நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.11.10

நவீன இந்தியாவின் சிற்பி

  


ஜவகர்லால் நேரு

பிறந்த நாள்: நவ. 14


பாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 - மே 27,1964), பாரதத்தின் முதலாவது பிரதமர்  ஆவார்.  1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது நாட்டின்   பிரதமராகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு,  பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார்.  இவர் பண்டிட் நேரு என்றும்,( பண்டிட் என்றால் சமஸ்கிருதத்தில்"கல்வியாளர்" என்று அர்த்தம்) இந்தியாவில் பண்டிட்ஜி என்றும் அழைக்கப்பட்டார். (ஜி என்பது பெயருக்கும் பின் மரியாதை நிமித்தமாக சேர்க்கப்படுகிறது).

சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. இந்தியாவில் தொழில்துறை சிறந்துவிளங்கத்   தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால், இவரை "நவீன இந்தியாவின் சிற்பி" என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள், இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியாவின் பிரதம மந்திரிகளாக பணி  புரிந்திருக்கிறார்கள்.

உத்திரப் பிரதேசம் மாநிலம், அலஹாபாத்தில், வழக்குரைஞரும், செல்வந்தரும், அரசியல்வாதியுமான மோதிலால் நேருவுக்கும் ஸ்வருபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள்.    காஷ்மீர் பிராமண குலத்தில் இருந்து வந்தவர்கள் நேரு குடும்பத்தார்.  இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட  இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக மோதிலால் நேரு இருந்தார்.

மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை வெளிநாட்டிற்கு  அனுப்பினார். படிப்பு  முடித்து சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார் நேரு. ஆனால், 1919ல் நடந்த ஜாலியன்வாலாபாக்  படுகொலை, நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார்.
நேரு, மிக வேகத்தில் மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரானார்.  அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும்,அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934),  சுயசரிதை,  (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தன. முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். இந்திய சுதந்திர இயக்கத்தில் மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தைப் பெற்றார். காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி சிந்தனை கொண்ட தலைவரானார்.

கமலா கவுல் என்ற காஷ்மீரிப் பெண்ணை,  1916 பிப். 8ல் மணந்தார். அவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார், ஆனால் 1936ல் புற்றுநோயால் இறந்தார். நேரு கடைசிக் காலத்தில் தன் மகள் மற்றும் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவர்களுடன் வாழ்ந்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பல பணிகளைச் செய்தபோதும், தவறான வெளியுறவுக் கொள்கை (உம்: இந்தோ- சீனா பாய் பாய் முழக்கம்)  காரணமாக சீனாவிடம் இந்தியா தோல்வி உறவும், நமது நாட்டின் பகுதிகள் இழக்கப்படவும் அவர் காரணமானார். காஷ்மீர் விவகாரம் பெரிதாக நேருவே காரணம் என்று இன்றும் குற்றம் சாட்டப்படுகிறது. வாரிசு அரசியல், பாரம்பரியத்திற்கு  எதிரான போக்கு, மேற்கத்திய நாகரிகத் தாக்கம் ஆகியவையும் இவர்மீது சுமத்தப்படும் குற்றங்கள். இவை உண்மையே என்றாலும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நேருவைத் தவிர்த்து எழுத இயலாது என்பதும் இருமடங்கு உண்மை.

ஐந்தாண்டுத் திட்டங்கள், அணைக்கட்டுகள், நவரத்னா தொழிற்சாலைகள், பஞ்சசீலக் கொள்கை, அணிசேராக் கொள்கை, மதசார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவை நேருவின் அடையாளங்கள். இவரது பிறந்த நாள் அரசால் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 
காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக