ராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
திருவனந்தபுரம் அனந்த பத்பநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள கோவில் கருவூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கோவிலின் நிலவறைகளில் மிகுந்த பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்னும் ஒரு நிலவறை திறக்கப்படாமல் நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த பத்திரிகையிலும் இதே செய்தி தான். எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான வியப்பு இது. பலநூறு ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பாரதத்தின் பெரும் செல்வம் இது.
நாடே வியந்து பார்க்கும் பத்மநாபர் கோவில் சொத்துக்கள் குறித்து ஒரே ஒருவர் மட்டும் எந்த வியப்போ, அதிர்ச்சியோ இன்றி புன்னகைக்கிறார். அவர், இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரும், திருவிதாங்கூர் மகாராஜாவுமான ஸ்ரீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. 'கோவில் சொத்து யாருக்கு சேரும்?'' என்று ஊடகங்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ள நிலையில், ''அந்தச் செல்வம் யாருக்கும் சொந்தமானது இல்லை. நிச்சயமாக எங்கள் ராஜ குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. அவை கடவுளுக்கே சொந்தம்'' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்கிறார், மகாராஜா மார்த்தாண்ட வர்மா.
உண்மையில் இக்கோவிலில் சேமிக்கப்பட்டுள்ள செல்வங்களில் பெருமளவு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தவை. பல ஆபரணங்கள் ராஜ குடும்பத்தால் கோவிலுக்கு காணிக்கையாக்கப்பட்டவை. கோவிலின் கருவூலம் அளப்பரிய செல்வங்களைக் கொண்டிருந்தது தெரிந்தும், பல நூற்றாண்டுகளாக அதுபற்றி எந்த விளம்பரமும் இன்றி, ரகசியம் பேணி, செல்வத்தைக் காத்துள்ளது ராஜ குடும்பம். ஆதிக்க சக்திகளால் கொள்ளை போக வாய்ப்பிருந்த நிலையிலும், சொந்த வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், கோவில் கருவூலத்தை வெளிப்படுத்தாமல் காத்தவர்கள் 'பத்மநாப தாசர்கள்' என்று தங்களை அறிவித்துக் கொண்ட ராஜ குடும்பத்தினர் தான். அவர்களுக்கு நாடு நன்றியுடன் வீர வணக்கம் செலுத்துகிறது.
இன்றைய கேரளத்தின் பெரும் பகுதியை (திருவிதாங்கூர் சமஸ்தானம்) ஒருகாலத்தில் ஆண்ட சேரகுல பரம்பரையைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா குடும்பம் இப்போது மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறது. ஆயினும் எளிய மக்களுக்கான சேவைகளையும் செய்தபடி, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்கிறது இந்த மன்னர் குடும்பம்.90 வயதிலும் கம்பீரமாக, பத்மநாபர் கோவிலுக்கு தினசரி வருகை தந்து செல்கிறார் ராஜா மார்த்தாண்ட வர்மா.
இக்கோவிலின் நிரந்தர அறங்காவலர் இவர்தான். கோவிலுக்கு ஒரு குழல் விளக்கு தானம் செய்தாலே, அதில் விளக்கை மறைக்கும் அளவுக்கு தனது பெயரைப் பொறிக்கும் சுயநலமிகள் மிகுந்துவிட்ட இந்த உலகில், பெரும் செல்வக் களஞ்சியத்தைப் பாதுகாத்துள்ள ராஜா, அதற்கான எந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்தாமல், ''இது இறைபணி'' என்கிறார். இவரை உள்ளூர் மக்கள் தெய்வத்திற்கு சமமாகப் போற்றுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்ட அவசர உலகில், அதிகாரபலம் கோலோச்சும் பரிதாபமான சூழலில், சுயநலமே புத்திசாலித்தனமாகக் கருதப்படும் இழிவான காலகட்டத்தில், நமக்கு நன்னம்பிக்கை அளிப்பவராக ராஜா மார்த்தாண்ட வர்மா விளங்குகிறார். சும்மாவா ஔவைப் பாட்டி சொன்னார், '...நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'' என்று!
-குழலேந்தி
காண்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக