ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி: ஏப். 27
.
மகான் ஸ்ரீராமானுஜர். 1017, சித்திரை 13ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். காந்திமதியம்மாள் - கேசவசோமாயாஜியாண்டானின் திருக்குமாரர் இவர்.கேசவ சோமயாஜியார், ராமானுஜனுக்கு உபநயனம் செய்வித்தார். காஞ்சிக்கு அருகே திருப்புட்குழியில் யாதவப்ரகாசரிடம் ராமானுஜரும் அவரின் சித்தி மகன் கோவிந்தனும் கல்வி பயின்றனர். ஒருமுறை, யாதவப்ரகாசர் வேத அர்த்தத்திற்கு முரண்பட்ட விளக்கம் கூற, தன் அழகான வாதங்களால், அவரை மடக்கினார் ராமானுஜர். அதனால், யாதவப்ரகாசருக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. ராமானுஜர் மீது பகைமை ஏற்பட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.
வட தேச யாத்திரையாக யாதவப்ரகாசரும் அவரது சீடர்களும் ராமானுஜருடன் காசியை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ராமானுஜர் இறங்கினார். அப்போது, கோவிந்தர் குருவின் திட்டத்தை ராமானுஜரிடம் கூறினார். அதுகேட்ட ராமானுஜர் குருவிடமிருந்து தப்பினார். கோவிந்தர், தன் குருவிடம் மிக்க வருத்தம் தோய்ந்தவாறு ராமானுஜன் காட்டில் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
ராமானுஜர் நெடுந்தொலைவு நடந்தார். அந்தி சாயும் நேரம். இருள் கவ்வியது. வழி தெரியவில்லை. அப்போது, ஒரு வேடனும் அவனது மனைவியும் அந்த வழியில் செல்வதைக் கண்ட ராமானுஜர், "எங்குச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்களும், காஞ்சிபுரம் செல்வதாக பதில் கூறினர். நள்ளிரவு, மூவரும் ஒரு மரத்தடியில் உறங்கினர். நடந்த களைப்பினால் நீர் வேட்கை ராமானுஜருக்கு ஏற்பட்டது. நீர் தருமாறு அவர் வேண்ட, வேடனும் நீரளித்து வேட்கையைத் தணித்தார்.
பொழுது புலர்ந்தது. காஞ்சி எல்லைக்கு அருகில் தான் இருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். ஆனால் வேடனையும் அவனது மனைவியையும் காணவில்லை. தான் இருப்பது சாலைக்கிணறு என்பதையும், வழிதெரியாது தவித்த தன்னை அழைத்து வந்த வேடர் மக்கள் வரதராஜனும், பெருந்தேவித் தாயாருமே என்பதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார். அன்று முதல் வரதராஜப் பெருமானுக்கு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர்.
- பிள்ளைலோகம் திருவேங்கடாசாரியார்
நன்றி: வெள்ளிமணி - தினமணி (27 .04 .2012)
காண்க: ஸ்ரீ ராமானுஜர் (விக்கி)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக