நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.10.14

அரசே சாராயம் விற்கலாமா?

  • கேட்கிறார் ராஜாஜி 

     

     

முந்தைய சென்னை ராஜதானி மாகாணத்தின் சட்டசபையில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி பிரதமராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்,  அந்த அரசு ஆட்சியிலிருந்து விலகியது. தொடர்ந்து 1944  ஜனவரி முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.


 ‘சட்டத்திற்கு விரோதமாக கள்ளச்சாராயம் வடிக்கும் குற்றங்கள் அதிகமாகிக வருவதாலும், நாட்டிலுள்ள நாணயப் பெருக்கத்தையும் விலைவாசி உயர்வையும் தடுக்க,  கள் வரியைக் கொண்டு ஜனங்களுக்கு நன்மை செய்யக்கூடும் என்பதாலும், மதுவிலக்கை ரத்து செய்வதாக’ பிரிட்டிஷ் அரசு அப்போது அறிவித்தது.

மதுவிலக்கை ரத்து செய்வதற்கு அரசுத் தரப்பு கூறிய காரணங்களை மறுதலித்த ராஜாஜி எழுதிய கட்டுரைகள்  ‘மதுவிலக்கு (கள் ஒழிக)' என்கிற தலைப்பில் கமலா பிரசுரத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது.
மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், அரசுத் தரப்பின் மதுக்கொள்கையை விமர்சித்தும் ராஜாஜி அந்த நூலில் முன்வைக்கும் ஆணித்தரமான வாதங்கள்,  இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன.

மதுபானங்கள் பற்றிய எல்லா விவரங்களையும் ராஜாஜி துல்லியமாகப் பட்டியலிடுவதுடன், மருத்துவ ரீதியாக அதனால் ஏற்படும் தீமைகளையும், பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகளையும், சமுக ரீதியாக ஏற்படக்கூடிய சீரழிவுகளையும் தர்க்கரீதியாக இந்நூலில் விவாதித்திருக்கிறார்.

"சர்க்கார் தாமே கலால் வியாபாரம் நடத்தியும், மேற்பார்வை பார்த்தும் வந்தாலும்கூட, சட்ட விரோதமாக ரகசியமாய் மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் இருக்கின்றனர். அவர்களோடு சர்க்காருக்கு எப்போதும் போட்டி. திருட்டு வியாபாரத்தோடு எப்போதும் போட்டியாகவே சர்க்கார் திட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டுபோக வேண்டும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகப் போடப்பட்ட திட்டம், கடைசியில் சாதாரண வியாபார முறையில் நடத்த வேண்டியதாகிறது...

சர்க்கார் எடுத்துக் கொண்டிருக்கும் வேலை, இவ்வாறு மிகவும் கஷ்டமாகிறது. இதற்காக ஒரு பெரிய சிப்பந்திக் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாகாணம் முழுவதும் நடக்கும் மதுபான வியாபாரத்தின் தலைமையை சர்க்கார் வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மிகவும் திறமையான அதிகாரிகளை நியமித்து அவர்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதர்மமான ஒரு வியாபாரத்தை ஒழித்துவிடாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தால் இவ்வாறு தான் முடியும்...

"மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?' என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால்,  ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் விருத்தியாகும் (அதிகரிக்கும்) குற்றங்களும் குறையும்.

சமுதாயத்திற்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை நடக்கச் செய்து அதில் ஒரு பங்கை சமுதாயம் மறுபடி பெறுவதைக் காட்டிலும் வேறு வரிகள் போட்டுக்கொண்டு அரசாங்க நிர்வாகம் நடத்துவது மேன்மையான வழி. ஏழைக் குடும்பங்களைக் கெடுக்கும் ஒரு வியாபாரத்தை அரசாங்கமே நடத்தி, மற்றவர்கள் அதிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு சுகம் பெறுவது தருமமல்ல, ராஜ நீதியுமல்ல!”

-என்கிறார் ராஜாஜி.

ஆணித்தரமான வாதங்கள்,  எளிமையான நடையில் விளக்கங்கள். மூதறிஞர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கிறார் ராஜாஜி. இன்றைய ஆட்சியாளர்களும்,  அரசியல் தலைவர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்  இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக