நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.10.11

இலக்கியம் எதற்காக?


தமிழரசு கழகத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்தகாலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம். இந்தக் கண்ணோட்டத்துடன்தான் தமிழரசு இயக்கத்தார் கம்ப ராமாயணத்தைக் காண்கின்றனர்.

-ம.பொ.சி.

(குறிப்பு: இன்று ம.பொ.சிவஞானம் நினைவு நாள்)


காண்க:

தேசியம் காத்த தமிழர்

.

2.10.11

காந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.


சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு போராட்டங்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. சில- அரசாங்கங்களை எதிர்த்து... சில- அரசின் சீர்திருத்தங்களை எதிர்த்து... சில- நிறுவனங்களின் புதிய திட்டங்களை எதிர்த்து...

இப்படி பல கோணங்களில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டுவதற்காக போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

ஆப்ரிக்கா நாடுகளில் - சோமாலியா, எதியோப்பியாவில், தங்களது நாட்டுக்குள்ளேயே உள்ள பழங்குடி ராணுவக் குழுக்களின் மோதல்கள்... அதனால் கடும் பஞ்சம்... லட்சக் கணக்கில் மக்கள் தவிப்பு, அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுகிறார்கள். தங்களது கைகளில் அதிகாரம் இருக்க தங்கள் நாடு மக்களையே கொன்றும் குவிக்கும் பழங்குடி மக்கள் தலைவர்களின் ஆணவப் போக்கு.

ஐரோப்பா நாடுகளில் - கிரீஸ், இத்தாலி நாடுகளில் சீர்திருத்தங்கள் என்ற பெயரால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளை எதிர்த்து மக்களின் தெருப் போராட்டங்கள். அரசு நடத்தும் அரசியல் தலைவர்களின் அராஜகப் போக்கு.

அரேபிய நாடுகளில், ஏமன், சிரியா, லிபியா, நாடுகளில் நடைபெறும் சர்வதிகார ஆட்சிகளை எதிர்த்து, மக்களின் ஜனநாயக உரிமை வேண்டிய போராட்டங்கள், பல தலைமுறைகளாக ஆட்சியிலமர்ந்து கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப அதிகாரப் போக்கு.

அமெரிக்காவில்....சில வங்கிகளின் நடைமுறை தோல்விகளாலும், பொருளாதாரச் சிக்கல்களினால் ஏற்பட்ட சரிவுகளினாலும் அமெரிக்கர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான அரசின் கொள்கைளின் தோல்விகள்.. அமெரிக்காவில் ஏமாற்றுக்குள்ளான எஜமானப் போக்கு.

ஆசியாவில் - சீனாவில் பொருளாதார முன்னேற்றம் வியப்பூட்டும் வகையில் அமைந்தாலும், மக்களின் தனிமனித வாழ்க்கை சுதந்திரத்தில் அச்சம் நிலவிய வாழ்வு, நாடுகளிடையே மேலாண்மை செலுத்த பிரிவினைவாதத்தைத் தூண்டும் செயல்பாடு, கபளீகரம் செய்ய முனையும் கயமைத்தனம். நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டும் பேரில் ஆயுதங்கள் தந்துதவி அங்கே பயங்கரவாதத்தை வளர்க்கும் போக்கிரித்தனமான போக்கு.

உலகெங்குமுள்ள கண்டங்களிலெல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு விதத்தில் போராட்டங்கள் நடப்பது போல, இந்தியாவிலும் போராட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. குறிப்பாக பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே போன்றோரின் போராட்டங்கள் இந்தியாவிலுள்ள படித்தவர்களின் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மிகப் பெரும் சக்தியான இளைஞர் கூட்டம்- அரசியல்வாதிகளால், அவர்களது ஊழல்களால் நாடு பின்னடைவதை சகிக்க முடியாத ஒரு மிகப் பெரியக் கூட்டம்-  அண்ணா ஹசாரே தலைமையில் கூடியதைக் காண முடிந்தது.

இந்தியாவில்- " அதர்மம் தலைதூக்கும்போது, தர்மம் அழிக்கப்படும் போது தர்மத்தினைக் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் அவதாரமெடுப்பான்" என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அவதாரமாக - வடிவமாக அண்ணா ஹசாரேயை மக்கள் பார்த்தனர். அவர் பின்னால் திரண்டனர்.

" அண்ணா ஹசாரேயின் போராட்டங்கள் வெற்றி; அரசாங்கம் அடிபணிந்தது" என்பதல்ல நமது பார்வை. அண்ணா ஹசாரேயின் சிந்தனைக்கு வலுவூட்டியது எது? வேராக இருந்து நீரூற்றியது எது?

இந்தப் பின்னணியைப் பார்த்தோமானால்...

அண்ணல் காந்தியடிகளின் தனிமனித ஒழுக்கமும், சத்தியத்தின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் அவரது வெற்றிக்கு அடிகோலின. ஹசாரே தனது போராட்டங்களுக்கு ஆயுதங்களாக சத்தியத்தையும், தனிமனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தினார், வாழும் உதாரணமாக மாறினார்.

ஆம் இன்றைய உலகம் எங்கும் வாழும் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருந்திட காந்தியம் கற்றுத் தரும் பாடம் இதுதான். காந்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கற்றுக்கொள்ளும் பாடமும் இதுதான்.

-ம.கொ.சி.ராஜேந்திரன்

செயற்கரிய செய்த பெரியார்


டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)

நாஞ்சில் நாட்டில் தோன்றி பல சாதனைகளை படைத்த, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, இன்று 103வது பிறந்த நாள். அவர் வாழ்க்கையில் பல லட்சியங்களைக் கொண்டிருந்தார். மவுனமாக பணியாற்றி, அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வைத்தார். அவரது செயல்பாடுகளை இப்போதைய தலைமுறையினர் பின்பற்றினால் முன்னுக்கு வருவர்.

டி.வி.ஆரின் சேவைகள், படாடோபமோ, விளம்பர மோ இல்லாத ஒரு மவுனப் புரட்சி, உழைப்பு, ஊக்கம், திறந்த உள்ளம், அடுத்தவரை தன்னைப் போல மதிப்பது, வாய்மை, இவை டி.வி.ஆரோடு பிறந்த சொத்துக்கள். அவரது பொதுஜன சேவைக்கு இவையே மூலதனம். அப்பாவி போல உலகை அளந்தவர். அதனால் தான் அற்புத மனிதன் ஆனார். தமிழில் அவர் கவிமணியின் கைப்பாவையாக இருந்தார்.

90 ஆண்டுகளுக்கு முன்பு, நாகர்கோவிலைச் சேர்ந்த வடசேரியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பு பாடம் நடக்கிறது. வீரமணி அய்யர் ஆசிரியர். அன்றைய பாடம் புகை வண்டி; புகைவண்டி என்று கூறுவது ரயிலைத்தான். "ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று பையன்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். "வயலைப் பார்த்திருக்கிறோம், வெயிலைப் பார்த்திருக்கிறோம், ரயிலைப் பார்த்ததில்லை; இப்போது தான் நீங்கள் சொல்லிக் கேட்கிறோம்" என்று ஒரு பிஞ்சு பையன் வெடித்தான். "இப்போது, திருநெல்வேலிக்கு சென்றால் பார்க்கலாம். இங்கிருந்து 50 மைல் பஸ்சில் செல்ல வேண்டும்" என்றார். "அங்கு வரை வந்திருக்கும் ரயில், இங்கு ஏன் வரவில்லை?" என்றான் ஒரு மாணவன். "அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் ஆசிரியர். பிறகு முறையே வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், கேள்வி கேட்ட அந்த பிஞ்சு உள்ளம் மட்டும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் நம்மைத் தீண்டாமல் நெல்லையை எல்லையாகக் கொண்டு படுத்து விட்டதே என்ற உண்மை பையனை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பையன்தான் டி.வி.ராமசுப்பையர் என்ற பெயரோடு கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். ரயில் சிந்தனையை அவன் மறக்காமல் உருப்போட்டுக் கொண்டிருந்தான்.

கல்லூரி படிப்பு முடிந்து அரசு வேலைக்குச் செல்வதில் அவருக்கு கொஞ்சமும் ஆசையோ, ஆர்வமோ இல்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், ராமாயண காலத்தில் அனுமான் சேனைகள் சேது அணை கட்டியபோது, அணில் தன்னால் முடிந்தளவு மணலில் புரண்டு அந்த மண்ணை குவித்ததாகச் சொல்வார்களே, அதே வாய்ப்பாடுதான் டி.வி.ஆர்., உள்ளத்தில் குடியேறியிருந்தது. மலையாளிகள் மத்தியில் தமிழர்கள் மல்லுக்கு நிற்கும் நிலையைப் போக்கிடப் போராட்டம் தேவை. போராட்டம் என்றால், அதற்கு ஆதாரமாக பிரசாரம் இப்போதைய நாகரிகப்படி சொன்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகைகள் தான் சத்தம் போடாத பட்டாசுகள். ஆனால், ஆயிரம் பட்டாசுகளை வெடிக்கச் செய்யும் சக்தி கொண்டது. ஆதலால், பத்திரிகை வேண்டும்.

மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதி, டி.வி.ஆரும் பிறந்திருப்பதால், அவருக்கு ஓய்வே இல்லாத உழைப்பையே ஊட்டும் நட்சத்திரமாக மாறியது. காந்தியின் அரிஜன முன்னேற்றக் குரல் நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவியது. அது, டி.வி.ஆரை சற்றுக் கடுமையாகச் சுட்டுவிட்டது போலும். அரிஜனங்களைத் தேடி அவர்கள் குடியிருக்கும் வாசல்களைத் தட்ட ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக டாக்டர் எம்.ஈ.நாயுடு, நாராயணப் பெருமாள் நாடார், சிவமுத்துக்கருப்பப் பிள்ளை, சிவதாணுப் பிள்ளை, சிவன் பிள்ளை, காந்திராமன் பிள்ளை போன்ற காந்தியவாதிகள் உயிரேற்றி வந்தார்கள்.

அரிஜனங்களை சகஜமான நிலைக்கு கொண்டு வருவதில், சமபந்தி போஜனம் போன்ற புதுமைகளைச் செய்து வந்தனர். பிறப்பின் பெயரைச் சொல்லி மக்களைப் பாடுபடுத்திய மூடக்கொள்கை, நம்மை விட்டு ஒழிய வேண்டுமானால், முதலில் அவர்களின் மத்தியில் கல்வி அறிவைப் புகட்ட வேண்டும்.  கல்வி வாசனை பெறாத அரிஜனங்களை, உயர் நிலமைக்கு கொண்டு வரமுடியாது என்ற தத்துவத்தை டி.வி.ஆர்., தமது அனுபவத்தில் கண்டார். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முக்கிய பதவி வகித்த வைத்தியநாத அய்யர், முற்போக்கு எண்ணம் படைத்த ஏ.என்.தம்பி,  மனோன்மணியம் சுந்தரனார் மகன் பி.எஸ்.நடராஜபிள்ளை இவர்களுக்கெல்லாம் மேலாக திவானாகிய சர்.சி.ராமசாமி அய்யர் மற்றும் பலர் டி.வி.ஆரின் நண்பர்களாகவும், ஒரு கொள்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மூலமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமாவது, கட்டாயக் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று காய்களை நகர்த்தினார். அவர்களும் சரி என சொல்லி நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அப்போது திருவிதாங்கூர் நாயர்கள், ஈழவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய பிரிவினர்களின் ஆதிக்கத்திலிருந்தது. அந்த மூன்று பிரிவினர்களும் ஒருமித்தக் கருத்துக்கு வந்தால்தான் சட்டம் கொண்டு வரமுடியும். தவளை தண்ணீருக்கு இழுக்க, எலி வரப்புக்கு இழுக்கும் நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலை. இதனால், திட்டம் அப்படியே கருகி விட்டது. ஆனால், டி.வி.ஆர். விடவில்லை.

மேலே கூறிய கருத்து வேறுபாடுகள் இல்லாத மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். எனவே, அந்த மாவட்டத்தில் கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்திப் பார்க்கலாம் என்றார் டி.வி.ஆர்., விடமாட்டார் போலிருக்கிறதே டி.வி.ஆர்., என்று கண்ட அவர்கள், திருவனந்தபுரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்காக மட்டும் கட்டாயக் கல்வி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள மடம் என்ற கிராமப் பள்ளிக்கூடத்தில், கட்டாயக் கல்வித் திட்டம் கால் ஊன்றப்பட்டது. இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊருக்கு பத்து பேர் பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், விரிவுரையாளர்களாகவும் பெருகி இருக்கிறார்கள் என்றால் டி.வி.ஆரும், அவரது ஆதரவாளர்களும் அன்று வெள்ள மடத்தில் விதைத்ததின் விளைவால் அல்லவா.இதற்கிடையிலும், நெல்லை - குமரி ரயில் திட்டத்தை, தளர விடாமல், தன்னந்தனியாக உருப்போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதைய உலக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்து வந்தார். அவர் அரசியலில் ஆகட்டும், நிர்வாகத்தில் ஆகட்டும், முடிவு எடுப்பதில் துணிச்சல் மிகுந்தவர். பாகிஸ்தான் விவகாரங்களில், அமெரிக்கா, பாகிஸ்தான் பக்கமே சாய்ந்திருந்தது. இந்திராவின் ராஜ தந்திரத்தால், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் தனி நாடாக பிரிந்தது. இது, பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பெரிய அடியாக மாறியது. அமெரிக்கா கோபமடைந்து, அவர்களது கப்பற்படையை இந்தியா பக்கம் திருப்பியது.

அதற்கு பதிலடியாக, தங்கள் கப்பல் படையை அனுப்புகிறோம் என்று ரஷ்யா, இந்தியா பக்கம் தலை வைத்தது. பெரிய போராக கூட வந்து விடுமோ என்று உலகம் எதிர்பார்த்தது. கடற்படை தாக்குதலை சமாளித்து, வெற்றிபெற என்னனென்ன தேவை என்பதை இந்திய ராணுவ அதிகாரிகளோடு, ராப்பகலாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். கடற்படை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால், கன்னியாகுமரி பகுதிகளில் போர்த் தளவாடங்களை குவிப்பதற்கான போக்குவரத்து வசதி இல்லை. போர்முனைக்கு தளவாடங்கள் செல்ல வேண்டுமானால், ரயில் வசதி முதன்மையானதும் முக்கியமானதாகும். அதனால், உடனே ரயில் பாதைக்கான கட்டுமான வேலைகளை துவக்க வேண்டும் என்று ராணுவம் கருத்து தெரிவித்தது. இத்திட்டம் எப்படியோ டி.வி.ஆரின் காதுக்கு எட்டியது. உற்சாகம் வந்தது; ஊக்கம் ஏற்பட்டது.'

வாரக் கணக்கில் டி.வி.ஆர்., டில்லியில் தங்கியிருந்து, அங்குள்ள தமிழக எம்.பி.,க்களை ஒன்று திரட்டி, தவம் இருந்தார். டிராபிக் சர்வே, இன்ஜினியரிங் சர்வே என்று திட்டம் தீப் பிடிக்க ஆரம்பித்து விட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில், நாகர்கோவிலிலிருந்து - கன்னியாகுமரிக்கு ஒரு பாதை, திருவனந்தபுரத்திற்கு ஒரு பாதை, அதுவும் அகல ரயில் பாதையாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை திட்டம் உருவெடுத்து, பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கின. இப்போதுதான் டி.வி.ஆரின் மனம் குளிரத் துவங்கியது. கனவு உலகில் ஓடிய ரயில், கண்முன் ஓடப்போகிறது என்று சந்தோஷமான சந்தோஷம்.

இதற்கிடையில், கொச்சி என்ற மலையாள சமஸ்தானத்தை திருவிதாங்கூரோடு தந்திரமாக இணைத்து விட்டார்கள். அதனால், திருவிதாங்கூர் மலையாளிகளின் பலம் இரட்டிப்பானது. திருவிதாங்கூரில் தமிழர்களின் நிலை படுபாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருந்தது. இந்த இழிநிலைக்கு ஒரு வழிகாண வேண்டும் என்று சிந்தித்தார். ஏற்கனவே நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி, சிதம்பரநாதன் போன்ற பெரும் புள்ளிகள் தமிழர் பகுதியை தமிழகத்தோடு இணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் போர் சத்தம் அப்படி அப்படியே வெளியே தெரியாமல் மங்கி வந்தது.

தமிழர்க்கு என பிரசாரம் செய்ய சொந்தமாக பத்திரிகை வேண்டும். மலையாளிகளின் பொய், புளுகுகளை தவிடு பொடியாக்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார் டி.வி.ஆர்., அதே ஆவேசம் மழைத்துளி போல் தோன்றி மறையவில்லை அச்சாணியாக பதிந்து விட்டது.பத்திரிகை துவங்குவதற்கான ஆயத்தங்களுக்கு முழுவீச்சாக இறங்கினார். 'தினமலர்' என்ற ராசியான பெயரும் தெய்வாதீனமாக அவர் மனதில் பட்டது. 1951 செப்டம்பர் 6ம் தேதி, 'தினமலர்' மார்க்கெட்டிற்கு வந்து, வாசகர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

டி.வி.ஆர்., எதையுமே திட்டமிட்டுச் செய்வார். அவரிடம் அவசர புத்தி கிடையாது.
தினமலரால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும், அந்த நஷ்டத்தை தாங்க முடியுமா என்று அவரே கணக்குப் போட்டு, அதற்கான நிதியை ஒதுக்கி வைத்துக் கொண்டார். பத்திரிகைகளுக்கு ஆணிவேராக இருப்பவர்கள் முகவர்கள். முகவர்கள் கறாராக இருந்தால்தான், வண்டி தடம்புரளாமல் ஓடும். முகவர்கள் பணபாக்கி விஷயமாக அவர்களிடமிருந்து வரும் வாய்தா கடிதங்கள் வேடிக்கையாக இருக்கும். அதையும் டி.வி.ஆர்., சிரிப்போடு ஏற்றுக்கொள்வது டி.வி.ஆரின் மனப்பக்குவத்தையும் பறைசாற்றும் மலை இடிந்து விழுந்தாலும் தலை சாயாமல் நிமிர்ந்து எதிர்கொள்ளும் வீரகுணம் அவரோடு பிறந்தது. அதுதான் கடவுள் அவருக்குக் கொடுத்த வரம் என்று கூறலாம். பிரச்னையைக் கண்டு அஞ்ச மாட்டார். புன்சிரிப்போடு ஆலோசித்து தீர்வு காண்பார்.

- சி.உமைதாணு

நன்றி: தினமலர்

காண்க:

டி.வி.ராமசுப்பையர் (விக்கி)

T.V.RAMASUBBAYAR

Dinamalar Founder

தினமலர்

கல்விக்கண் கொடுத்தவர்


காமராஜர்
(மறைவு: அக். 2)

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?''

''உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார்.

இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.


காண்க:

இவரல்லவா முதல்வர்!
.  

எளிமையின் திருவுருவம்


லால் பகதூர் சாஸ்திரி

(பிறப்பு: அக். 2)

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,  மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார். 

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார். 

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?


- நன்றி: டிராகன்

காண்க:

லால் பகதூர் சாத்திரி (விக்கி)

LAL BAHADHUR SASTRI

Lal Bahadur Sastri (Geeby)

pmindia.nic.in

L B Sastri (free India)

L B Sastri (I Love India)

L B Sastri (Cultural India)

Why has history forgotten this giant?

The politician who made no money


Premiership of Lal Bahadur Shastri
.