நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.2.11

எகிப்து மக்கள் புகட்டும் பாடம்

எகிப்து மக்களின் ஜனநாயக போராட்டம்
       
       "மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பின் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த 99 சதவீத மக்கள் அரசியல்வாதிகளை விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது....
      இது மிகவும் அபாயகரமான எண்ணம்.  அரசியல்வாதிகள் இல்லையெனில் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நேர்மையான தேர்தலை நடத்த பரிந்துரை செய்யப்பட்ட பல்வேறு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பை மீறி 100 மடங்கு அதிகமாக செலவிடுகின்றனர்''
     - இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார், நமது தேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.எம்.குரேஷி.
.
       தேர்தலோ,  ஜனநாயகமோ நம் தேசத்திற்கு புதிதான விஷயமல்ல. தமிழ்நாட்டில் உள்ள உத்தரமேரூரில் கிடைத்த பழைய ஓலைச்சுவடிகளில் 1,000 வருடங்களுக்கு முன்பேயிருந்த சோழர்கால குடஓலை முறையில் தனது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதைக் காணமுடிகிறது.
        அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசுப் பணியில் இருப்பவர்களாகவோ,  அல்லது அரசு ஊழியர்களின் உறவினர்களாகவோ, குற்றப் பின்னணி  இல்லாதவர்களாகவோ இருக்க வேண்டும்;  வரிகள் கட்டாதவர்களாக இருந்தால் தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்பட்டனர்.     
.
       நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் சரி, ஆளப்படுகின்ற மக்களும் சரி கடமையுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் இருந்தால்தான் அவர்கள் வாழும் தேசம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.
        "விளைநிலம் எவ்வாறோ,  விளைச்சல்  அவ்வாறே"
         "அவரையை விதைத்து விட்டு துவரையை  எதிர்பார்க்க முடியுமா" என்னும் பழமொழி இதைத்தான் வலியுறுத்துகிறது.
.
         தேசம் என்பது வெறும் நிலப்பரப்பல்ல;  நதிகளும், மலைகளும், மண்ணும் மட்டும் ஒரு நாட்டை உருவாக்க முடியாது.அதில் வாழும் மக்களின் ஒருங்கிணைந்த உணர்வே ஒரு தேசத்தை வலிமையுடையதாக,  வளமானதாகவே மாற்ற முடியும்.  
         அதுவும் ஜனநாயகத்தை உலகில் உயரப் பிடிக்கும் முதல் நாடான நமக்கு இந்த தேசிய உணர்வு அவசியம்.
          தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமும்,  விலைக்கு வாங்கப்பட முடியாத லட்சிய உறுதியும் உள்ள மக்களே - தலைவர்களை உருவாக்க வேண்டிய தருணம் இது.
.
         மக்களுக்காக, மக்களால்,  மக்களே நடத்தப்படும் ஜனநாயக ஆட்சியில் சவால்களும், சோதனைகளும் வரத்தான் செய்யும். அந்த அறைகூவலை சந்திக்க நல்ல தலைவர்களை,  தொண்டர்களை உருவாக்கும் சக்தி அரசியலுக்கோ, அரசாங்கத்திற்கோ கிடையாது.
         நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,  நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளையும் கொண்ட  தேசபக்தர்களை உருவாக்கும் சக்தி,  ஆற்றல் கொண்டவை -  நம் நாட்டின்  சின்னங்களான குடும்பங்களும்,  பாரம்பரியமிக்க அமைப்புகளும்,  தன்னார்வுத் தொண்டு அமைப்புகளும் தான்.
.
        பணம், சலுகைகள், பரிசுகள் பெற்றுக்கொண்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் மக்கள் அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், ஆதிக்கத்துக்கும்  அங்கீகாரம் அளிக்கிறார்கள்.
       ஊழல் அரசியல்வாதிகளுக்கும்,  உயர்ந்த லட்சியவாதிகளுக்கும்   வேறுபாடுகளை கண்டுபிடிக்க நாம் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.
.
       போராடியும்,  தியாகம் செய்தும் பெற்ற சுதந்திரத்தைக்  காப்பாற்ற, போராடவும் வேண்டும்; தியாகம் செய்யவும் வேண்டும். அப்பொழுது தான் 'வாராது வந்த மாமணியான'  சுதந்திரத்தின் அருமையை உணரமுடியும்.
.
       30 ஆண்டுகளுக்கு மேலே நாட்டை ஆண்ட சர்வாதிகாரி முபாரக்கை எகிப்திய மக்கள் 18 நாட்கள் தொடர்ந்து மைதானத்தில் கூடி போராடியதும்,  வெற்றிபெற்றதும் ஜனநாயகத்தின் ஆணிவேர் மக்களின் ஒருங்கிணைந்த சக்தியே என்ற உண்மையை உலகத்துக்கு பறைசாற்றியது.
.
        மீண்டும் நமது தேர்தல் ஆணையர் குரேஷி அவர்களின் கருத்தினையே சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன்:   "மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்க முடியும்".   
.
-ம.கொ.சி.ராஜேந்திரன்
.

1 கருத்து:

சுதர்ஷன் சொன்னது…

//மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்க முடியும்//
நல்ல அலசல் ., இதை எப்படி ஏற்ப்படுத்துவது என்பது தான் பிரச்சனை

கருத்துரையிடுக