நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.8.11

ஹசாரே கரத்தை வலுப்படுத்துவோம்!

தேசிய சிந்தனைக் கழகம்
தமிழ்நாடு
5/3 , லேக் ஏரியா, மூன்றாவது வீதி, வள்ளுவர் கோட்டம் அருகில்,
நுங்கம்பாக்கம், சென்னை- 600 034. தொடர்புக்கு: 98423 08521

18.08.2011
 


அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!


    ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறது. அவருடன் இப்பணியில் இணைந்து செயல்படும் தேசபக்தர்கள் அனைவருக்கும் இறைவன் மேலும் வலிமையை வழங்க தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

    சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத வகையில் ஊழல் பெருக்கெடுத்து நாட்டு மக்களை வேதனைப்படுத்தி வருகிறது. அமைச்சர்களே ஊழல்புகாரில் சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில், நாட்டு மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மத்திய அரசோ, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறது.

    இதற்கு மாற்றாக, பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வல்ல ‘லோக்பால் சட்டம்’ காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது. இச்சட்டம் மூலமாக ஊழல் கறை படியும் உயரதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் உடனடியாகத் தண்டிக்க முடியும் என்பதே, இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

    இதற்கு, ‘லோக்பால் சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட உயரதிகார பீடங்களையும் உட்படுத்துவதே தீர்வு’ என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறி வருகிறார். அவரது தலைமையிலான குழு உருவாக்கிய ஜன லோக்பால் சட்டத்தை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே.

    தனது கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா ஹசாரே ஆக. 16 முதல் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, இப்போது அவரது போராட்டத்தை முனைமழுங்கச் செய்ய பல வகைகளில் முயன்று வருகிறது.

    மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணா ஹசாரே குழுவினர் மீது அவதூறு பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் கண்டிக்கிறோம்.

    மத்திய அரசு, தனது தவறுகளை இப்போதேனும் உணர்ந்து, ஹசாரேவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர் வலியுறுத்தும் வகையில், வலுவான, ஒட்டைகளற்ற லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஹசாரேவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் நாடு நெடுகிலும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளும் பாராட்டிற்குரியவர்கள். ‘லோக்பால் சட்டம்’ விஷயத்தில் பிற அரசியல் கட்சிகளும் ஹசாரேவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.

     ஹசாரே உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அவருக்கு ஆதரவான போராட்டங்களில் தேசிய சிந்தனைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது தொடர்பாக, மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கு நடைபெறும் போராட்டங்களில் தே.சி.கழக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

    ஊழலுக்கு எதிரான ஹசாரே அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

    பாரத அன்னை வெல்க!

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
(மாநில அமைப்பாளர்)

காண்க:
 
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக