சிந்தனைக்களம்
பொறுப்பான பதவிகளில் தகுதியானவர்கள் அமரும்போதுதான் அந்தப் பதவிக்குப் பெருமை. பதவியால் அலங்கரிக்கப்படுபவர்களைவிட, யாரால் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் மரியாதை. அரசியல் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தணிக்கை ஆணையர், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஆளுநர்கள் போன்ற எல்லாப் பதவிகளுமே சரியானவர்கள் பதவியில் இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கும் பெருமை, தேசத்துக்கும் பெருமை.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேசத்தின் மிக உயர்ந்த பதவி குடியரசுத் தலைவர் பதவிதான். அந்தப் பதவியை வகிப்பவர்தான் தேசத்தின் முதல் குடிமகன் எனும்போது சர்வதேச அளவில் நமது நாட்டு மக்களின் தராதரத்திற்கு உதாரணமாகக் குடியரசுத் தலைவரைத்தான் அடையாளமாகக் கருதுவார்கள்.
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், அந்தப் பதவியை அலங்கரித்த மாமனிதர்களையும், அந்தப் பதவிக்கே களங்கம் கற்பித்த தவறான தேர்வுகளையும், குடியரசுத் தலைவர் பதவியின் மகத்துவம் உயர்ந்து மரியாதைக்குரியதாக இருந்த காலகட்டத்தையும், தரம் தாழ்ந்து நம்மைத் தலைகுனிய வைத்த சம்பவங்களையும் மீள்பார்வை பார்க்க வைக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்வதற்கு 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதுமா என்றால் "ஆமாம்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியவில்லை. கையெழுத்துப் போடத் தெரிந்தவராக, அரசியல் சட்டம் தெரிந்தவராக, தேசப்பற்று மிக்கவராக, சமைக்கத் தெரிந்தவராக, ஆமாம் சாமி போடத் தெரிந்தவராக என்று வெவ்வேறு விதமான தகுதிகள் கொண்டவர்களாக வெவ்வேறு காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை அனுபவம்.
சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று குடியரசுத் தலைவர்களாகப் பதவியை அலங்கரித்த பாபு ராஜேந்திரப் பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹுசைன் ஆகிய மூவரும் 1950 முதல் 1969 வரை அவர்கள் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்களால் பதவி பெருமை பெற்றது என்பதுடன், இந்தியக் குடியரசு அவர்களை முதல் குடிமகன்களாகத் தேர்ந்தெடுத்ததில் பெருமிதம் அடைந்தது.
ஜாகீர் ஹுசைனின் அகால மரணத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவமும், அதை அலங்கரித்தவர்களின் தகுதியும் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அடுத்த 15 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் மாளிகையின் இருண்ட காலம் என்று சொன்னால்கூடத் தவறில்லை. தேசத்தின் முதல் குடிமகனுக்கான அடிப்படைத் தகுதியே பிரதமரின் விரலசைப்புக்குத் தலையாட்டுவது என்று சட்டத்திருத்தம் கொண்டு வராத குறையாக அந்தப் பதவி தரம் தாழ்த்தப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.
காங்கிரஸ் கட்சியில் 1969-இல் ஏற்பட்ட பிளவு, குடியரசுத் தலைவர் பதவி தரம் தாழ்ந்து போனதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனுவில் சஞ்சீவ ரெட்டியின் பெயரை முன்மொழிந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்தும் இட்டார்.
சஞ்சீவ ரெட்டியையும், தனது கட்சித் தலைமையையும் முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகத்தை இந்திரா காந்தி அரங்கேற்றியதுதான், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்தப்பட்ட முதல் அவமரியாதை. தனது அதிகார பலத்தையும், நயவஞ்சகத்தையும் முழுமையாகப் பயன்படுத்தித் தான் சார்ந்த கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகளின் சுயேச்சை வேட்பாளரான வி.வி. கிரியைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வைத்தார் அவர்.
இந்திரா காந்தி அனுப்பும் உத்தரவு எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடுவதுதான் குடியரசுத் தலைவர் பதவியின் முழுமுதற் கடமை என்று செயல்பட்டதால் பெருமைக்குரிய "ரப்பர் ஸ்டாம்ப்' குடியரசுத் தலைவர் என்கிற கேலிப் பெயருக்கு ஆளானதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்ட குடியரசுத் தலைவர் வி.வி. கிரி. வி.வி. கிரியும் சரி, அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த பக்ருதீன் அலி அகமதும் சரி, ஆளும் கட்சியின் கைப்பாவைகளாகவும், பிரதமர் அலுவலகம் அனுப்பும் அத்தனை உத்தரவுகளிலும் படித்துப் பார்க்காமல் கையொப்பமிடும் இயந்திரங்களாகவும் செயல்பட்ட அவலம் நிகழ்ந்தது.
ஜூன் 25, 1975! சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள் அது. அன்றுதான் இந்திரா காந்தி அரசால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாவம், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நள்ளிரவில் தட்டி எழுப்பப்பட்டார். அவர்முன் நீட்டப்பட்ட அவசரநிலைச் சட்டப் பிரகடனத்தில், எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் கையெழுத்திட்டுத் தனது இந்திரா விசுவாசத்தைப் பிரகடனப்படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தூங்கப் போனார்.
விடிந்தபோதுதான் இந்தியாவே இருண்டுவிட்டது வெளிப்பட்டது. செய்திகளே இல்லாமல் பத்திரிகைகள் வெளியாகின. விமர்சனத்துக்கு வழியே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியத் திருநாடே அவசரநிலைச் சட்டத்துக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகித் தவித்தது. கேள்வி எதுவும் கேட்காமல் அவசரநிலையைப் பிரகடனம் செய்த பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்திய களங்கத்தின் கறை காலத்தால் அழியக்கூடியதா என்ன?
1977-இல் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசு தோற்கடிக்கப்பட்டு, ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அவரால் பதவியின் இழந்த பெருமை மீட்கப்பட்டதா என்றால் இல்லை. 1982-ல் கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிற்று. மீண்டும் கிரி - அலி நாள்களுக்குத் தாழ்ந்தது குடியரசுத் தலைவர் பதவியின் மதிப்பும் மரியாதையும்!
இந்திரா காந்தியின் அகால மரணமும், ராஜீவ் காந்தியின் வெற்றியும் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் சற்றும் எதிர்பாராதவை. தான் மீண்டும் இன்னொரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்தவுடன் அரசியல்வாதியான கியானி ஜெயில் சிங் தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் கூடப் பொருள்படுத்தாமல் தரம் தாழ்ந்து அரசியல்வாதி போலச் செயல்படத் துணிந்தார்.
ராஜீவ் காந்தியைப் பதவி நீக்கம் செய்து இன்னொரு ஆட்சியைப் பதவியில் அமர்த்தினால் என்ன என்பது வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபடி சதித்திட்டம் தீட்டத் தொடங்கிய ஜெயில் சிங் மறந்துவிட்ட ஒரு எதார்த்த உண்மை என்ன தெரியுமா? ராஜீவ் காந்தி அரசுக்கு அன்றைய மக்களவையில் ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது என்பதுதான்.
தரம் தாழ்ந்தவர்களைத் தகுதிக்கு மீறிய பெரிய பதவிகளில் தராதரம் தெரியாமல் அமர்த்துவதால் வரும் சோதனைகள் இவை. ஜெயில் சிங்கின் சிறுபிள்ளைத்தனமான (சில்லறைத்தனமான) செய்கைகளை நமது பத்திரிகைகள் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் போக்கு என்று வர்ணித்ததுதான் அதைவிட விசித்திரம்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனது இழந்த மரியாதையையும், பெருமையையும் மீண்டும் பெற்றது ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகவும் இக்கட்டான, பிரச்னைக்குரிய காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான், கூட்டணி அரசுகள் அமையும்போது குடியரசுத் தலைவராக இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் நெறிமுறைகளாக நிலை பெற்றன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படிப்பட்ட நிலைப்பாடைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்ததால்தான், "விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலைவர்' (ரூல்புக் பிரசிடென்ட்) என்று ஆர். வெங்கட்ராமன் சரித்திரத்தில் இடம் பெற்றார். 1989-இல் தனிப்பெரும்பான்மை இல்லாத ஆனால், தனிப்பெரும் கட்சியாக 9 } வது மக்களவையில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது, கூட்டணி அமையுமானால் அதை எப்படி அனுமதிப்பது போன்ற சிக்கலான அரசியல் சட்டப் பிரச்னைகளுக்குத் தேர்ந்த முடிவுகளை எடுத்து, வரைமுறைகளை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திய வரலாற்றுப் பெருமை அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனையே சாரும்.
ஆர். வெங்கட்ராமனைத் தொடர்ந்து சங்கர் தயாள் சர்மாவும், ஆர்.கே. நாராயணனும் அந்த உயர்ந்த பதவியின் மரியாதையைக் காப்பாற்றியதுடன் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர்களாகத் தங்களது செயல்பாடுகளால் மதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அரசியல் தொடர்புள்ளவர்களே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு மாற்றப்பட்டது அ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். குடியரசுத் தலைவர் பதவிக்கு அதுவரை இல்லாத மதிப்பும், மரியாதையும், மக்கள் செல்வாக்கும் ஏற்பட்டதும் அவரது பதவிக்காலத்தில்தான்!
அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதே ஒரு வித்தியாசமான அனுபவம். தான் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதே கூட அப்துல் கலாமுக்குத் தெரியாது. அன்றைய பிரதமர் வாஜ்பாயி, "எங்கே இருக்கிறார் அப்துல் கலாம்?' என்று விசாரிக்கச் சொன்னபோது, அவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிளஸ் டூ மாணவ - மாணவியருடன் உரையாடிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைப் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது.
தகைசால் சான்றோர் பட்டம், பதவிக்காக விண்ணப்பிப்பது வழக்கமல்ல என்பது அப்துல் கலாம் விஷயத்தில் நிரூபணமாகியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும்படி பாபு ராஜேந்திரப் பிரசாதை எல்லோரும் வற்புறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியை, வல்லபபாய் பட்டேலின் மறைவுக்குப் பிறகு காணப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சராகவும், 1952-இல் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. காமராஜின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொள்ளச் செய்ய வற்புறுத்த வேண்டி வந்தது.
வேறு சிலர் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வந்தும், சற்றும் பொருள்படுத்தாமல் தாங்கள் கொண்ட கொள்கையிலும், செயல்திட்டங்களிலும் தொடர்ந்து நடை போட்டனர். உதாரணமாக, சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராக இருக்கும்படி பண்டித ஜவாஹர்லால் நேருவே வற்புறுத்தியும் அதை நிராகரித்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். முதலிலேயே குறிப்பிட்டதுபோல, பதவிகள் அந்தப் பதவிகளை அலங்கரிப்பவர்களால்தான் பெருமை அடைகின்றன. தகுதியற்றவர்கள் மரியாதைக்குரிய பதவிகளில் அமர்த்தப்படும்போது மதிக்கப்படுவதில்லை, சகிக்கப்படுகிறார்கள், அவ்வளவே!
1987-இல் மீட்டெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-இல் மீண்டும் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. பிரதிபா தேவிசிங் பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கு அவருக்கு இருந்த தகுதிதான் என்ன? விடை தெரியாமல் புதிராக இருந்த இந்தக் கேள்விகளுக்கு ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோது விடையளித்தார்.
""நமது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் நேரு குடும்பத்துக்கு ஆற்றிய சேவைக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி. நேரு குடும்பத்தில் சமைப்பது, வரும் பார்வையாளர்களுக்கு டீ, காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது என்று கெüரவம் பார்க்காமல் சேவை செய்திருக்கிறார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், நாம் அப்படியெல்லாம் நேரு குடும்பத்துக்குக் காட்டும் நன்றி விசுவாசத்திற்குப் பலனில்லாமல் போகாது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்'' என்று ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டார் அவர்.
பத்துப் பாத்திரம் தேய்த்த நன்றி விசுவாசத்துக்குக் கொடுக்கப்பட்ட பதவிக்கு, காங்கிரஸ் கட்சி மக்கள் மன்றத்தில் தந்த விளக்கமே வேறு. முதன் முறையாக ஒரு பெண்மணியைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று காரணம் கூறினார்களே, பிரதிபா பாட்டீலைவிடத் தகுதியான பெண்மணிகள் யாருமே காங்கிரஸ் கட்சியில் இல்லையா, இல்லை சோனியா காந்தியின் கண்களில் தட்டுப்படவில்லையா? ஒருவேளை, அவரைத் தவிர வேறு யாரும் நேரு குடும்பத்துச் சமையல் அறையில் வேலை செய்யவோ, பத்துப் பாத்திரம் தேய்த்துத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தவோ முயற்சிக்கவில்லையோ என்னவோ...
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பை 2007 போலவே மீண்டும் சோனியா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் தேர்வு என்று சொன்னால், அது நிச்சயமாக அப்துல் கலாம் போன்ற தகுதியும் தரமும் வாய்ந்த, பதவிக்குப் பெருமை சேர்க்கும் ஒருவராக இருக்க வழியில்லை. நேரு குடும்பத்திற்குச் சேவகம் செய்யும், பத்துப் பாத்திரம் தேய்க்கும், வீட்டைப் பெருக்கி மெழுகும், தோட்டத்தைப் பராமரிக்க உதவும் இத்தியாதி இத்தியாதி சேவகம் செய்யும் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.
இப்போதைக்கு பிரணாப் முகர்ஜி, மீராகுமார், பி.ஏ. சங்மா, ஹமீத் அன்சாரி போன்றவர்களின் பெயர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். அவரது எண்ணம் புரிந்து கொள்ளக் கூடியதும்தான்.
இன்றைய மத்திய அமைச்சரவையிலேயே அதிகமான பணிச்சுமையைத் தாங்குபவர் பிரணாப்தான். வயதுக்கு மீறிய வேலைப்பளுவால் துவண்டு போயிருக்கிறார் மனிதர். இரண்டாவதாக, தன்னை ஒருகாலமும் பிரதமராக்க சோனியா காந்தி சம்மதிக்க மாட்டார் என்று அவருக்குத் தெரியும். மூன்றாவதாக, இன்றைக்கு இருக்கும் நிதிநிலைமையில், இருபது ஆண்டு கால தாராளமயமாக்கலின் தாக்கத்தால் தளர்ந்தும் துவண்டும்போய்த் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் தன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது கூடவா அவருக்குத் தெரியாது.
இதிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தஞ்சம் அடைந்துவிடப் பிரணாப் முகர்ஜி நினைப்பதில் தவறில்லை. ஆனால், சோனியா காந்தி அதற்கு அனுமதிப்பாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற உண்மையை உரக்கச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார் சங்மா. அதனால் அவரைக் குடியரசுத் தலைவராக்க சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
சரி, மீரா குமார்? வேறு ஏதாவது வீட்டு வேலை நன்றாகச் செய்யும் ஊழியர்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
-எஸ்.குருமூர்த்தி
நன்றி: தினமணி (09.06.2012)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக