நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.10.14

காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'!

-லா.சு.ரங்கராஜன்

“எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.

 - இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.


 “காந்திஜியின் ஜன்ம தினத்தை சம்பளத்தோடு கூடிய விடுமுறை நாளாக பிகார் மாகாண காங்கிரஸ் அரசு அறிவித்திருப்பது தகுமா?” என்று பிகார் இளைஞன் ஒருவன் கேட்டெழுதிய கடிதத்திற்குத் தமது பதிலாக காந்திஜி மேற்சொன்ன தமது பதிலைப் பிரசுரித்திருந்தார்.

தேசப்பிதாவின் அறிவுரையை 76 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றி, சென்ற அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாளாயொட்டி, நாடு தழுவிய  ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) திட்டத்தை அறிவித்துள்ளார்.

தில்லி வால்மீகி சதன் வளாகத்தில் அவரே கையில் துடைப்பம் ஏந்தித் துப்புரவுப் பணியைத் துவக்கினார்.  “இது இன்றைய தினத்தோடு முடிந்துவிட்ட சமாசாரம் அல்ல. நாட்டு மக்களனைவருமே கட்சி பேதமின்றி ஆண்டுக்கு நூறு நாள்கள், வாரம் இரண்டு மணி நேரம் தன்னார்வத்துடன் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 “2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் காந்திஜியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பூரண பரிசுத்த பாரதத்தை இந்திய மக்கள் மகாத்மா காந்திக்குக் காணிக்கையாக அர்ப்பணிப்பார்கள்” எனும் மோடியின் அறைகூவலை நிறைவேற்ற வேண்டியது இந்திய மக்கள் அனைவரது கடமையாகும்.

 ‘சுத்தம் சுகம் தரும்' என்கிற எளிய தமிழ்ப் பழமொழிக்கேற்ப, சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துதல் பற்றி அண்ணல் காந்தி பல தருணங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

பிப்ரவரி 11, 1938 அன்று ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டு வளாகத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ள வந்த தொண்டர்களின் கூட்டம் நடைபெற்றது.

மாநாட்டுப் பந்தல் வெளியையும், பிரதிநிதிகள் தங்கியிருந்த இடங்களையும், கழிப்பறைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்வதற்காக ஜகஜீவன் ராம் தலைமையில் இயங்கிய 1,200 நபர்கள் கொண்ட தொண்டர் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், அவர்களது பணியின் உயர்வை சிலாகித்து உரையாற்றினார். அதில் சில பகுதிகள்:

 “பங்கிகளின் (தோட்டிகளின்) வேலை இழிவானது என்ற எண்ணம் நிலவுவது வருந்தத்தக்கது. நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது தாய்மார்கள் நம்மைக் குளிப்பாட்டி, மலஜலங்களைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தார்கள்.

அதனால் அன்னையின் பணியை இளப்பமாகக் கருதுகிறோமா? அதேபோன்றுதான் பங்கிகளின் பணியும். நீங்கள் இன்று தோட்டி வேலை புரியத் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானே ஒரு கைதேர்ந்த பங்கி.

சென்ற 35 ஆண்டு காலமாக நான் துப்புரவுப் பணியை என் ஆசிரமங்களில் நேரிய மனப்பான்மையுடன் மேற்கொண்டு வந்துள்ளேன். அதில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறேன்.

என்னைப் பொருத்த வரை, ராட்டையில் நூல் நூற்பது, கிராமியத் தொழில்களை ஊக்குவிப்பது, தெருப் பெருக்குவது, சுகாதார விஸ்தரிப்பு ஆகிய தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதே போதுமானது.

கடவுள் என்னை இப்பூவுலகில் வாழ்ந்துவர அனுமதிக்கும் வரையில், நான் இப்பொது சுகாதாரப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு ஒரு குக்கிராமத்தில் இருந்து வர நிச்சயித்துள்ளேன்.”

தனது உரையை இவ்வாறு முடிக்கிறார்.  “தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். பங்கி வேலையில் ஈடுபடுவோர் முதலாவதாக அவரவரது பங்கிகளாக இருத்தல் அவசியம்.”

1945-ஆம் ஆண்டு காந்திஜி பதினெட்டு அம்சங்கள் கொண்ட நிர்மாணத் திட்டமொன்றைத் தீட்டி வெளியிட்டார். வகுப்பு ஒற்றுமை, தீண்டாமையை அகற்றுதல், மதுவிலக்கு, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி போன்ற சமூக மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான அம்சங்கள் அத்திட்டத்தில் அடக்கம்.

அவற்றுள் கிராம சுகாதாரம், உடல் நலம் பற்றிய கல்விப் பயிற்சி ஆகிய இரு அம்சங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. கிராமியச் சுற்றுச்சூழலைத் துப்புரவாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை அதில் காந்திஜி வலியுறுத்தியுள்ளார். காந்திஜி எழுதிய வாசகத்தின் மொழி பெயர்ப்பு இதோ:

 “கிராமப்புறங்களில் அழகழகான குடியிருப்புகளுக்கு பதிலாக சாணக்குவியல்களையும் குப்பை மேடுகளையும்தான் இன்று காண்கிறோம். கிராமங்களுக்குச் செல்லும் அனுபவம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இல்லை.

ஒருவர் அடிக்கடி கண்களை மூடி முக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்குச் சுற்றிலும் தூசியும் துர்நாற்றமும் பரவியிருக்கும். காலைக் கடன்களை கண்ட கண்ட இடங்களில் கழிப்பதால் கிணறு, குளம், குட்டை, ஆற்றங்கரைகள் அசுத்தமாவதைப் பற்றிக் கிராமவாசிகள் கவலை கொள்வதில்லை.

இதன் விளைவாக நமது கிராமங்களும், புனித குளங்கள் மற்றும் ஆற்றோரங்களும் வெட்கக் கேடான நிலையையடைந்துள்ளன. தொற்று நோய்கள் பரவுகின்றன. இத்துர்ப்பழக்கங்கள் பெருத்த அநியாயம் என்றே நான் கருதுகிறேன்...”

'Mens sana in corpore sano' என்பது ஒருவேளை மானுடத்தின் முதல் சட்டமாக இருக்கக்கூடும். அதாவது,  “ஆரோக்கிய சூழலும், மனமும் படைத்தவரின் உடலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்” என்ற பொருள் கொண்ட இந்த லத்தீன் மொழி வாசகம் விளக்கம் தேவையற்ற நித்திய உண்மையல்லவா?

புனிதமான கங்கை நதி மாசுபடுவதை 1929-ஆம் ஆண்டு வாக்கிலேயே கண்ணுற்ற மகாத்மா காந்தி மனம் வருந்தி பின்வருமாறு தமது வேதனையைக் கொட்டித் தீர்த்துள்ளார்:

 “நீர் நிலைகள், ஆற்றங்கரைகள், சாலைகள் மற்றும் பொது இடங்கள் எவற்றிலும் எவ்விதமாகவும் மாசுபடுத்தலாகாது என அனைத்து மதங்களும் போதிக்கின்றன.

மேற்சொன்ன இடங்களில் மலஜலம் கழிப்பதும் மாசு உண்டாக்குவதும் மானிட வர்க்கத்திற்கு விரோதமான குற்றச் செயல் என உடல் நல வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆனால், மதத்தின் பெயராலும்கூட கங்கை நதி அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஹரித்துவாரில் வழக்கப்படி சடங்கு புரிய நான் அந்நதிக்கரைக்கு இட்டுச் செல்லப்பட்டேன்.

சடங்கின்போது, மலர்கள், நூல், தயிர், சாயம் தோய்ந்த அரிசி, கஞ்சி போன்றவை நதியில் வீசப்படுகின்றன. அதே நதியின் நீரைத் தான் லட்சோப லட்சம் மக்கள் புனிதத் தீர்த்தமாக நம்பி அருந்துகிறார்கள்.

இவற்றைக் காட்டிலும் மோசமாக, ஊர்ச் சாக்கடைக் கழிவுநீரை பெருங்குழாய்கள் மூலம் அந்நதியில் வெளியேற்றுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். இது மகத்தான அக்கிரமம்.”

காதி பிரசாரத்திற்காக 1927-இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்திஜி, அவ்வாண்டு அக்டோபர் 2-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் பேசுகையில்,

“உள்ளூர்வாசி ஒருவர் அவருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அவர்களது தாமிரவருணி ஆற்று நீரை ஊர் மக்கள் அசுத்தப்படுத்தி வருவதாக அக்கடிதத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி முனிசிபாலிடியும் இன்று எனக்கு வரவேற்பு அளிக்கும் அமைப்புகளில் ஒன்று என்று அறிகிறேன்.

அப்படியானால் உங்கள் முனிசிபல் கவுன்சிலர்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். காலை முதல் மாலை வரை ஆற்றங்கரையில் போடப்படும் குப்பை கூளங்களையும் கழிவுப் பொருள்களையும் உடனுக்குடன் அகற்றிச் சுத்தம் செய்து, குப்பை சேராமல் இருப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்பதே அவர்களுக்கு எனது வேண்டுகோள்”

- இவ்வாறு தமது உரையை முடித்தார் அண்ணல் காந்தி.

காந்தியைப் பொருத்த வரை, புறத்தூய்மை மட்டும் போதாது, அகத்தூய்மையும் அத்தியாவசியமானது. இதனைத் தொடக்க காலத்திலிருந்தே அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். அரசியலிலும் தூய்மை நிலவவேண்டும் என்பதும் அண்ணல் காந்தியின் லட்சியங்களில் ஒன்றாகும்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே பாரிஸ்டர் காந்தி தமது அரசியல் ஆசானாக வரித்த கோபாலகிருஷ்ண கோகலேயின் “அரசியலை ஆன்மிக மயமாக்குதல்”  (Spritualising Politics) என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டார்.  அரசியலில் ஆன்மிகம் இழைந்தால் ஆட்சியில் தூய்மை துலங்கும் என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பாக இருந்தது.

நன்றி: தினமணி (16.10.2014)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக