நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.3.11

ஆன்மிகம் வளர்த்த கவியோகிசுத்தானந்த பாரதி 

நினைவு: மார்ச் 7

சிவகங்கையில்  காமாக்ஷி அம்மையாருக்கும், சிவிகுல ஜடாதர அய்யருக்கும் தெலுங்கு  பிராமண குலத்தில், ஹேவிளம்பி ஆண்டு சித்திரைத் திங்கள் 31ம் நாள் (11-5-1897) உத்திர நக்ஷத்திரத்தில் சுத்தானந்தர் அவதரித்தார். தாயார் ராமாயண,  மகாபாரதக் கதைகளை சுயமாகவே பாடல்களாய்ப் பாடி உணவு ஊட்டுபவர்; தந்தை வேத வித்தகர்.

உடன் பிறந்தோர்களில் மூத்த தமையனார் ஜெ. வேங்கடராமய்யர்.  இவர் போராட்ட வீரர்களுக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராகும், தானே நெய்த கதராடை அணியும் தேச பக்த வக்கீல்!  இரண்டாவது தமையனார் ரங்கசாமி அய்யரே பின்னாளில் குடும்பம் முழுவதும் பார்த்துக் கொண்ட ஸ்திதப்ரக்ஞர். அண்ணன் தேசீயவாதி, தம்பி சுதந்திரப் போராட்டக்காரன் மட்டுமின்றி, ஒரு துறவியும் கூட! இவர்களது ஒரே தமக்கை ரங்கநாயகி.

சுத்தானந்தரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.  எட்டாம் வயதில், அன்னை பராசக்தி மதுரை மீனாக்ஷியம்மன் பேரருளால், குண்டலினிக் கனல் தூண்டப்பெற்று கவிதா சக்தி பெற்றார்; அன்றே அவருக்கு ஆன்மிக மலர்ச்சியும் ஏற்பட்டது. தாய்வழிச் சிறிய பாட்டனார் பூர்ணாநந்தர் இவருக்கு யோகம் பயிற்றுவித்தார்.  இமாலய மகான் ஞான சித்தர் ‘சுத்தானந்தம்’ என்று தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். அவரே இதய (தஹர) வித்தையையும், ஸஹஸ்ரார ஸித்தியையும், ஆதார ரகசியங்களையும் உணர்த்திச் சென்றார்.

புலவர் தெய்வசிகாமணி அய்யர், இவரது தமிழ் அறிவை வளர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்யர்  ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ‘கவியோகி’, ‘பாரதி’ என்றும், இமயஜோதி ஸ்வாமி சிவானந்தர் ‘மஹரிஷி’ என்றும் சிறப்புப் பட்டம் அளித்தனர். ஷீரடி  சாய்பாபா இவர்தம் செவியில் ’ஓம்’ ஒலியை ஓதி, என்றும் சித்தத்தில் அது நிலைத்திருக்கத் தலைமேல் காதைச் சுற்றி ஒரு காவித் துணியைக் கட்டிவிட்டார். பகவான் ரமணர் ‘தன்னறிவு’ பெறச் செய்தார்.

சேஷாத்ரி ஸ்வாமிகள்,  சித்தாரூடர்,  மேஹர் பாபா,  அரவிந்தர்,  அன்னை போன்றோர் இவர்தம்  ஆன்மிக உயர்வுக்கு வழிவகை செய்தனர்.  மஹரிஷி வ.வே.சு ஐயரின் உறவால் கவியோகியின் வாழ்வில் தேசீயமும் புகுந்தது.  மகான் அரவிந்தர் தொடர்பால் சுத்தானந்தரின் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அன்னாரின் புதுவை ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் மோனத்தவம் புரிந்து சாதனை செய்தார்.  ஏற்கெனவே இமயமலைக் குகைகளிலும்,  விரூபாட்சி குகைகளிலும் ஐந்து ஆண்டுகள் தவமியற்றி இருந்தார்.  மோனத்தவம் புரிந்த 25 ஆண்டுகளில் சுவாமிகள் பல ஸித்திகளையும், சக்திகளையும் பெற்று ஒரு விஜயதசமி நன்னாளில் மஹாதுரீய ஸமாதி அனுபூதி அடைந்தார்.

மனமாறச் சமய ஒற்றுமை போற்றிய தூயவர் சுத்தானந்தர். கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பவுத்தம், சீக்கியம், ஜரதுஷ்ட்ரம் ஆகிய சமயங்களில் அவர்களாகவே வாழ்ந்து, அவர்தம் நூல்களைக் கற்றார். அவை காட்டிய நெறிகளையும் பழகி வந்தார். சமயங்கள் போதிக்கும் உண்மை ஒன்றே என்று கண்டார். ”’ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம்,” என்பதை உலகுக்கு அறிவுறுத்தினார்,  வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சுத்தானந்தர்.

மோனத்தவம் புரிந்த காலங்களில் பல ஆயிரம் நூல்களை இயற்றினார். பெரும்பாலானவை தமிழ் நூல்களே. வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதைகள், உரைநடை,  பயணநூல்,  இலக்கணம்,  கீர்த்தனைகள்,  நாட்டியப் பாடல்கள்,  நாடகம்,  திறனாய்வு,  நவீனம், சிறுகதை,  அறிவியல்,  வாழ்க்கை வரலாறு போன்ற பலதுறைகளிலும் நூல்களை எழுதிக் குவித்தார்; எனினும் சுத்தானந்தர் தமது படைப்புகளில் பெரிதும் போற்றியவை ‘பாரத சக்தி மஹாகாவியம்’ என்னும் நூலும், ’யோகசித்தி’ என்னும் குறட்பாக்களாலான நூலுமாகும்.

பாரத சக்தி ஐம்பதாயிரம் வரிகள் கொண்ட ஒரு படைப்பிலக்கியம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் முதல் ராஜராஜன் விருதை  இந்த நூலுக்கே அளித்தது.  யோகசித்தியின் ஆங்கில வடிவத்தையும் சுத்தானந்தரே ”THE GOSPEL OF PERFECT LIFE” என்னும் பெயரில் இயற்றியுள்ளார். "யோகசித்தி" பிரெஞ்சு, ஸம்ஸ்க்ருத மொழிகளிலும் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ய அறிஞர் அண்ணாவால் பரிந்துரை செய்யப்பட்டவர் சுத்தானந்தர்.

காட்டுப்புத்தூரிலும்  தேவகோட்டையிலும் ஆசிரியராகவும்,  சாரண ஆசிரியராகவும் பணியாற்றிய காலங்களில், தேசீயச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இசையோடு இயற்றி அவற்றை மாணவரிடையே பரப்பினார். திலகர்,  காந்திஜி,  நேதாஜி,  வ.வே.சு ஐயர்,  சிதம்பரனார்,  சுப்ரமணிய சிவா,  மகாகவி  பாரதியார்,  செண்பகராமன்,  ராஜா மகேந்திர பிரதாப் போன்ற பெருந்தலைவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார் யோகியார்.

காந்தியடிகளின் அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணி,  மதுவிலக்கு ஒழிப்பு,  தீண்டாமை ஒழிப்பு,  உயிர் பலி தடுத்தல்,  பெண்கள்  மறுவாழ்வு போன்ற சீர்திருத்த இயக்கங்களையும் மேற்கொண்டு நாட்டுப் பணியும் ஆற்றியுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் இப்பணியில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் தாம் மேற்கொண்டிருந்த மௌனத்தைக் கலைத்து முதன்முதலில் ரிஷி கேசத்தில்,  ஸ்வாமி சிவானந்தர் முன்னிலையில்,  சுதந்திரச் சொற்பொழிவு செய்து அன்றிலிருந்து ஆன்மிகத் தேடற்பயணங்களை விரிவுபடுத்தினார்;. பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.  ஜெனிவா, பெர்லின் நகரங்களில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டார். சோவியத் யூனியன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,  இங்கிலாந்து,  இத்தாலி, டென்மார்க், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, பிஜி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும்,   அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆஸ்திரியாவிலும் சுற்றுப் பயணங்கள், சொற்பொழிவுகள் தொடர்ந்தன.

 சுத்தானந்தர் உலகிற்கு அளித்த செய்தி ‘சமயோகம்’. அகவாழ்வு சிறந்திட யோகம்;  புறவாழ்வு சிறந்திட அறிவியல். யோகமும்  அறிவியலும் மனித வாழ்வில் இணைந்துவிட்டால் மானுடம் அமர நிலையை அடையும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்.  இச் சமயோக வேள்விக்கென்றே ‘யோக சமாஜம்’ தோன்றியது. வடலூரிலும்,  சென்னை அடையாற்றிலும்,  யோக சமாஜம் சுமார் முப்பது ஆண்டுகள் நடந்தது.

1977 ம் ஆண்டு சிவகங்கையில், ’சுத்தானந்த யோக சமாஜம்’ என்னும் அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். தமது ஆன்மிக குரு ஞானசித்தர் உபதேசம் அருளிய சோழபுரம் கிராமத்திலேயே சமாஜப் பணிகளுக்கென நிலமும் நன்கொடையாக வந்தது!

1979-ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை அங்கு கவியோகி நிறுவினார். அருகிலேயே  தமது தவக்குடிலை அமைத்துக் கொண்டு,  சமாஜம், பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி வழிநடத்தினார். பிணியின்றி எளிமையாய் வாழ்ந்து பேனா முனையில் தானாயுழைத்து ஈட்டியதனைத்தையும் சமாஜப் பணிக்கே  அர்ப்பணித்தார்.

குழந்தைச் சிரிப்பும், நகைச்சுவைப் பேச்சும், கணீர் குரலில் பாடலும், சுறுசுறுப்பும் இறுதி வரை மாறவேயில்லை.  அனைவரிடமும் அன்புகாட்டி வாழ்ந்த கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார் 7-3-1990 அன்று மஹாசமாதி அடைந்தார். ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று சுத்தானந்த ஆராதனை சோழபுரத்திலுள்ள சுத்தானந்தர் நினைவாலயத்தில் நடத்தப் படுகிறது.

- கம்பரசம்பேட்டை பா. கோபாலகிருஷ்ணன்

காண்க:


2 கருத்துகள்:

Mathi சொன்னது…

கவியோகி திரு சுத்தானந்த பாரதி அவர்களின் அனைத்து எழுத்துப்படைப்புக்களையும் ஒருசேர படிக்கவோ, வாங்கவோ வழி வகை உள்ளதா? எனக்கு சரியான விவரம் தந்து உதவ முடியுமா?
என்றும் நன்றியுடன் பதிலுக்குக் காத்திருக்கிறேன்
மதி நிறை செல்வன்
25/12/2012

Unknown சொன்னது…

அன்பர் திரு. மதிநிறைச் செல்வன் அவர்களுக்கு,
சுத்தானந்த பாரதியாரின் படைப்புகள் சென்னை திருவான்மியூரி்ல உள்ள சுத்தானந்த நூலகம் என்ற பதிப்பகம் சுத்தானந்த யோக சமாஜத்தின் அனுமதியுடன் வெளியிட்டு வருகின்றது. முகவரி சுத்தானந்த நூலகம், புது எண்.8, 18வது கிழக்குத் தெரு, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை-41. சுத்தானந்தர் நூல்களைப் படித்துப் பயன் பெறுக.

கருத்துரையிடுக