இன்று பாரதம் முழுவதும் சகோதரத்துவ திருவிழாவான ரக்ஷா பந்தன் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் 'ராக்கி' எனப்படும் ரக்ஷைகளை கட்டுவதன் மூலமாக, அனைவரும் சகோதரர் என்ற உணர்வு வலுப்படுகிறது.
மகாபாரத காலம் முதற்கொண்டே 'ராக்கி' அணிவிப்பது பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் சகோதரிகள் தங்களைக் காக்கும் வீரமுள்ள ஆண்களை சகோதரர்களாக உருவகித்து 'ராக்கி' அணிவித்து பரிசு பெறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கண்ணனின் திருக்கரத்தில் பாஞ்சாலி 'ராக்கி' அணிவித்ததாக கதை உண்டு. ராஜபுத்திர பெண்கள் தங்கள் மன்னன் கரத்தில் 'ராக்கி' அணிவித்ததற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.
அரிய நற்செயல்களை துவங்கும் முன் அது நிறைவேறுவதற்காக 'கங்கணம்' பூணுவதும் நமது பண்பாடு. அந்த வகையிலும் 'ராக்கி' அணிவிக்கப்படுவதுண்டு. சிவாஜி மகாராஜாவும், ராணா பிரதாப சிம்மனும் போருக்குக் கிளம்பும் முன் அணிந்ததும் ராக்கிக் கயிறு தான்.
பல மதங்கள், பல மொழிகள், பலவித பழக்க வழக்கங்கள், பருவநிலைகளில் பெரும் வேற்றுமை கொண்ட நிலப்பகுதிகள், பல இனங்கள் என பன்முகங்களைக் கொண்ட நமது நாட்டை பிணைக்க வல்ல கயிறாக இந்த 'ராக்கி' விளங்குகிறது. இந்நன்னாளில், நாமும் ஒருவருக்கொருவர் 'ராக்கி' அணிவித்து நமது சகோதர பந்தத்தை உறுதிப்படுத்துவோம்! நமது நாட்டின் சிறப்பை மேம்படுத்த கங்கணம் பூணுவோம்!
காண்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக