நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.7.11

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை

 
மறைமலை அடிகள்
 
(பிறப்பு: ஜூலை 15)
 
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' - என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர்.  
 
"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

 நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.

 திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு 'வேதாசலம்' என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித்தமிழில் 'மறைமலை' என்று மாற்றிக்கொண்டார்.

 நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.

 மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் "மறைமலையடிகள் நூலகம்" அமைய அது உதவியது.

 மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். நான்கு ஆண் பிள்ளைகளையும் மூன்று பெண் பிள்ளைகளையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றனர் அத்தம்பதியினர்.

 மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.

 தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் "சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.

 தமிழும், சைவமும் தமது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள்.  முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம், அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம் போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார்.

 மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.

 "சமய உணர்ச்சி சிலர் மட்டும் விரும்பக்கூடிய அலங்காரப் பொருள் அன்று. மக்களை விலங்கினின்று பிரித்து தெய்வமாக்குவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் சக்தியாகும் அது", என 'சைவ சமயத்தின் தற்கால நிலை'  என்ற நூலில் சமய உணர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

 மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போதும் கடுமையான கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே 'தனித்தமிழ்' என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா! என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.

 அடிகள் சிறந்த இதழாளராகவும் விளங்கினார். இளமைப் பருவத்திலேயே செய்திகளைச் சேகரித்து 'நாகை நீலலோசினி' என்ற நாளிதழுக்கு அளித்தார். பின்னாளில் 'ஞானசேகரம்' என்ற இதழை அவரே நடத்தினார். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, 'மிஸ்டிக் மைனா', 'தி ஓரியண்டல் விஸ்டம்' என்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.  இவை உலகில் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாயின. 1897ம் ஆண்டு சே.எம்.நல்லாசாமிப் பிள்ளை என்பவர் தொடங்கிய 'சித்தாந்த தீபிகை' என்ற தமிழ், ஆங்கில மொழிகளுக்கான இரண்டு இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 

 16 வயதிலேயே இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்து, தாம் எழுதிய நூல்களுக்கு ஆங்கிலத்திலும் முன்னுரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மறைமலையடிகள், ஐம்பத்தி ஆறு நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு 'மணிமொழி நூல் நிலையம்' என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
  • தமிழர் மதம்
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
  • சிறுவருக்கான செந்தமிழ் நூல்
  • மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
  • மரணத்தின் பின் மனிதர் நிலை
  • தனித்தமிழ்மாட்சி
  • பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
  • உரைமணிக்கோவை

- போன்ற 40க்கும் மேற்பட்ட சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். 

சமயநெறி, இலக்கியத்தில் ஹரிஜனங்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். ஹரிஜனங்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார் மறைமலையடிகள்.

1937ல் ராஜாஜி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார். 

தமிழ்மொழி சீர்கேடுற்று சைவ நெறி தாழ்வுற்றிருந்த காலத்தில் வீறுகொண்ட ஞாயிரெனத் தோன்றி, தமிழுக்கும், சைவத்துக்கும் மிகுந்த பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம். 

மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகும், சைவ உலகும் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.

தங்க விளக்கே ஆனாலும் தூசி படிந்து மூலையில் கிடந்தால் அதன் அருமையை யாரால் அறிந்து கொள்ள முடியும்.  தங்கத் தமிழ் தீபத்தை பேச்சால், எழுத்தால் தூசி தட்டித் துடைத்து ஏற்றி வைத்தவர் மறைமலையடிகள் என்றால் அதில் இரண்டாவது கருத்துக்கே இடம் கிடையாது. 

இப்போதைய நமது கடமை, அந்தத் தீபத்தை என்றென்றும் அணையாமல் பாதுகாப்பதுதான். தமிழறிஞரைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்; தமிழைக் காப்பாம்; தமிழராக வாழ்வோம்.
 
 
காண்க:
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக