நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.2.11

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை


புதுவை ஸ்ரீ அன்னை
பிறப்பு: பிப். 21
கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்
- இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும்.
கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். வளர வளர இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டவர், பின் பாண்டிச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார்.
1878, பிப்ரவரி, 21 ம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது.
அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெளியேறுவார். வீடு, தெரு, நகரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து மேகக் கூட்டங்களினிடையே காட்சி அளிப்பார். பொன்னொளி வீசிக் கொண்டிருக்கும் அவர் உடலை, ஒளீவீசக் கூடிய ஒரு நீண்ட பட்டாடை தழுவிக் கொண்டிருக்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துன்பமுற்றவர்களும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழியால் அவர்களைப் பார்ப்பார் மிரா. ஒளீவீசும் அவருடைய பட்டாடையைத் தொட்டவுடன் சிலருக்குப் பிணி தீரும். சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்வர்.
தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இக்கனவு அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிர்ரா அன்னையாக உயர்ந்த போது, அவர் அளித்த பால்கனி தரிசனத்திற்கு முன்மாதிரியாய் இக்கனவு அமைந்திருந்தது.
பிரான்சில் அன்னை வசித்த போது அவரது கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்களும் தோன்றி பல உண்மைகளை அவருக்கு போதித்தனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடனும் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர், இந்தியத் தத்துவங்கள் பற்றியும், வேத உபநிஷத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அன்னை அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டார்.
பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த போது, அவரே தனக்கு கனவில் வந்து பல உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரே தனது குரு என்பதையும் கண்டு கொண்டார். அவரையே முழுமையாகச் சரணடைந்தார். தனது ஆன்ம ஆற்றலால் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை ஒரு முன் மாதிரி ஆசிரமாக உருவாக்கினார். இந்தியாவின் யோக ஞான மரபு செழுமையுற உழைத்தார்.
ஒரு முறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரவிந்தரால் ‘ஸ்ரீ அன்னை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் அன்னையும் தங்களுடன் தற்போது இருக்கும் அன்னையும் ஒருவர் தானா என்று. தங்களின் சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டனர். அதற்கு ஸ்ரீ அரவிந்தர் ’சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்’ என்று விடையளித்தார்.
பராசக்தியின் அம்சமான அன்னை சாதகர்களை பல விதங்களில் ஊக்குவித்தார். எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ’Never look at the Future with the Eyes of Fears’ என்றும் Let not the talk of the vulgar make any impression to you என்றும் பலவாறாக அவர் போதித்த தத்துவங்கள் எண்ணற்றவை. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரர்களாக ஒருமித்த உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ‘ஆரோவில்’ நகரை நிர்மாணித்தார். இன்று அது ஒரு சர்வ தேச நகரமாகத் திகழ்கிறது.
ஸ்ரீ அன்னையால் பல்வேறு அற்புதங்களும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன.
ஒரு நாள் புதுவையில் பலத்த புயல் வீசியது. பல மரங்கள், வேரோடு சாய்ந்தன. கடல் பொங்கி உள்ளே வந்து ஆசிரமம் உட்பட பலவற்றை அழிக்கும் சூழல் உருவாகியது. மக்கள் உட்பட பலரும் செய்வதறியாது திகைத்தனர். என்ன செய்வதெனப் புரியாமல் ஸ்ரீ அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டனர். அன்னையும் அவர்கள் வேண்டுகோளுக்கு மனமிரங்கினார். தியானத்தில் ஆழ்ந்தார். சூட்சும உருவில் சென்று கடல் தேவதையின் முன் நின்றார். ஆசிரமம் பற்றியும் சாதகர்கள் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அப்பாவிகளை அழிப்பதால் நேரும் துன்பத்தைப் பற்றியும் தேவதைக்கு எடுத்துச் சொன்னார். பெரிய பெரிய கற்களைக் கொண்டு வரச் செய்து, அவற்றை கரையோரத்தில் போடச் செய்தார். அதைத் தாண்டி நகருக்குள்ளே வரக் கூடாது என்று கடல் தேவதைக்குக் கட்டளையிட்டார். அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட கடல் பின் வாங்கியது. அது முதல் அது, கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனது எல்லையைத் தாண்டி நகருக்குள் வருவதில்லை.
ஒரு முறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்து சாதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே அவர் தனது கண்களைத் திறந்தார். சாதகர்கள் காரணத்தை வினவிய பொழுது, தான் கிரீஸ் நாட்டிற்குச் சென்று விட்டு வந்ததாகவும், பல பக்தர்கள் மானசீகமாக தன் உதவி வேண்டி அழைத்ததால், சூட்சும உருவில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகவும் அன்னை குறிப்பிட்டார்.
ஆம், அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே சாதகர்களிடம் இது குறித்து, ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஸ்ரீ அன்னை குறிப்பிட்டுள்ள மலர்களை வைத்து வணங்கும் பொழுது அவரது ஆற்றல் அங்கே பலவாறாகப் பெருகுகிறது. அன்னையின் அருளைப் பெறத் தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.
ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் சில:
1. மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.
2.’பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி
3. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்
4. நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!
5. ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.
6. இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.
அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்!
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி; ஓம் ஸ்ரீ சைதன்ய மயி; ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!
–பி.எஸ்.ரமணன்
காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக