நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.12.10

தமிழகத்தின் புரட்சிக் குரல்

 

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

பிறப்பு: டிச. 4 

நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம்வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன்.

இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கு மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர்.  தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று, சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88 -வது வயதில் 1978, மார்ச் 14ம் தேதி காலமானவர்.

நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக் கூடாது.

1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட போதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இவர் 1889, டிச. 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன்- சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள், 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான்.

சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்த 'ஊட்டுப்புரை' சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி, சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார்.

அப்போது 1905ல் கர்சன் பிரபு வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளித்தார். எனினும் அப்படி செய்ய முடியாமல் அரசியல் வேலைகள் நீலகண்டனை தன்வசம் இழுத்துக் கொண்டன. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.

தஞ்சை மாவட்டத்தின் ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார்.

அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன்  ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை ரகசியப போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர்.

நீலகண்டன் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடுபடாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த 'அபினவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு.

பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் 'சூர்யோதயம்' எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார்.

அப்போதுதான் வ.உ.சிக்கு தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார்.

சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்கிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி. எனக்கு இந்த வேலைகள் தரக் கூடாது,  படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார்.  இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது.  ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் அந்த நாளில் சுதந்திரப் போர்வீரர்களை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தியிருந்தால் நீலகண்டன் போன்ற மனஉறுதி படைத்த வீரர்கள் கூட தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு, அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.

இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 1912 பிப். 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆக. 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார்.

அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது தனது சிரம தசையிலும் உதவி புரிந்தார்.  பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் 'போல்ஷ்விக் பிரசுரங்கள்' வெளியிடத் தூண்டின.

அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது. 

வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர் வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மனஉறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர் அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார்.

இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது?" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.

அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடந்த மண்டத்தைச் சிறிது செப்பனிட்டு அங்குள்ள ஒரு சுனையைச் சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார்.

1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள்.

இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை 'மெய் ஒப்புதல்' எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் 'உபதேஷ்' எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் 'தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்'. இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி, பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி சத்குரு ஸ்ரீ ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், பிங்கள வருஷம், மாசி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண பக்ஷம் தசமி திதியில் 1978 மார்ச் 4ம் தேதி இவ்வுலக பந்தங்கள் நீங்கி இறவா புகழுடம்பு எய்தினார்.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. 

தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா?

நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும். இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும்.

-மங்களம் பகவதி, திருவாரூர்
நன்றி: தஞ்சாவூரான் பிளாக்ஸ்பாட்.காம் 
காண்க:
ASH MURDER CASE 
CRIMNAL CASE ON NEELAKANDA

படிக்க வேண்டிய புத்தகம்:
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் / திருநெல்வேலி சதி வழக்கு.
சிவலை இளமதி, அலைகள் வெளியீட்டகம், சென்னை.


.

3.12.10

வங்கம் தந்த சிங்கம்



குதிராம் போஸ்
பிறப்பு: டிச. 3

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை  ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவரது வாழ்வு, சுயநலம் மலிந்த தற்போதைய இந்தியாவைப் பீடித்துள்ள நோய்களுக்கு அற்புதமான மருந்து.

வங்கத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில், திரிலோகநாத் பாசு, லட்சுமிப்ரிய தேவி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் குதிராம் (1889, டிச. 3). சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், 1902 ல் அப்போதைய வங்க சுதந்திரப் போராட்ட வீரர்களின்  குருவாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். அப்போது அவரது வயது 13 மட்டுமே.

1904 ல் மேதினிப்பூரில்  உள்ள கல்லூரியில் ஏறந்த குதிராம், அங்கும் தனது தேசப்பற்றால் மாணவர்களிடையே சுடராக ஜொலித்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டுதலும் பகவத்கீதை பரிச்சயமும் குடிராமை மேலும் மெருகூட்டின. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

1905 ல் வங்கம் பிளக்கப்பட்டது. வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. குடிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; வங்கத்தில் இயங்கிய 'யுகாந்தர்' என்ற புரட்சிக் குழுவில் இணைத்து இயங்கினார். பல காவல் நிலையங்களை குடிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு அரண்டது. 1908 ல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், ௧௮ வயதே நிறைந்த இளைஞனின் கைங்கரியம் அது என்று அரசு உணர்ந்தது.

ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம்,  ஆங்கிலேய அதிகாரிகளைத்  தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூர் ஐரோப்பிய கிளப் சென்றனர். 1908, ஏப். 30 ம் தேதி,  அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.

குண்டுவீசி தப்பிய இளைஞர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர் கூத்த தகவல் தேர்விப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் எட்ன்று அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம்  சிக்கிய பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மே மாதம் முதல் தேதி குடிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி  வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார்.  அதன் பிறகு நடந்த ராஜத்துரோக வழக்கில் குடிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, 1908, ஆக. 11 ம் தேதி குதிராம் போசுக்கு  முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவரது வயது 18 மட்டுமே. அந்த மாவீரனின் உடலை எரித்த அஸ்தியை விபூதி போல எடுத்துச் சென்று, தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து புகட்டினார்கலாம், வங்கத் தாய்மார்கள்.
குடிராமின் தியாக மயமான வாழ்வை சரித்திரத்தில் குழைத்து மாணவர்களுக்குப்  புகட்டுவதே, தற்போதைய பாரதம் அனுபவிக்கும் ஊழல் நோய்களுக்கு மருந்தாக இருக்க முடியும்.
.
காண்க:
Khudiram Bose
Free India.org
Indian Freedom Fighters 
Incredible  People 
குடிராமின் கவிதை
வங்கத்தில் தோற்றிய ரகசிய இயக்கங்கள்
வீர இளைஞன் 
Revolutionary Movement 

---------------------------------------------------------------------------------------
படிக்க வேண்டிய புத்தகம்:
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்- சிவலை இளமதி.
(அலிப்பூர் சதி வழக்கு/  பக்:36).
.

முதல் குடியரசுத் தலைவர்



பாபு ராஜேந்திர பிரசாத்
பிறப்பு: டிச. 3

பாரதக் குடியரசு அமைந்ததில் பெறும் பங்கு வகித்தவர் பாபு ராஜேந்திர பிரசாத். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வீற்றிருந்து அவர் ஆற்றிய பணிகளுக்காக, குடியரசு என்ற முறையில் நாடு அவருக்கு என்றும் நன்றி செலுத்தும்.

பீகார் மாநிலத்தில், ஷிவான் மாவட்டத்தில்,  ஜிரதே கிராமத்தில், 1884, டிச. 3 ம் தேதி பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரது தந்தை மகாதேவ  சஹாய், பெர்சிய மொழியிலும் சமஸ்கிருதத்திலும் நிபுணர். தாய் கமலேஸ்வரி தேவி.

தனது துவக்கக் கல்வியை சாப்ரா மாவட்ட பள்ளியில்  பயின்ற  ராஜேந்திர  பிரசாத்,  பாட்னாவிலுள்ள டி.கே. கோஷ் அகாதெமியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். இதனிடையே அவரது 12 வது வயதில்,  ராஜவன்ஷி தேவி என்ற நங்கையை திருமணம் செய்துகொண்டார்.

கொல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதலிடத்தில் தேறிய  பிரசாத், அதற்காக மாதம் ரூ. 30 உதவித்தொகை பெற்றார். 1902 ல் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லலூரியில் சேர்ந்தார். அங்கு ஜெகதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோரின் மாணாக்கராக இருந்தார். முதுகலை- பொருளாதாரம் பட்டம் பயின்ற அவர், 1908 ல் பீகார் மாணவர் மாநாடு என்ற அமைப்பு உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். அந்நாளில் மாணவர் சங்கம் அமைப்பதில் முன்னோடியான நடவடிக்கை என்று அது கருதப்படுகிறது. பின்னாளில் பீகார் முதல்வரான அனுக்ரக நாராயன் சின்ஹா, பீகார் கேசரி கிருஷ்ண சிங் உள்ளிட்ட பல தலைவர்களை அந்த அமைப்பே உருவாக்கியது.

1908 ல் முசாபர்பூரில் பூமிகர் பிராமின் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு முதல்வராகவும் அவர் உயர்ந்தார். எனினும், சட்டக் கல்வி பயில்வதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். 1915 ல் சட்டக் கல்வியில் முதுகலை (எம்.எல்) பட்டம் பெற்றார். அதன்பிறகு, பகல்பூரில் (1916) வழக்கறிஞராக பணியைத் துவங்கினார். பீகார் மற்றும் ஒரிசா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக அவர் திறம்பட் பணிபுரிந்தார். குறுகிய காலத்தில் அத்தொழிலில் முத்திரை பதித்தார்.

அப்போதுதான் சம்பரன் சத்யாகிரகம்  என்ற விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி பீகாரில் தீவிரம் அடைந்தது. விவசாய சாகுபடிக்கு விதிக்கப்பட்ட  ஆங்கிலேய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உழவர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு ஆதரவாக மகாத்மா  காந்தி சம்பரன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள நிலையை கண்டறிந்து வருமாறு ராஜேந்திர பிரசாத்தை காந்திஜி பணித்தார்.

அதனை ஏற்று, உண்மை அறியும் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பிரசாத், அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளை செய்தார். பின்னாளில் அவை சம்பரன் விவசாய சட்டத்தில் (1918) இடம் பெற்றன. இதன்மூலமாக, மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பாரதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது. இதுவே ராஜேந்திர பிரசாத் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் விடுதலைப் போராட்டக் களத்தில்  முன்னணித் தலைவரானார்.

அக்காலத்தில் விடுதளைவீரரும் புரட்சியாளருமான ஞானி ராகுல்   சாங்கிருத்தியாயனுடன் ராஜேந்திர பிரசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. பீகார் வெள்ளச் சேதத்திற்கு  ஆளானபோதும்,  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோதும், ராஜேந்திர பிரசாத் மீட்டுப் பணிகளில் முன்னின்றார். தொடர் சுற்றுப்பயணம், விடுதலைப் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜேந்திர பிரசாத், 1934 ல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியபோதும், மீண்டும் தலைவாரானார் ராஜேந்திர பிரசாத். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் 'பாபுஜி' என்று அழைத்து மகிழ்ந்தனர்.

1947 ல் பாரதம் விடுதலை பெற்றது. அதன் பிறகு, இந்தியாவுக்கான தனித்த அரசியல் சாசனத்தை வகுக்கும் பணி துவங்கியது. அதற்கான குழுவுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்றார். அப்போது ஹிந்து சிவில் சட்டம் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டபோது, நடுநிலைமையுடனும் தேசநலம் குறித்த சிந்தையுடனும் பாபுஜி பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு சிக்கல்களை தீர்த்துவைத்தார்.

1950, ஜனவரி. 26 ல் இந்தியா குடியரசு நாடானது. அதனையடுத்து, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார், பாபு ராஜேந்திர பிரசாத். 1962, மே 13 வரை நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகித்த அவர், வயது காரணமாக தானாகவே ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர் என்ற அரசியல்சாசனப் பதவிகேற்ற பல முன்னுதாரணங்களை அவர் ஏற்படுத்தினார். 1962 ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1963, பிப். 28 ல் பாபு ராஜேந்திர பிரசாத் மறைந்தார்.

ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவாரக இருந்த காலம், நேரு பிரதமராக இருந்த காலமாகும். நேருவின் பல தவறான முடிவுகளை மாற்றியமைத்ததில்  பாபுஜிக்கு  இன்றியமையாத  பங்குண்டு. நேருவின் மக்கள் செல்வாக்கு நாட்டிற்கு தீங்கு விளைவிக்காமல்  கட்டுப்படுத்தியவர் பாபுஜி. இந்தியக் குடியரசை நாகரிகத்துடனும்  உறுதியாகவும்  கட்டியமைத்தவர் என்று பாபு ராஜேந்திர பிரசாத் போற்றப்படுகிறார்.

காண்க:
ராஜேந்திர பிரசாத்
RAJENDRA PRASAD
இந்திய குடியரசுத் தலைவர்
I Love India 
Congress Sandesh
India டோகேதேர்
அசரீரி

2.12.10

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்




பாண்டித்துரைத் தேவர்

நினைவு நாள்: டிச. 2 


"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்.

'சேது சமஸ்தானம்' என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத் தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867,  மார்ச் 21ம் தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார்.  பெற்றோர் இட்ட பெயர் உக்கிர பாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். 

பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.  அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.  சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர், தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் 'சோமசுந்தர விலாசம்' என்று பெயரிட்டார். 

1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, 'திருக்குறள் பரிமேலழகர் உரை' நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது. 

தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர். பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது. 

நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.  அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. 'தமிழ் ஆய்வு மையம்' அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த 'செந்தமிழ்' ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. 

சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய-  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்,  இரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார்,  அரசன் சண்முகனார், ராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை,  சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்,  புலவர் அப்துல்காதிர் ராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை - ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' ஏடே உதவியது. 

சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  "தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள். 


ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.  சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, ராஜ ராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர். 


தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட (1911, டிச. 2 ) செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

- புலவர் முத்து வேங்கடேசன்

காண்க:

1.12.10

குழலால் ஈசனை மயக்கிய இடையர்

ஆனாய நாயனார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை -15 - ஹஸ்தம்
(டிச. 1)
  
சோழவளநாட்டு மேன்மழநாட்டில்  திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்;   மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்;  தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர்.
பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும்,  நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார்.  இளங்கன்றுகள்,  பால்மறை தாயிளம் பசு,  கறவைப்பசு,  சினைப்பசு,  புனிற்றுப்பசு,  விடைக்குலம்  என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார்.  ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்வர்.  தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானாரது   அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
இப்படி நியதியாக ஒழுகுபவர்,  ஒருநாள்  தமது குடுமியிற் கண்ணி  செருகி,  கண்டோர் மனம் கவர திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி,  கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து,  கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு,  கோவலரும்  ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார்.
சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார்.  அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றவே, அதனை எதிர்நோக்கி நின்று உருகினார்.  ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார்.
 நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து,  ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.
மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்து சேர்ந்தன.  ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். 
நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால், உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.
ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது;  வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.
“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”  என்று  திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார் சுந்தரர். இசையால் இறைவனை அடைய முடியும் என்பதற்கான சான்று நாயன்மார்களுள் ஒருவராக போற்றப்படும் ஆனாய நாயனார். 
நன்றி: அன்பே சிவம்

காண்க:
தாராசுரக் காட்சி
ஆனாய நாயனார்
ஆனாயர் அவதாரத் தலம்
ஆனாய நாயனார் புராணம்
பெரிய புராணம்
ANAYA  NAYANAR
பெரிய புராண சொற்பொழிவு (வீடியோ)
இசை விரும்பும் கூத்தன் (தினமணி)
.