நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.8.11

என்கடன் பணிசெய்து கிடப்பதே- 1


மனைவி பழனியம்மாளுடன் திரு. எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

தள்ளாத வயதிலும் கல்விச் சேவை புரியும் பெரியவர்!

கோவை, ஆக. 11:  கை, கால்கள் தளர்ந்துவிட்டன; கண் பார்வை மங்கிவிட்டது. ஊன்றுகோலே இவருக்கு மற்றொரு கால். கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. ஆனாலும், தனது 88 வயதிலும் பள்ளி மாணவர்களுக்கு சொந்தக் காசில் நிதியுதவி அளித்து வருகிறார் இந்தப் பெரியவர்.

யாரிடமும் கை ஏந்தாமல், தன்னுடைய ஒய்வூதியப் பணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியுதவி புரிந்து வருகிறார். எவ்வித விளம்பரமும் இல்லாமல், சத்தமில்லாமல் சமூகத்துக்கு கல்விச்சேவை புரிந்து வருகிறார், கோவை- சூலூரைச் சேர்ந்த "எஸ்.ஏ.எஸ்' என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

1996-ல் "அருந்தவப் பசு எஸ்.ஏ.எஸ்' என்ற அறக்கட்டளை தொடங்கி, அதில் கிடைக்கும் வட்டிப் பணம் மூலமாக, இதுவரை 5,000 மாணவர்களுக்கு சுமார் ரூ. 30 லட்சம் நிதிஉதவி புரிந்திருக்கிறார்; தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.

கோவையை அடுத்த சூலூரில் எளிய குடும்பத்தில் 2-வது மகனாகப் பிறந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், கடன் வாங்கி படிப்பை முடித்தார். பட்டதாரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர், தலைமை ஆசிரியராகவும், மாவட்ட கல்வி அலுவலராகவும், முதன்மைக் கல்வி அலுவலராகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றதை அடுத்து, கல்விக்குழு அமைத்து பல மாணவர்களுக்கு உதவி வந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், தனக்கு கிடைத்த ஒய்வூதியப் பணமான ரூ. ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு "அருந்தவப் பசு' என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் நிதி இப்போது ரூ. 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

அறக்கட்டளை நிதி மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு அரசு
பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு பிளஸ் 2-வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 40-க்கு மேற்பட்டோருக்கு, ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளார். இதற்கான விழா சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தளராத வயதிலும் கல்விக்காக நிதியுதவி செய்து வருவது குறித்து கேட்டபோது, எஸ்.ஏ.சுப்பிரமணியம் கூறியது:

கடந்த 1934-ல் சூலூருக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்திக்க பள்ளிப் பருவ மாணவர்கள் 6 பேர் முயற்சி செய்தோம். நாங்கள் கஷ்டப்பட்டு 5 ரூபாயைச் சேர்த்து, மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றோம்.

அப்போது காந்தியை அணுகி, ""உயர்வு என்றால் என்ன?'' என்று கேட்டேன். அவர், ""சமூகத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுவதே மகோன்னதமான காரியமாகும்'' என்றார். அது, என் நெஞ்சில் வைரமாகப் பதிவாகிவிட்டது.

அதேபோல பூமிதான இயக்கத் தலைவர் வினோபாஜி, கோவை வந்தபோது அவருடன் தங்கி அவருக்குப் பணிவிடை செய்துள்ளேன். இத்தகையவர்களது தொடர்பு எனக்கு ஊக்க சக்தியாக இருந்தது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியைத் துவக்கிய நான், பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். அந்தத் தருணங்களிலேயே பலருக்கு நான் உதவியுள்ளேன்.

1996-ல் அறக்கட்டளை தொடங்கி இதுவரை பலருக்கு உதவி செய்துள்ளேன். எனக்குக் கிடைக்கும் ஒய்வூதியப் பணம் ரூ. 46,000 மற்றும் வீட்டு வாடகை ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் சேமிக்கிறேன். ஆண்டுக்கு சுமார் ரூ. 7 லட்சம் அளவுக்கு நிதியை அறக்கட்டளையில் சேமித்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டில் ரூ. 3 லட்சம் நிதி வழங்கினோம். இந்த ஆண்டு சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளோம்.

என்னிடம் படித்து பல்வேறு பதவிகளில் இருக்கும் மாணவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோருக்கு சிறப்புச் செய்ய உள்ளோம். பணிஓய்வுக்குப் பிறகு, சுமார் 60 மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர நிதியுதவி செய்துள்ளேன் என்றார்.

88 வயதானாலும் நல்ல ஞாபகச் சக்தியுடன் பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறார், எஸ்.ஏ.எஸ். பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து, நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்கிறார். எங்கு செல்வதானாலும் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார், மனைவி எஸ்.ஏ.பழனியம்மாள். இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

மாணவ மாணவியருக்கு உதவுவதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட இவர், காக்கை, குருவிகளின் தாகம் தீர்க்க வீட்டு சுற்றுச்சுவர் மீது தினந்தோறும் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வியப்பளிக்கவில்லை. இவர் தனது கண்களையும் தேகத்தையும் தானம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

உயிருடன் இருக்கும்போதே அறக்கட்டளை நிதியை ரூ. ஒரு கோடியாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் அதிகமான மாணவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார், 89 வயதை நெருங்கும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்!

- ஆர்.ஆதித்தன்

நன்றி: தினமணி (12.07.2011) கோவை பதிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக