நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.5.11

பாரதத்தின் ஆன்மிக தூதுவர்


மகான் புத்தர் 
(புத்த ஜெயந்தி: மே 17) 

பாரதம் தந்த ஆன்மிக அருளாளர்களில் மகான் புத்தருக்கு தலையாய இடமுண்டு. பாரதத்தின் ஆன்மிகத் தத்துவங்களை உட்கிரகித்து புத்தர் ஏற்படுத்திய புத்த மதம், எல்லை கடந்து ஆசிய நாடுகள் பலவற்றில் பரவியது. இன்று உலகின் பெரிய மதங்களுள் ஒன்றாகத் திகழும் புத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பாரதத்தின் உலகளாவிய ஆன்மிக தூதுவர் என்று சொன்னால் மிகையாகாது.

புத்தர் புத்த மதத்தின் நிறுவனராக மட்டுமல்லாது, பாரதத்தின் வைதிக மதங்களில் நிலவிய மூட நம்பிக்கைகளைப் போக்கைய சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறார். புத்தரின் தத்துவங்களுக்கு உலகளாவிய அஹிம்சைக் கோட்பாடுகளில் மிகுந்த செல்வாக்குண்டு.

பொது யுகத்திற்கு  முந்தைய 623  ம் ஆண்டில்,  நேபாளத்திலுள்ள (கபிலவஸ்து என்ற நாட்டில்) லும்பினி என்ற இடத்தில், சுச்சோதனர் என்ற மன்னருக்கும் மாயா என்ற அன்னைக்கும் மகனாகத் தோன்றினார் கௌதம சித்தார்த்தர். வைகாசி மாதம், முழுநிலவு நாளில் அவதரித்த அவர் பின்னாளில் மாபெரும் உலக ஞானியாவார் என்று ஜோதிடர்கள் கூறினர். ஆனால், நாட்டை ஆழ வேண்டிய தனது மகன் ஞானியாவதை விரும்பாத மன்னர் சுச்சோதனர், மகன் சித்தார்த்தனை உலக துயரங்கள் குறித்த எந்த தகவலும் அறியாத வண்ணம் தனி அரண்மனையில் பாதுகாப்பாக வளர்த்துவந்தார்.

தனது 16  வது வயதில் யசோதரையை மணந்தார் சித்தார்த்தர். இவர்களுக்கு பிறந்த மகன் பெயர் ராகுலன். உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் கிடைத்தாலும் சித்தார்த்தரின் மனம் நிம்மதி அடையவில்லை. அரண்மனை சுகபோக வாழ்க்கை அவரை திசை திருப்பிவிடவில்லை. ஏதோ ஒரு இனம் தெரியாத காரணத்தால் அவர் தவித்தார். நாட்டின் அரசாட்சியில் அவர் மனம் ஆர்வம் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒருநாள், அரண்மனையை  விட்டு உதவியாளருடன் தேரில் உலவப்போன சித்தார்த்தர் நான்கு காட்சிகளைக் கண்டார். ஊனமுற்ற மனிதன் ஒருவன் நடமாட முடியாமல் தவித்த காட்சி சித்தார்த்தரின் மனதை கவலை கொள்ளச் செய்தது. அடுத்து ஒரு நோயாளி வாழ்க்கையின் அல்லலை அவருக்கு நினைவு படுத்தினான். மூன்றாவதாக நாகுபேர் சுமந்து சென்ற பிணத்தையும் கண்டார் சித்தார்த்தர். பிணி, மூப்பு, மரணம் ஆகியவை மனிதன் சந்தித்தே  ஆக வேண்டியவை என்பதை சித்தார்த்தர் உணர்ந்தபோது, எந்தக் கவலையும் இன்றி சஞ்சாரம் செய்த துறவி ஒருவரையும் சித்தார்த்தர் கண்டார். அவர் மனம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு கட்டளை இட்டுவிட்டது.

எந்தக் காரணத்திற்காக தந்தையால் உலக கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்பட்டரோ, அதே காரணத்தை சித்தார்த்தர் தானே நேரடியாகக் கண்டுபிடித்துவிட்டார். அவர் மனம் அமைதி இழந்தது. மனிதனின் துயரத்திற்கு   பரிகாரம் என்ன? துன்பமற்ற வாழ்க்கை வாழ முடியாதா? வாழ்க்கையின் பொருளென்ன? போன்ற கேள்விகள் சித்தார்த்தரின் மனதில் எழுந்தன. அதன்  விளைவாக கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, அரண்மனை சுகபோகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் துறந்து நள்ளிரவில் நாட்டைவிட்டு வெளியேறினார் சித்தார்த்தர்.

அதன் பிறகு ஆறு ஆண்டுகள் துறவியாக பல இடங்களுக்கு சென்றார். தன்னை கடுமையாக வருத்திக்கொண்டு ஞானம் தேட முயன்றார். ஆயினும் அவர் மனம் அந்த மகத்தான உண்மையை நெருங்கவில்லை. அதற்கான நேரம் கூடாமல் இருந்தது.  யோக நெறியில்  கடும் தவம்  புரிந்த சித்தார்த்தர் அதனால் உயர்ந்த  யோக நிலைகளை அடைந்தாலும், உலகின் துயரத்திற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு விடையின்றித் தவித்தார்.

தனது 35  வது வயதில், பிகாரின் கயா  என்ற இடத்தில் பொதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்த சித்தார்த்தர், ஒருவார காலத்தில் புதிய ஞானம் பெற்றார். ஆசியே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்ற பெருஞானத்தை அறிந்த சித்தார்த்தர், தன்னை 'ததாகதர்' என்று அறிவித்துக் கொண்டார். அதன் பொருள், எது உண்மையில் அதுவாக உள்ளதோ, அந்த நிலையை அடைந்தவர் என்பதாகும்.

தான் பெற்ற ஞானத்தை உலகிற்கு வழங்க ஐந்து சீடர்களுடன் சாரநாத் என்ற இடத்தில் தனது பணியைத் துவங்கினார் ததாகதர். அவரை புத்தர் என்று மக்கள் போற்றத் துவங்கினர். அதன் பொருள் ஞானம் அடைந்தவர் என்பதாகும். சாரநாத்தில் அவர் நிகழ்த்திய ஞான விளக்கம், 'தம்ம சக்கரப் பிரவர்த்தனம்' என்று அழைக்கப்படுகிறது. அன்று முதல் தனது 80  வது வயதில் குசினாரா என்ற இடத்தில் மரணிக்கும் வரை, நாடு முழுவதும் ஓயாமல் தனது கருத்துகளைப் பரப்பினார் புத்தர்.

புத்தர் ஒருபோதும் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் தூதர் என்றோ சொல்லிக் கொண்டதில்லை. தான் புத்த நிலையை (ஞான நிலையை) அடைந்த ஒரு சாதாரண மனிதன்; இந்நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்பதே புத்தரின் போதனை. ஆசையே துயரங்களுக்கு எல்லாம் காரணம். ஆசையை விடுத்தால் மோட்சம் பெறலாம் என்பது புத்தரின் முக்கியமான அறிவுரை.

தனது போதனைகளைப் பரப்ப புத்த சங்கங்களை புத்தர் நிறுவினார். மிகக் குறுகிய காலத்தில் புத்த சங்கங்கள் நாடு முழுவதும் பரவின. பின்னாளில் புத்த மதமாக அவை நிலை கொண்டன.  புதுமையானதாகவும், எளிமையானதாகவும், சடங்குகள் அற்றதாகவும் இருந்த புத்தரின் போதனைகள் நாட்டு மக்களிடையே செல்வாக்கு பெற்றன. புத்தரின் சீடர்கள் பாரத எல்லை கடந்து சீனா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கு புத்த மதத்தைக் கொண்டுசென்றனர். பேரரசர் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற மன்னர்கள் புத்த மதத்தை நேசித்தனர். அதன் விளைவாக நாடு முழுவதிலும் புத்தரின் போதனைகள் பரவின. புத்த சங்கங்களில் இளம் துறவியர் படை பெருகியது.

'புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி' என்பதே புத்த சங்கத்தின் முழக்கம். ஞானம் பெற வேண்டும்; அதனை மக்களுக்கு போதிக்க வேண்டும்; தர்மம் காக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படையான கருப்பொருள்.

போலியான சடங்குகளை புத்தர் கண்டித்தார். உயிர்க்கொலை புரியும் விளப்கு பலியிடல்களை புத்தர் தடுத்தார். வேத சமயத்தில் நிலவிய தவறான பழக்கங்களை மாற்றுமாறு அவர் அறைகூவல் விடுத்தார். வாழ்க்கைக்கடலைக் கடக்க, துறவறம் மட்டுமே போதுமானதல்ல என்றும் அவர் சொன்னார். தன்னைப் பின்பற்றும் துறவிகளுக்கு செம்மையான  துறவற  விதிகளை நிர்மாணித்தார். பின்னாளில் அவரது புத்த சங்க விதிகளும் போதனைகளும் தொகுக்கப்பட்டு 'திரிபிடகம்' என்ற புத்த சமய நூலாக உருவானது.

பின்னாளில் பகவான் புத்தராக அவர் வழிபடப்பட்டார். வழிபாட்டு சடங்குகளுக்கு எதிராக புதிய சமயத்தை நிறுவிய புத்தரையும் கடவுளாகவே வழிபடத் துவங்கினர் மக்கள். அவரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக போற்றினர் பக்தர்கள். அதன் விளைவாக, புத்த மதம் சனாதன மதத்தின் கிளையாக (இந்தியாவில் மட்டும்) உரு மாறியது. ஆயினும் பாரதம் கடந்த பகுதிகளில் அது தனது ஞானச் சிறகுகளை விரியவிட்டு தனி மதமாகவே இன்றும் தொடர்கிறது.

பாரதத்தின் கயா, சாரநாத், குசினாரா, காஞ்சிபுரம், நேபாளத்தின் லும்பினி ஆகியவை புத்த மதத்தினரின் புனிதத் தலங்கள். கயாவில் புத்தர் தவம் செய்த போதி மரம் இன்றும் உள்ளது. அதனை மிகப் புனிதமானதாக புத்த மதத்தினர் கருதி வணகுகின்றனர். புத்த மதத்தைப் பொருத்த அளவில், கௌதம புத்தர் புத்தர்களின் தொடர் அவதாரத்தில் 28  வது புத்தராவார். புத்த மதத்தின் இரு பெரும் பிரிவுகளாக ஹீனயானம், மஹாயானம்  ஆகியவை உள்ளன.

புத்தர் பாரதத்தால் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட ஞானஒளியாகப் போற்றப்படுகிறார். வன்முறையை வேரறுக்கும் அன்பும் அஹிம்சையும் புத்த மதத்தின் அடிநாதம் ஆகும். பாரதம் உலகிற்கு வழங்கிய மாபெரும் கொடை பௌத்த மதம். பாரதத்தின் ஞான வடிவை  புத்தர் மூலமாகவே உலகம் தரித்திருக்கிறது. 

-குழலேந்தி

காண்க:












16.5.11

வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷர்


 
வைத்தியநாத ஐயர்
(பிறப்பு: மே 16)
 
      பாரத தேசமெங்கும் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்கள் உச்சகட்டத்தை தொட்ட காலம்.  காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தியாகத்தின் வடிவங்களாகவே வாழ்ந்த காலமது. சத்யாக்கிரகமும் அகிம்சையுமே ஆயுதமாகக் கொண்டு தங்கள் எதிர்ப்புகளை ஆவேசமாக காங்கிரஸ் வெளிப்படுத்திக்கொண்டிருந்த வேளை. தமிழகத்திலும் ராஜாஜி , வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்புச்சத்யாக்கிரகம் நடைபெறுகிறது ராஜாஜியும் வேதரத்தினமும் கைது செய்யப்பட்ட பின்னும் போராட்டம் தொடர்கிறது, மதுரை வைத்தியநாதய்யர் தலைமையில்.

             தடையை மீறிப்  பேசிய வைத்தியநாதய்யரை, ஆத்திரமுற்ற ஆங்கிலேய காவலர்கள் புளியமர விளாரால்  தாக்கினர்; அத்தோடு மட்டுமில்லாமல் வழக்கறிஞரும் அமைதியான சுபாவம் கொண்டவருமான வைத்தியநாதய்யரை சுமார் அரை  கிலோமீட்டர் தூரம் தரையோடு சேர்த்து இழுத்துச் சென்றனர்; உடலெங்கும் ரத்தக்  காயத்துடன் சிறையில் அடைத்தனர்.

            தான் மட்டும் அல்லாது தனிநபர் சத்யாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளையும்  ஈடுபடச் செய்தார். அவரும் பல மாதங்கள் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார்.  தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அவரும் பல மாதங்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார். தனது மூத்த மகனின் மரணத்திலும் அவரது இறுதிச்  சடங்கிலும் பங்கேற்காமல் அலிப்புரம் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் வைத்தியநாதய்யர். தனது மகளின் திருமணத்தைக்கூட சிறைத்  தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தி தேச விடுதலைக்காக தனது குடும்பத்தையே ஆகுதியாக்கிய தியாக தீபம் அவர்.

தீண்டாமையை ஒழித்த தீரர்:

             தமது வாழ்நாளில் மிகப் பெரிய லட்சியமாக தேச விடுதலைக்கு அடுத்து ஹரிஜன  மக்களின் நலன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு என்பதையே கொண்டிருந்த கொள்கை வீரர் வைத்தியநாதய்யர். சொல்லில் மட்டுமில்லாது செயலிலும் அதை நிருபித்து காட்டியவர்   வைத்தியநாதய்யர். 
 
             தனது வீட்டில் எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களை தங்கவைத்து அவர்களது முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டிருந்த ஹரிஜன சேவக சங்கத்தின் தலைவர். 1934 லேயே மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு தன்னோடு  ஹரிஜன மக்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள நாகநாதசுவாமி ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் செய்யவைத்த ஆற்றல் மிக்கவர்.
 
           இவ்வாறு பல கோயில்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை பல முறை அழைத்து சென்று தீண்டாமையை  வேரோடு அழிக்க உண்மையாக உழைத்த உத்தமர். ஆசாரம் மிகுந்த பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஒருபோதும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளிலிருந்து சற்றும் பிறழாத சாதகர்.

சொல்லும் செயலும் ஒருங்கிணைந்த செயல்வீரர்:
 
                 தமிழக வரலாறு மறக்க முடியாத நாள் 1939 ஜூலை, 8ஆம் நாள், காலை 10  மணி. ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன் (காமராஜர் மந்திரி சபையில் மந்திரியாய் இருந்த மகான்), முருகானந்தம், பூவலிங்கம்,  சின்னய்யா,  முத்து மற்றும் விருதுநகர் நகராட்சி கவுன்சிலர் எஸ். எஸ்.சண்முக நாடார் என ஆறு பேர் கொண்ட குழுவை தலைமை தாங்கி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் செய்து மாபெரும் அறப்புரட்சி செய்தார் வைத்தியநாதய்யர்.
 
          கொலை மிரட்டல் விடுக்கப் பட்டாலும்,  தனது ஜாதியினரால் சாதி விலக்கம் செய்யப்பட்டாலும், உறுதியுடனும் அஞ்சாமலும் ஆலயப்பிரவேசம் செய்த அருந்திறல் வீரர்.  மேற்கண்ட  ஆலயப் பிரவேசத்துக்காக ஆதரவும் ஆலோசனையும் அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அப்போதைய சென்னை மாகாண பிரதம மந்திரியாக இருந்த ராஜாஜி,   பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,  பெரியார் ஈ.வெ.ரா ஆகியோர்.
 
            முன்னதாக ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராமசாமி பங்கேற்றபோது மேடையில் தீ வைக்கப்பட்டது அப்போது மேடைக்கே ஓடிவந்து அவரைக் காப்பாற்றி தனது காரிலேயே அழைத்துச் சென்றவர்  வைத்தியநாதய்யர். இதன் பிறகும் தொடர்ந்த எதிர்ப்புகளை மீறி, ஆலயப் பிரவேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து சட்டமாக்க உத்தரவு பிறப்பித்தார் ராஜாஜி. அதற்கு மூல காரணமாக இருந்த வைத்தியநாத ஐயரை பாராட்டி பெருமிதம் கொண்டார் மஹாத்மா காந்தி.

          தேசத்தின் விடுதலைக்காக தனது மனைவியின் நகைகளையும்,  வீட்டுப் பொருள்களையும் அடகு வைத்தும் செலவு செய்த சத்தியசீலர்.  ஒரு முறை நீதிமன்றம் விதித்த அபராதத்திற்காக வைத்தியநாதய்யரின் கார் மற்றும் அவரது சட்டப் புத்தகங்களையும் ஜப்தி செய்தது ஆங்கில அரசு.

 
நினைவு கூர்வோம் தேசத்தின் நாயகனை:
 
        தான் பிறந்த தேசத்தின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் குடும்பம்,  சொத்து உள்பட எல்லாவற்றையும் அர்ப்பணித்த 'மதுரை வீரர்'  வைத்தியநாதய்யர் அவர்களின் பிறந்தநாளான இன்று (16.05.1857)  அவரை நினைவு கூர்வோம். இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷராம் வைத்தியநாதய்யரை வணங்குவோம்; அவர் வழி நடப்போம்.     
 
-ம.கொ.சி.ராஜேந்திரன்.
 
காண்க:
 
 
.

8.5.11

ஷண்மத ஸ்தாபகர் ... அத்வைத சாதகர்


ஆதி சங்கரர்

சங்கர ஜெயந்தி:
சித்திரை  -25-  புனர்பூசம்
(மே 8)
ஆன்மீக நெறியை உலகில் பிரகாசிக்கச் செய்யும் ஒப்பற்ற நாடு நம் பாரத நாடு. இம்மண்ணில் ஆயிரமாயிரம் அருளாளர்கள் தோன்றி பக்தி நெறியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பலவிதமான புறச்சமயங்கள் மக்களை திசை திருப்பிய காலத்தில், கயிலை மலையிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து சென்று, சமய உட்பூசல்களைக் களைந்து, இந்து சமய ஒற்றுமைக்கு அஸ்திவாரம் அமைத்த பெருமை ஆதிசங்கரர் என்ற மகானுக்கே உரியதாகும்.  

முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த அவ்வருளாளர், வைதீக தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்தியவர். வழிபாட்டிற்கு உதவும் வகையில் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்னும் அறு சமய நெறிகளை வகுத்து இந்து மதத்தின் ஒற்றுமைக்கு வழிகாட்டிய அவரது தொண்டு ஈடு இணையற்றது. சங்கரர், சிவபெருமானின் அம்சமாகவே அவதரித்தவர் என்பது பெரும்பாலோர் நம்பிக்கை.
மே  8ம் தேதி ஆதிசங்கரர் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கேரள மாநிலத்தில், திருச்சூர் அருகில் உள்ள 'காலடி' என்ற கிராமத்தில் சங்கரர் அவதரித்தார். சிவகுரு-ஆர்யாம்பா தம்பதியருக்கு மகனாக நந்தன வருஷம்,  சித்திரை  மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி- புனர்பூசம் நட்சத்திர நன்னாளில் இறையருளால் தோன்றினார். சிறுவயதில் வேத சாஸ்திரங்களை நன்கு பயின்றார்.
வேதவித்யார்த்திகள் நாள்தோறும் பிச்சை எடுத்து அந்த உணவை உண்ண வேண்டும் என்பது நியதி. அன்று துவாதசி திதி. சங்கரர் ஒரு அந்தணர் வீட்டின் முன்பு நின்று பிச்சை கேட்டார். அந்த அந்தணரோ பரம ஏழை. அச்சமயத்தில் வீட்டில் இருந்த பெண்மணி, ""ஒரு மணி அரிசிகூட இல்லையே'' என்று வருந்தினார். பிறகு வீட்டில் இருந்த ஒரேயொரு உலர்ந்த நெல்லிக்கனியை சங்கரருக்கு அளித்தார். அந்த மாதுவின் தரும சிந்தனையைக் கண்டு நெகிழ்ந்தார் சங்கரர். மகாலஷ்மியைப் பிரார்த்தித்து, "அங்கம் ஹரே புளக பூஷணம் ஆச்ரயந்தி'' என்று தொடங்கும் பதினெட்டு ஸ்லோகங்கள் பாடி அவ்வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தார். அது "கனகதாரா ஸ்தோத்திரம்'' என்னும் துதியாகும்.
எட்டு வயதில் துறவு மேற்கொண்டு வடதிசை நோக்கி தமது யாத்திரையைத் தொடங்கினார் சங்கரர். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள குகையில் 'கோவிந்த பகவத் பாதர்' என்னும் மகானை தரிசித்து "தசஸ்லோகி'' என்ற பத்து ஸ்லோகங்களைப் பாடினார். உடனே சங்கரரை சீடராக ஏற்றுக் கொண்டார் கோவிந்த பகவத் பாதர். உபநிஷத், பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரங்களை உபதேசித்து, அவைகளுக்கு வியாக்யானம் எழுதுமாறும், அத்வைத சித்தாந்தத்தை பல சீடர்களுக்கு உபதேசிக்கும்படியும் குருநாதர் ஆணையிட்டார்.
பின்னாளில் சங்கரர் பாடிய பிரபலமான துதிகளில், 'பஜ கோவிந்தம்' என்பதும் ஒன்று. இது திருமாலின் பெருமைகளையும், வாழ்க்கையின் நிலையாமையையும் எடுத்துரைக்கின்றது. இத்துதியில், "கோவிந்தம்' என்று பாடி தனது குருவின் திருப்பெயரையும் சங்கரர் பதிவு செய்திருப்பது ஓர் நயம்.
காசியில் தம் சீடர்களுக்கு பிரம்மசூத்திர விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் சங்கரர். அப்போது பகவான் வியாசரே முதிய அந்தணர் வடிவில் வந்து சங்கரரிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்டார். சிவனின் அம்சமான சங்கரரும், விஷ்ணுவின் அம்சமான வியாசரும் விவாதம் நடத்தியதைக் கண்ட சங்கரரின் சீடர் பத்மபாதர் அவர்களைப் போற்றித் துதித்தார்.
பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் குமாரில பட்டரை சந்தித்தார் சங்கரர். "மீமாம்ச நெறி'யைப் பின்பற்றிய பட்டர், சங்கரரால் அத்வைத உபதேசம் பெற்றார்.

அந்நாளில் பிரபல 'மீமாம்ச நெறி' விற்பன்னராக இருந்த மண்டன மிச்ரரையும் மாஹித் மதி நகரில் சந்தித்து, அவருடன் அத்வைத நெறி பற்றி வாதித்தார் சங்கரர். அப்போது மிச்ரரின் மனைவி உபய பார்வதி என்ற சரஸ்வதி, நடுவராக இருந்து வாதத்தைக் கேட்டார். ஏழு நாட்கள் நடந்த வாதத்தில் மண்டன மிச்ரர் அணிந்த மாலை வாடியதால் அவர் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். சங்கரரிடம் சந்நியாசம் பெற்று "சுரேச்வரர்'' என்ற திருநாமம் பெற்றார்.
ஸ்ரீசைலத்தில் இறைவனை வணங்கி, 'சிவானந்த லஹரி' என்னும் அற்புத தோத்திரத்தைப் பாடி அருளினார் சங்கரர். அங்கிருந்த காபாலிகன் சங்கரரின் சிரத்தை வெட்ட வாளை ஓங்கியபோது நீராடிக் கொண்டிருந்த பத்மபாதர் தம் குருவுக்கு ஆபத்து நேரப் போவதை உணர்ந்து நரசிம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஓடிவந்தார். ஸ்ரீநரசிம்மரே காபாலிகனை சாய்த்து சங்கரரைக் காத்தார். இதையுணர்ந்த சங்கரர், அஹோபிலத்தை அடைந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட்டார்.
துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரியில் ஸ்ரீசாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் சங்கரர். அங்கிருந்தபோது தம் அன்னையின் உடல் நிலை கவலைக்குரியதாக இருந்ததை அறிந்தார். உடனே காலடி சென்று தாய் ஆர்யாம்பாவைக் கண்டபோது ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் தாய். அப்போது விஷ்ணுவின் தூதர்கள் அன்னைக்குத் தென்பட அவளது ஆவி பிரிந்தது. சந்நியாசம் மேற்கொண்ட சங்கரர், ஈமக்கடன்களை செய்வதை உறவினரும் ஊராரும் விரும்பவில்லை. ஆயினும் தாமே சிதை அமைத்து, தாயின் உடலை அதில் கிடத்தி அக்னி தேவனை வணங்கி அன்னையின் சடலத்துக்கு எரியூட்டினார் சங்கரர்.

திருமலை வேங்கடவனை தரிசித்து அங்கு 'தனாகர்ஷண' எந்திரத்தைப் பதித்தார். காஞ்சியில் ஏகாம்பரேச்வரர், வரதராஜர், காமாட்சியம்மன் திருக்கோயில்களைப் புதுப்பித்தார். கயிலை மலையில் சிவபிரானை தரிசித்து அங்கிருந்து பஞ்சலிங்கங்களை பெற்றார். கேதாரத்தில் முத்திலிங்கம், நேபாளத்தில் வரலிங்கம், சிதம்பரத்தில் மோட்ச லிங்கம், சிருங்ககிரியில் போகலிங்கம் என்று பிரதிஷ்டை செய்தார்.
திருவிடைமருதூரில் பிற மதத்தவர்களுடன் வாதிட்டு அத்வைதமே உண்மையான தத்துவம் என்பதை நிறுவினார். திருச்செந்தூரில் சுப்ரமண்யபுஜங்கமும், மதுரையில் மீனாட்சி பஞ்சரத்னமும் பாடி தரிசித்தார். திருவனந்தபுரம், கோகர்ணம், சொல்லூர் முதலான தலங்களை தரிசித்தார். ஸ்ரீபலி என்ற ஊரில் ஊமைப் பையனைப் பார்த்து "நீ யார்?'' என்று வினவினார். அதுவரை வாயே திறவாமல் இருந்த அந்தச் சிறுவன், 13 ஸ்லோகங்களில் ஆத்ம தத்துவத்தைப் பதிலாக உரைக்க, அவனைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு "ஹஸ்தமாலகர்'' என்று பெயரிட்டார் சங்கரர்.
துவாரகையில் ஒரு மடம் நிறுவி உஜ்ஜயினி, வட மதுரை, பூரி, பிருந்தாவனம், பதரிகாச்ரமம் முதலியவைகளை தரிசித்தார் ஆதி சங்கரர். பின்னர் ஸ்ரீரங்கம் வந்து ரங்நாதரை வழிபட்டார். திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி ஆவேசமாக இருப்பதைக் கண்டு அம்பிகையின் எதிரில் கணபதியை பிரதிஷ்டை செய்தார். அம்பிகைக்கு நவமணிகளால் ஆகிய தாடங்கம் (காதணி) அணிவித்து சாந்த வடிவினளாக இருக்கச் செய்தார். கன்னியாகுமரியை தரிசித்து ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
பாரதம் முழுவதும் யாத்திரை செய்து அத்வைத சித்தாந்தத்தை நிறுவிய சங்கர பகவத்பாதர், கேதாரத்தில் இந்திராதி தேவர்களால் பூஜிக்கப்பட்டார்; பிரம்மாவால் வாழ்த்தப்பட்டார்.
இவர் 'சர்வக்ஞ பீடம்' ஏறியது காஞ்சியில் என்றும், காஷ்மீரத்தில் என்றும் இரு வேறு கருத்துகள் பண்டிதர்கள் மத்தியில் உள்ளன. தம் அவதார நோக்கங்கள் நிறைவேறிய பின்னர் சங்கரர், கயிலையை அடைந்ததாக கருதுவாரும் உண்டு.
இவர் இயற்றிய அத்வைத சித்தாந்த நூல்களில் உபதேச லஹரி, ஆத்ம போதம், விவேக சூடாமணி, வாசுதேவ மனனம், சர்வ வேதாந்த சித்தாந்த ஸங்க்ரஹம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. கணேசர், லலிதை, ஹனுமார், மீனாக்ஷி ஆகியோர் மீது பஞ்சரத்னங்களும், தக்ஷிணாமூர்த்தி, அன்னபூரணி, காலபைரவர், கிருஷ்ணர், பாண்டுரங்கன் உள்பட பல தெய்வங்களின் மீது அஷ்டகங்களும் பாடியுள்ளார். மேலும் இவர் இயற்றிய சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம், சிவானந்த லஹரி, செüந்தர்ய லஹரி ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.

""எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்மாவும், பரமாத்மாவும் ஒன்றே! வேறல்ல; சிவபெருமானும், திருமாலும் ஒரே பரம்பொருளின் இரண்டு அம்சங்கள். உயிரானது பிறப்பு, இறப்புகளிலிருந்து விடுதலை பெறும் மோட்சம்தான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பது. கர்மம், பக்தி, ஞானம் ஆகியவை முக்திக்கு வழிகள். இறைவனின் திருநாம கீர்த்தனமே "சித்த சுத்தி'க்கு வழி. சித்தம் சுத்திகரிக்கப்படாதபோது அதில் ஞானம் தங்காது. எனவே இக்கலியில் இறைவனது நாம கீர்த்தனமே ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் ஏற்ற ஒரே உபாயம்'' என்பது ஆதி சங்கரரின் அற்புத உபதேசமாகும்.
-வலையப்பேட்டை.ரா.கிருஷ்ணன்

காண்க:

ஆதி சங்கரர் (விக்கி)

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி (தமிழ் ஹிந்து)

சிருங்கேரி சாரதாபீடம் (தினமலர்)

சுப்பிரமணிய புஜங்கம்

கனகதாரா ஸ்தோத்திரம் (ஒலி)

மாத்ரு பஞ்சகம்

ADI SANKARA

இறைவனை  வழிபடு (குழலும் யாழும்)

Sankaracharya.org

ஆதி சங்கரர் வாழ்க்கை சரிதம் (நிலாச்சாரல்)

7.5.11

இயற்கையை நேசித்த காவியக் கவிஞர்


மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: மே 7)
தாகூர் 150 வது ஆண்டு

காலைப் பசும்புல்லில் காணும் பனித்துளி
அப்போது தான் துளிர்க்கும் புதிய இலைகள்
மனதை மெல்லியதாக்கும் தென்றல் காற்று
நறுமணத்தைப் பரப்பி நாற்றிசை கமழும் பூக்கள்
சாரலாய் விழுந்து மண் நனைக்கும் மழை...
- என்றெல்லாம் இயற்கையழகை தனது கவிதைகளினூடேவைப்பதில் வல்லவர் நம் தேசத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்லாது, குழந்தைகள்மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டவராகத் திகழ்ந்தவர்.
தாய்மொழிதான் குழந்தை-கள் மனதில் வளமான சிந்தனைகளை விதைக்கும், கற்பனை ஊற்றை விளைவிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்பியவர். மரப்பலகையில் உட்கார்ந்து எந்திரம் போல் கற்காமல் விருப்பம் போல் ஆடிப்பாடி அவர்கள் அறிவுப்பசியை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை குழந்தைகளுக்கு தர வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தவர்.
பண்டைய கால பாரத தேசத்து ஆசிரமங்களைப் போல ‘போல்பூர் பிரம்மச்சரிய ஆசிரமம்’ ஒன்றை மலையடிவார பூமியான சாந்தி நிகேதனில் ஆரம்பித்தார். தாகூரே மாணவர்களுக்குக் கற்பித்தார்; அவர்களுடன் விளையாடினார்; கதைகள் சொல்லி மகிழ்வித்தார்.
படிக்க வந்த மாணவர்களில் ‘மாடர்ன் வியூ’ பத்திரிகை ஆசிரியரான ராமனந்த சாட்டர்ஜியின் மகனும் ஒருவன். அவர் பள்ளியை பார்த்துவர சென்றபோது, மரத்தடியில் தாகூர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பத்து, பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றெண்ணியபடியே அருகே சென்ற ராமானந்தர் அதிர்ச்சியடைந்தார். அங்கே கீழே மரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளை விட, மரத்தின்மீது உட்கார்ந்திருந்த பிள்ளைகள் அதிகமாக இருந்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
“குரங்குகளைப் போல மரத்தின் மேல் ஏறி உட்கார பிள்ளைகளை ஏன் அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார் சாட்டர்ஜி.
தாகூர் பதிலளித்தார்: “தரையில் அமர்ந்து படிக்கும் குழந்தைகளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. மரத்திலுள்ள காய்கள் பழுத்து வருகின்றன. அவற்றின் இனிய மணத்தை காற்று எல்லா திசைகளிலும் எடுத்து செல்கிறது. மரத்தின் அழைப்பு இது. கனிமரத்தின் அழைப்பை குழந்தைகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வது? மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் குழந்தைகள் இப்போதே முதியவர்கள் ஆகிவிட்டார்கள். மரத்தின் அழைப்பு அவர்களை சென்றடையவில்லை. இதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.”
இப்பதிலிலிருந்து தாகூரின் அன்பும், கனிவும் கண்டு சாட்டர்ஜி நெகிழ்ந்து போனார்.
ஏராளமான கட்டிடங்களும், பொருட்களும், வசதிகளும் மட்டுமே வாழ்விற்கு கல்வியை, மகிழ்வை கற்றுத்தராது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே அமைதி தரும் என்று அறிவுறுத்தியவர் ரவீந்திரநாத் தாகூர்.
பள்ளிக்கூடங்கள் நகரங்களுக்கு இடையேவிட காடுகளுக்கு இடையே அமைய வேண்டும் என்பதே கவிஞரின் கொள்கை.    
-ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:







.

24.4.11

சேவையால் இறைவனைக் காட்டியவர்


ஸ்ரீ சத்ய பாபா

மறைவு: ஏப். 24

ஷீரடி  சத்ய சாய்பாபாவின் மறு அவதாரமாக வணங்கப்படுபவரும், மானுட சேவையால் இறைவனைக் காட்டியவருமான பகவான் சத்ய சாய்பாபா, புட்டபர்த்தியில் இன்று (ஏப். 24) இறைவனடி சேர்ந்தார். 

ஆந்திரப் பிரதேச மாநிலம், புட்டபர்த்தியில், பெத்தவெங்கமராஜு ரத்னாகரம்-  ஈச்வரம்மா தம்பதியினரின் எட்டாவது குழந்தையாக,  1926 ,  நவம்பர் 23  ல்  அவதரித்தார்,  பாபா. இயற்பெயர்: சத்யநாராயண ராஜு.

சிறு வயதிலேயே தனது அருளிச் செயல்களால் தனது அவதார மகிமையை வெளிப்படுத்திய சத்யநாராயண ராஜு, தான் ஷீரடியில் வாழ்ந்து மறைந்த பாபாவின் மறுபிறப்பே  என்று அறிவித்தார். பிறகு தனது 14  வது வயதில் (1940) சன்யாசம் பூண்டார். தனது சித்து விளையாட்டுகளால் பக்தர்களின் கவனத்தை ஈர்த்த பாபா, சத்ய சாய்பாபா என்று பெயர் பெற்றார். பாபா சிறந்த கவிஞராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

வெறும் கைகளில் விபூதி,  கற்கண்டு,  குங்குமம், லிங்கம்,  ஸ்படிக மாலை,   மோதிரம் போன்றவற்றை  வரவழைத்து பக்தர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாபாவின் அற்புதங்கள் பரவின. அவரது புகழ் பரவப் பரவ,  பக்தர்கள் வட்டம் பெருகியது. பக்தர்களின் நோய்களைப் போக்கியது, குறைகளைக் களைந்தது உள்ளிட்ட அற்புதங்களால் அவரை கடவுள் அவதாரமாகவே சாயி பக்தர்கள் கொண்டாடத் துவங்கினர். 1944  ல் புட்டபர்த்தியில் சாயி பக்தர்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். பாபாவின்  தலைமையகமான  பிரசாந்தி நிலையம் 1948  ல் கட்டப்பட்டு 1950 ல் நிறைவடைந்தது. அந்த இடம் நூறு ஏக்கர் பரப்பளவில் சாயி பக்தர்களின் தலைமையகமாக விளங்கி வருகிறது.

தேசம் முழுவதும் தீர்த்தாடனம் செய்த பாபா, உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆன்மிகத்தை பரப்பினார். ஆன்மிக உபதேசங்கள் மட்டுமல்லாது, பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலமாக மக்கள் சேவையிலும் பாபா ஈடுபட்டார். அதன்மூலமாக அரசு செய்ய இயலாத உள்கட்டமைப்பு வசதிகளையும் கூட பல பகுதிகளில் செய்து கொடுத்தார். பாபாவால் மேன்மையுற்ற அவரது பக்தர்கள் தாமாக முன்வந்து பல சேவைப்பணிகளைத் துவங்கினர்.

அன்பே சிவம் என்பதே பாபாவின் பிரதான கொள்கை. மானுட சேவையே இறைவனை அடையும் மார்க்கம் என்று அவர் உபதேசித்தார். இன்று பாபாவும்  அவரது  பக்தகோடிகளும்   பலநூறு சேவைப்பணிகளை ஆரவாரமின்றி நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 137  நாடுகளில்,   கோடிக் கணக்கான பக்தர்கள் உள்ளனர். 114  நாடுகளில் சத்யசாயி சேவை நிறுவனம் இயங்குகிறது. 

உலகெங்கும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் சாயி பக்தர்கள்  துயர்  துடைப்புப் பணிகளில் முன்னிற்கின்றனர். தன் மீதான பக்தியை மானுட சேவைக்கான வாய்ப்பாக உருமாற்றியவர் சாய்பாபா.

கல்வி, மருத்துவம், சேவை, சமூக மறுமலர்ச்சி, ஆன்மிகம், வளர்ச்சி பணிகள்  என்று பாபாவின் சேவைப்பணிகள் விரிந்து பரந்தவை. கீழ் ஆந்திராவின் அனந்தப்பூர், வடக்கு- கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலுள்ள  500 க்கு    மேற்பட்ட கிராமங்களுக்கும் (1996 - எல் அண்ட் டி திட்டம்) , தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும் (2004 - தெலுங்கு கங்கை திட்டம்)  குடிநீர் வழங்கும்   பிரமாண்ட  திட்டங்களை நிறைவேற்றியது பாபாவின் சாதனையாகப் போற்றப்படுகிறது. புட்டபர்த்தியிலுள்ள பாபா நிறுவிய அதிநவீன மருத்துமனை ஏழை மக்களின் உயிர் காக்கும் மையமாகத் திகழ்கிறது.  அரிய அறுவை சிகிச்சைகள்  இங்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன.

பாபாவின் அருள்மொழிகள் எண்ணற்ற மொழிகளில் பலநூறு தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அத்வைதமே பாபாவின் அடிப்படி ஆன்மிகம் ஆகும்.  அனைத்து மதங்களும்   இறைவனை அடைபவையே என்பதும் பாபாவின் அருள்மொழி.

சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் உலக மதங்கள் அனைத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளன. ''அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்; எல்லோருக்கும் உதவு; யாரையும் வெறுக்காதே'' - இதுவே பகவான் சத்ய சாய்பாபாவின் தாரக மந்திரம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் அருளாசி வேண்டி புட்டபர்த்தி படை எடுத்தனர். உலகப் புகழ் பெற்ற தலைவர்களும் பிரபலங்களும் அவர் காலடியில் கண்ணீர் மல்க தவம் கிடந்தனர். ஆனால் அவரோ, ஏழை மக்களின் நல்வாழ்விற்கான சேவைப்பணிகளில்  தனது பக்தர்களை  அமைதியாக ஈடுபடுத்தியவாறு கர்மயோகியாக வாழ்ந்தார்.

எனினும் மானிட  அவதாரத்திற்கே உரித்த  இறுதிநாள் பாபாவிற்கும் வந்துவிட்டது. உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த பகவான் சத்ய சாய்பாபா, இன்று (2011, ஏப். 24) காலப்பெருவெளியில்   ஐக்கியமானார்.

இன்று நம்முடன் சத்ய சாய்பாபா உயிருடன் இல்லை. ஆயினும் அவர் அருளிய பொன்மொழிகள் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும். அவரது சேவைப்பணிகள் உலகம் உள்ளவரை மானுட உயர்வுக்கு உதவும். அவரது வாழ்வு என்றும் நமக்கு உந்துசக்தியாக இருந்து நம்மை ஊக்குவிக்கும். பாபாவின் சித்து ஆற்றல் அவரது பக்தர்களுக்கு மன தைரியத்தையும், இழப்பிலிருந்து முன்னேறும் ஆற்றலையும் அளிக்கட்டும்.

பாபாவின் ஆன்மா எல்லையற்ற பரம்பொருளில் ஒன்றட்டும். அவரது அருளாசி உலகை வழிநடத்த தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

-குழலேந்தி

காண்க:




.