறு உமிழ பாத்திரம் தாங்கி நின்றது. மிகபெரிய கலைப் பொக்கிஷம் அமைத்த பெருமை அவன் வசமானது. இந்த நிகழ்வுகளை பணிவு எனக் குறிப்பிடாமல் நேயம் என்று குறிப்பிடுவதே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.


ஒரு ஆசிரியையின் உள்ளார்ந்த நேயத்தின் உண்மைக் கதை ஒன்றக் காண்போம். ஒரு ஆசிரியை, மிகவும் கண்டிப்பானவர், நல்ல அறிவுக் கூர்மையுள்ளவர். ஆனால் அவரால் தத்தி மாணவர்களைச் சகித்துக் கொள்ள இயலாது. அந்த கல்வி வருடம் அவர் வகுப்பாசிரியை; அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவனைத் தவிர அனைவரும் மிகச் சுட்டியாகச் தெரிந்தார்கள். அவன் மட்டும் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்தான். பாடங்கள் நடந்தன, வகுப்புத் தேர்வுகள் நடந்தன. அந்த ஒரு மாணவனைத் தவிர அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார்கள். அவன் மீது தன் கோபத்தைக் கக்கினார் அந்த கண்டிப்புக்குப் பேர்போன ஆசிரியை. அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மிரட்டலோடு அது நிறைவுற்றது.


அதற்கடுத்த தேர்வில் அந்த மாணவனது நிலை மேலும் மோசமானது. அவனது ஒவ்வொரு அசைவிலும் சோகம் இழைந்தோடிக் கிடந்ததது. ஆனால் அந்த ஆசிரியையின் கண்களும், காதுகளும் பாடத்தைத் தாண்டி சென்றதேயில்லை. அவன் தேர்வு எழுதிய தாள்கள் அவனது மதிப்பெண்களை அள்ளித் தரவில்லை;ஆனால் அந்த ஆசிரியையிடமிருந்து வசவுகளை அள்ளி அள்ளித் தந்தது. இந்த வசவுகள் அவனுள் எந்த விளைவையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. ஆனால் அவனது சோகம் இழைந்தோடும் முகத்தில் மேலும் சோக இழைகளை அதிகரித்தவண்ணம் இருந்தது.


அந்த கண்டிப்பான ஆசிரியைக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த குறிப்பிட்ட மாணவனின் மதிப்பெண்கள் பற்றிய விசாரிப்பாகவே அது அமைந்தது. ஆசிரியை அந்த தத்தி மாணவனைப் பற்றி குறைகளை அடுக்கினார். அமைதியாக அனைத்தையும் கேட்ட தலைமை ஆசிரியை தான் முன்பே எடுத்து வைத்திருந்த அம்மாணவனது சென்ற வருட மதிப்பெண் பட்டியலையெல்லாம் எடுத்து இந்த வகுப்பாசிரியைப் பார்க்குமாறு கூறினார். மிக நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான். இது அந்த ஆசிரியைக்கு அதிசயமாக இருந்தது. இந்த தத்தி மாணவனுக்கு இது எப்படி சாத்தியமென எண்ணினார். தலைமையாசிரியை இந்த மாணவன் நன்கு படிக்கக்கூடிய மாணவனென்றும் அவனுக்குள்ள பிரச்சினை என்ன என்பதை கண்டுணர்ந்து அதனைக் களைந்து அவனுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

அன்று பள்ளி வேலைநேரம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும் தருணத்தில் ஆசிரியை அந்த மாணவனிடம் தனித்து பேசத் துவங்கினார். பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் அவன் சென்ற வருட விடுமுறையில் அவனக்கு எல்லாமாக இருந்த தாயை இழந்தது அவனை மிகப் பெரிய துயரத்தில் தள்ளியுள்ளது என்பதை உணர்ந்தார். அப்பொழுது அவருக்குள்ளிருந்த நேயம் தூண்டப்பட, கவலைப்படாதே, இனி நான் உனக்கு தாய் என்று எண்ணிக் கொள். உனது கவலைகளை, பிரச்சினைகளை என்னோடு பகிர்ந்து கொள் என ஆதரவோடு கூறினார். இதுகாறும் அவர் மாணவர்களோடு பேசி வந்த தோரணைக்கு முற்றிலும் மாறானது இது. ஆசிரியையின் இந்தப் பேச்சு ஓரளவுக்கு மாணவனது மனத்தினில் மாற்றத்தை உண்டு பண்ணியது.


மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவன், தான் கொண்டு வந்திருந்த ஒரு பழைய கடிகாரத்தை ஆசிரியைக்கு அன்பளிப்பாக அளித்தான். அது தன் தாய் அணிந்திருந்ததாகவும், இதனைக் கண்ணுறும்போதெல்லாம் தன் தாயை காணும் உணர்வு ஏற்படுவதாகவும் அவன் கூறினான். எனவே நீங்கள் இதனை அணிந்து கொண்டால் நான் உங்களிடம் முழுமையாக என் தாயை காண்பேன் என்றான்.உடனே ஆசிரியை தான் அணிந்திருந்த நல்ல கடிகாரத்தைக் களைந்துவிட்டு, அவனளித்த அந்த பழைய கடிகாரத்தை அணிந்து கொண்டாள். மாணவனின் மனம் எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும் எனச் சொல்ல வார்த்தையில்லை. உங்களால் உணரமுடியும். இங்கு தாய்மை என்ற உணர்வு பேசும் நிகழ்வு ஏற்பட்டது.


பின்னர் அந்த மாணவன் தனது கற்றலில் நல்ல முன்னேற்றம் கண்டான். அவன் தனது பள்ளிக் கல்வியை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்கும் சென்றுவிட்டான். ஆனால் அந்த ஆசிரியை தான் அணிந்திருந்த அந்த பழைய கடிகாரத்தை களையவில்லை. அந்த மாணவனின் தொடர்பு இல்லாதிருந்த போதும் அவளுக்கு அந்த கடிகாரம் மிக முக்கியமானதாக இருந்தது. ஆசிரியைக்குத் தேவையான தாய்மை உணர்வை தூண்டியது மட்டுமல்லாமல் அவளது ஆசிரியைப் பணி மிகச் சிறப்பாக அமைய காரணமாக அமைந்த ஒன்றல்லவா அது.

பல வருடங்கள் சென்று பணி ஓய்வு பெற்றுவிட்ட அந்த ஆசிரியைக்கு ஒரு திருமண அழைப்பிதழ், விமானப் பயணச்சீட்டுடன் வந்து சேர்ந்தது. அழைப்பிதழைப் படித்த ஆசிரியை மாணவன் தன்னை நினைவு கொண்டுள்ளதை எண்ணி சந்தோஷப்பட்டாள். திருமணத்திற்கு சென்ற ஆசிரியைக்கு விமான நிலையத்திலிருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திற்குச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அன்றும் அந்த ஆசிரியையின் கையில் அந்தப் பழைய கடிகாரமே இருந்தது. இதனைக் கண்ட மாணவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தாயின் ஸ்தானத்திலிருந்து அந்தத் திருமணத்தை நடத்திவைத்தார் அவர். இந்தக் கதை மாணவர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் உங்களது உள்ளார்ந்த நேயம் எப்படி வெளிப்படவேண்டும் என்பதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள்.


இரண்டாவதாக கர்வமற்ற தன்மை - ஒரு மராத்தி வாசகம் உண்டு. கர்வம் சாதாரண மனிதனை எதுவும் செய்யாது; உறுதியாக அது அறிவுள்ளவர்களையும், அதிகாரத்திலுள்ளவர்களையும் அழித்து விடும். அது அன்பையும், ஈர்க்கும் தன்மையும் உங்களிடமிருந்து அகற்றிவிடும். கர்வமில்லாத தன்மை மிக உயர்ந்த நிலையாகும்.


மூன்றாவதாக வயப்படுத்தும் தன்மையும் பரவவிடும் தன்மையும் - மாணவர்களை உங்களிடத்தே ஈர்த்து வயப்படுத்தும் தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். உங்களிடமிருந்து பல உயர்ந்த விஷயங்கள் மாணவர்களிடம் பரவச் செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.


நான்காவதாக நேர்மறை எண்ணம் - நேர்மறை எண்ணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாறுதல்களை உருவாக்கும்.


ஐந்தாவதாக அணுகும் முறை - ஒவ்வொருவரிடமும் அணுகும் முறை அற்புதமான நிகழ்வாக அமைய வேண்டும். மூத்த ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களிடம் இடைவெளி இருக்க வேண்டும், அப்பொழுதுதான் மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தினைக் கைவிட வேண்டும். கரியும், வைரமும் கார்பன் என்ற ஒரே பொருளாலானது. ஆனால் இரண்டையும் அணுகும் விதம் வேறுவேறானது. இளையவர்கள் உங்களிடம் வைரத்தை அணுகுதல் போல அணுகும் அளவு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல் இடைவெளியை நீங்கள் கைக்கொண்டால் நாட்செல்ல வெறும் இடைவெளி மட்டுமே இருக்கும்;மரியாதை என்பது இருக்காது.


மூத்தவர்களை மதிக்கும் தன்மை - முக்கியமாக மூத்த ஊழியர்களிடம் பழகும்பொழுது அவர்களது அர்ப்பணிப்பையும், நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்துள்ள உழைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நினைப்பு அவர்களிடம் ஒரு வித மரியாதையை உங்களுக்கு ஏற்படுத்தும். இந்நிலை மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்குமிடையே ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.


இன்னுமொரு குட்டிக்கதை. ஒரு நல்ல அரசன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் நல்ல வாழ்க்கையைப் பெற்றார்கள். பொற்காலம் என்றே அதனை அழைக்கலாம். இந்த சூழ்நிலையில் அயல்நாட்டு அரசன் இந்த நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றி அவனை நாட்டைவிட்டு ஓடும்படி செய்து விட்டான். நாட்டிலிருந்து தப்பிய அந்த அரசன் காட்டையடைந்து அலைந்து திரிந்தான். ஆடைகள் கிழிந்து, பசியால் வாடி மிகவும் களைப்புடன் ஒரு பராரியைப் போல அலைந்து கொண்டிருந்தான். நல்ல உணவுக்கும், ஆடைக்கும் அவனது மனது ஏங்கியது.


களைத்த அவன் கால்கள் ஒரு ரம்மியமான சூழலை அடைந்தன. அங்கு கிழிந்த ஆடையணிந்த பல தபஸ்விகள் தியானத்தில் இருந்தனர். மெலிந்த உடல்களைக் கொண்ட அவர்கள் பல நாட்களாக சரியான உணவில்லாதவர்கள் போலக் காணப்பட்டனர். மிகுந்த பசி கொண்ட அரசனுக்கு அவர்களது நிலையும், அரசனாக இருந்த இவனது நிலையும் அவர்களிடம் உணவினை யாசிக்க தயக்கம் கொள்ள வைத்தது. ஆனால் பசி அவன் தயக்கத்தைத் தள்ளி அவர்களிடம் யாசிக்க வைத்தது.


மூத்த தபஸ்வி அருகிலிருந்த மரத்தைக் காட்டி, இது கல்ப விருக்ஷம்; இதனிடம் உனக்குத் தேவையானதைக் கேள் என்றார். தயங்கினாலும் அவன் நிலை அவனை மரத்திடம் யாசிக்கச் செய்தது. அது அவனுக்குத் தேவையான உணவினை அளித்தது. பசி நீங்கிய அவன் நல்ல ஆடையினை யாசித்துப் பெற்றான். அமைதியடைந்த மனது யோசித்தது. ஏன் நமது அரசினை யாசித்தால் என எண்ணி அதனைச் செய்தான்.


உடனே நாட்டைக் கைப்பற்றிய அரசன் அவன் முன்னே தோன்றி, மக்கள் உன் மீது மிக நேசமாக உள்ளனர்; நீ மிகுந்த நல்லாட்சி செய்துள்ளாய்; மக்கள் நீ ஆட்சி புரிவதையே விரும்புகின்றனர்; எனவே நீ உனது நாட்டை மீண்டும் பெற்றுக் கொண்டு ஆட்சி புரிவாயாக எனக் கூறினான்.


நாடு திரும்பிய அரசன் ஒரு வாரத்திற்கும் மேலாக நின்று போயிருந்த அலுவல்களை செய்து நிர்வாகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தான். நிர்வாக அலுவல்கள் அவனுக்கு சிறிது ஓய்வளித்த போது அவனது மனம் பழைய நிகழ்ச்சிகளை அசை போடத் துவங்கியது. எல்லாவற்றையும் அளிக்கவல்ல கல்ப விருக்ஷம் இருந்தும் ஏனிந்த தபஸ்விகள் நல்ல ஆடையில்லாமலும், அதிக உணவில்லாமலும் வாழ்கின்றனர் என அவன் மனம் எண்ணி அதிசயத்தது. விடை கிடைக்காமல் தவித்த அவன் தபஸ்விகளின் இருப்பிடம் நோக்கிச் சென்றான்.


மூத்த தபஸ்வியிடம் தன் கேள்வியை முன்வைத்தான். நாங்களனைவரும் செய்த, செய்கின்ற தபஸினால் இந்த விருக்ஷம் இந்த சக்தியைப் பெற்றுள்ளது. இது இல்லாதோருக்கும் தேவையிருப்போருக்கும் கிடைக்கவே செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டு வாழ்ந்தால் இவ்விருக்ஷம் அந்த சக்தியை இழந்து விடும் என்றார். தபஸ்விகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை எண்ணி அரசன் மிகவும் மகிழ்ந்தான். தனது ஆட்சியில் இன்னும் சிறப்பாகத் தன்னலமற்று நல்லாட்சி செய்தான்.

இந்த ஆசிரியர் சமுதாயம் அந்த தபஸ்விகளைப் போலிருந்து, கல்பவிருக்ஷமாக மாணவர்களை உருவாக்கி, இந்த தேசத்தினை எல்லா துறையிலும் மேம்படச் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

        காண்க: கட்டுரையாளரின் வலைப்பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக