நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

6.10.11

துவைதம் கண்ட மகான்

ஸ்ரீ மத்வர்
மத்வ ஜெயந்தி
(விஜயதசமி,  புரட்டாசி 19)

இயந்திரமயமான இவ்வுலகில் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பொருளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக எங்கும் துன்பமயமாகவும்,  போராட்டமாகவும் வாழ்க்கைச் சூழல் அமைந்திருப்பதை உணராமல் இருக்கிறோம்.
பாரதநாடு உலகினுக்கு மனிதத்தை,  தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் பாரத நாட்டில் இருந்து கொண்டு எளிமையாக உணர வேண்டியதை, மேலைநாட்டு மோகத்தால், பணம் சம்பாதிக்கும் பேராசையால் உணராமல் இருக்கிறோம்.
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு தத்துவ விளக்கங்களை அளித்துள்ளனர். அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள். ஆதிசங்கரர் – அத்வைதம், ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,  மத்துவர் - துவைதம். 
பாரதநாட்டின் அரிய பொக்கிஷங்களாக விளங்குபவை வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவாகும். அவற்றுக்கான விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர்.
ஆச்சாரியர் மத்துவரின் காலம் பொது யுகத்துக்குப் பின்  (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள  பாஜகஎனும் மலைசூழ் சிற்றூரில், தந்தை மத்யகேஹ பட்டர்தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் உண்டு. இவருடைய தம்பி பின்னாளில் ஸ்ரீ மத்வரால் சந்யாச தீட்சை கொடுக்கப்பட்டு விஷ்ணு தீர்த்தராக மாற்றம் கண்டவர்.
தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன்என்பதாகும். சந்யாசம் கிடைத்தபோது வைத்த பெயர் பூர்ணப்நர். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்டபோது பெற்ற பெயர் ஆனந்த தீர்த்தர்’. இது தவிர, ‘மத்வ’ , தஸப்ரமதிபோன்ற பெயர்களை வேத மந்திரங்களில் இவரைக் குறிக்கின்றன. ஸ்ரீமத் விஜயம் எனும் காவியத்தில் நாராயண பண்டிதர் இவரை நூற்றுக் கணக்கான பொருள் பொதிந்த பெயர்களால் கவிநயத்துடன் குறிப்பிடுகிறார்.
ஒரு சமயம் உடுப்பிக்கு அருகில்  கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி ஆபத்துக்குள்ளானது. கடற்கரையில் நின்று கொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியைக் காற்றில் வீசிக் காட்டினார் கப்பல் ஆபத்திலிருந்து மீண்டு கரைவந்து சேர்ந்தது.
கப்பலின் தலைவர் அவரை வணங்கி நின்றார். தன்னிடமிருந்து ஒரு பரிசு பொருளை வாங்கி கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையைவிட்டு சாலிக்கிராமத்தைத் தானே தூக்கிக் கொண்டுசென்றார். அதுதான் இன்றும் உடுப்பிக்   கோயிலில் மூலவிக்ரகமாக உள்ளது.
அவ்விக்ரகம் குறித்த அற்புதமான செய்தியையும் அவர் வெளியிட்டார். விசுவகர்மா என்ற தேவச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபராயுகத்தில் ஸ்ரீ ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த விக்கிரகம்,  துவாரகை மூழ்கியபோது அதுவும் மூழ்கிவிட்டது. அவ்விக்கிரகம் தான் மத்துவரால் வெளிக்கொண்டு வரப்பட்டது.
ஒரு நாள் மத்துவர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்ததாம். மலர்க்  குவியலை விலக்கிப் பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றமல்ல. உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்த வகையிலும் மானுடனின் தர்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் செய்லமுறையே சான்றாகும்'' - இதுவே மத்வரின் வாதம்.
 
-ராஜேஸ்வரி ஜெயகுமார் 
 
காண்க:
 
 
 
 
 
 
 
 
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக