நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.11.10

மாலவனின் ஸ்ரீவத்ச அம்சம்
திருப்பாணாழ்வார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை- 7 -ரோகிணி (நவ.23)


திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டின் உறையூரில்,  செந்நெல் பயிரில் (கி.பி. 8-ம் நூற்றாண்டு) துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம், தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன்கிழமையன்று ரோகிணி நட்சத்திரத்தில் திருமாலின் ஸ்ரீவத்ஸ அம்சராக திருப்பாணாழ்வார் அவதரித்தார்.

திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர். ஆதலால் திருவரங்கத்தின்  உள்ளே செல்வதற்கு இவர் அனுமதிக்கப்படவில்லை.  அதனால் இவர் காவிரியின்  மறுகரையில் இருந்தவாறே  பண்  இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார்.
ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன், ரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர்,  பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் (அமலனாதிபிரான்) பாடியுள்ளார்.  இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம்,  மார்பு,  கழுத்து,  வாய், கண்கள், உடல்,  தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.  எக்குலத்தவராயினும் அரங்கன் அடியார் எனில் உய்வு உண்டு என்று உலகுக்கு உணர்த்தியவர், திருப்பாணாழ்வார்.  
காண்க:
திருப்பாணாழ்வார் (தமிழ் ஹிந்து)
திருப்பாணாழ்வார் திருச்சரிதம்
அமலனாதிபிரான்
நான்காயிரம் அமுதத் திரட்டு
தேசிகன் பக்கம்
சாதிகள் இல்லையடி பாப்பா
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக