ஜெயப்பிரகாஷ் நாராயணன்
(பிறப்பு: 1902, அக். 11 - மறைவு: 1979, அக். 8)
|
ஜெயப்பிரகாஷ் நாராயண் பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை, சிற்றுண்டி சாலையில் பாத்திரங்களை கழுவி, அதன் வருவாயை வைத்து கல்வி கற்றவர்.
பிற்காலத்தில் தேசத்திற்கு சேவை செய்ய, பொது வாழ்வில் பிரவேசிப்பதற்கு, பிரகாசிப்பதற்கு அடித்தளம் அமைத்தது கல்வி மட்டுமல்ல அவருடைய உறுதியான அயரா உழைப்புமாகும்.
உழைத்து வாழ விரும்புவோருக்கு கடமை உணர்வுகளை போதித்து, அவர்களுக்கான உரிமைகள் உரிய முறைகளில் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் அமைப்பே தொழிற்சங்க இயக்கம்.
அதில், தன்னலமற்று சேவைகள் செய்து, சாதித்து முத்திரை பதிப்பவரே, தொழிற்சங்க தலைவராகவும், வழிகாட்டியாகவும் திகழும் தகுதியை பெறுகிறார்.
தொழிலாளர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். மனித நேயமும், மத நல்லிணக்கமும், ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர். இரயில்வே, அஞ்சல் துறைகளின் சம்மேளனங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் ஒருவரே.
இவர், அரசு நிர்வாகத்திற்கும், சம்மேளனங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சுமுகமாக தீர்வு கொள்ள, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கியவர்.
கருத்து வேற்றுமைகள் காரணமாக பிரிந்த சங்கங்களை, சம்மேளனத்துடன் இணைத்த பெருமை இவரையே சேரும். இவரால் இவர் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்ந்தன.
1946இல், அகில இந்திய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்த நாள்களுக்கான ஊதியத்தை தருவதாக அப்போதைய அமைச்சர் ரவி அகமது கித்வாய், சம்மேளன தலைவரான ஜெய்பிரகாஷ் நாராணன் அவர்களிடம் தெரிவித்ததை அமல் நடத்த கோரியபோது கித்வாய் பின் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்து எழுத்து மூலமாக அமைச்சரின் வாக்குறுதியை பெறாதது, தனது தவறு என்று மனம் நொந்து, புணேயில் 21 நாள்கள் உண்ணாநோன்பிருந்து, தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொண்டவர்.
அதேபோல், ரயில்வே ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி சீனிவாச வரதாச்சாரி தலைமையில் அமைக்கப்பட்ட முதல் ஊதிய குழுவின் பரிந்துரைகள் முறையாக செயல்படுத்தாமல், காலம் கடத்தப்பட்டதால் ரயில்வே குழுமத்தின் செயலாளருடன் பேசி, அமல் நடத்தச் செய்தவர்.
இரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஊதிய உயர்வு, விலைவாசிகளுக்கு ஏற்ப ஈட்டுத் தொகை, காலி பணி இடங்களை நிரப்புவது ஆகியவற்றை முன்வைத்து காலவரம்பற்ற வேலை நிறுத்தத்திற்கு சம்மேளனம் முடிவு எடுக்க பொதுக்குழுவை கூட்ட நாள் குறிப்பிட்டபோது, அப்போதைய சம்மேளனத்தின் மூத்த துணை தலைவர் ஜோதிபாசு தனது கட்சிக்காக போராடி, கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் இருந்தார்.
அவரது கருத்துகளை பொதுக்குழுவில் தெரிவிக்க வசதியாக ஜெயப்பிரகாஷ் நாராயணன், அன்றைய மேற்கு வங்க முதல்வர் டாக்டர் பி.சி. ராயுடன் தொடர்பு கொண்டு ஜோதிபாசுவை "பரோலில்' எடுத்து பொதுக்குழுவில் பங்கு பெறச் செய்தார். அவரது முயற்சியை கண்டு கம்யூனிஸ்டுகள் வியந்தனர்.
மூன்று சம்மேளனங்களுக்கும் தக்க தலைவர்களை தேர்ந்தெடுக்கச் செய்தபின் முற்றிலும் தொழிற்சங்க தொடர்பினை துண்டித்துக் கொண்டவர்.
சோஷலிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் முதல்வராக இருந்தும், சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையான ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்து கொண்டு நாடு முழுதும் மக்களை எழுச்சி பெறச் செய்த தீரர். அரசியல் வேறு, தொழிற்சங்கப் பணி வேறு என்ற கருத்துடையவர்.
‘நமது இலக்கு மட்டும் தூயதாக இருந்தால் போதாது, அதை அடையும் வழியும் தூய்மையாக இருத்தல் வேண்டும்' என்ற காந்திய நெறியில் வழுவாது வாழ்ந்தவர்.
1952இல் நடைபெற்ற முதல் தேர்தலுக்குப்பின், அரசியலில் போட்டி பொறாமை தலை தூக்கி வளர்வது கண்டு வருந்தி, கட்சி அரசியலில் இருந்து விலகி, முழுமையான சர்வோதயத் தொண்டரானார். அப்போது மூதறிஞர் ராஜாஜி ‘தாங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்காலத்தில் பிரகாசிக்கப் போகிறீர்கள், இந்த நாடு தங்களை விடாது' என்று எழுதினார்.
அஃதே போல் இருண்ட இந்தியா என்று கருதப்படும் 26.6.1975 முதல் 20.1.1977 வரையிலான நெருக்கடிநிலை காலகட்டத்தில் சர்வாதிகாரத்தை எதிர்த்து அதனை அடியோடு வேரும் வேரடி மண்ணுமெல்லாம் அகற்றி, தனி மனித சுதந்திரத்தை நிலைநாட்டிய பெருமை ஜே.பி. அவர்களின் உரிமை.
தொழிற்சங்க இயக்க வழிகாட்டியான ஜெயப்பிரகாஷ் நாராயண், 8.10.1979 அன்று தனது 77ஆவது வயதில் மறைந்தார்.
-
நன்றி: தினமணி (21.06.2014)
.
காண்க: ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக