நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.3.12

புயலைத் தாண்டினால் தென்றல்!

- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

சிந்தனைக்களம் 
 
கடந்த 2012, பிப்ரவரி மாதம், இலங்கை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அங்குள்ள 121 ஆண்டு கால யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்: 
 
 
 யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கியவுடன் முதல் எண்ணம் எனக்குத் தோன்றியது என்னவென்றால், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ராமேஸ்வரத்தில் எனக்கு ஓர் அருமையான கணித ஆசிரியரிடம் கிடைத்த அனுபவம்தான்; அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் பெயர் கனக சுந்தரனார். 
 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மறவன்புலவு க. சச்சிதானந்தனை சமீபத்தில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் சந்தித்தபோது அவரைப்பற்றி விசாரித்தேன். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து, படித்து வளர்ந்தவர். அவரை ராமேஸ்வரத்தில் நான் சந்தித்தபொழுது, அவர் ஓய்வுபெற்ற கணித ஆசிரியராக இருந்தார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு துறவியாகவும் இருந்தார். அதுமட்டுமல்ல, எல்லோராலும் போற்றப்பட்டவர் அவர்.
அதாவது தினமும் அதிகாலை 5 மணிக்கு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் 5 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாகக் கணிதம் பயிற்றுவிப்பார். கணிதம் பயிற்றுவிப்பதை அவர் ஒரு தொண்டாகக் கருதினார். அவரிடம் கணிதம் பயின்றால், மாணவர்கள் கணிதத்தில் நல்ல தேர்ச்சி அடைவார்கள்.  
அப்படிப்பட்ட கணிதத் துறவியிடம் எனக்குக் கணிதம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் கணிதம் மட்டும் பயிலவில்லை. அவருடைய அற்புதமான வாழ்க்கை நெறியையும், காலை 5 மணிக்கு எழுந்து பணிசெய்தால் அந்தக் கல்வி நம் மனதில் நீடித்து நிலைக்கும் என்ற நல்ல வழிமுறையையும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் என்னுடைய ஆசிரியர் பிறந்த இடமாக இருப்பதால், அந்த யாழ்ப்பாணத்தை வணங்குகிறேன். 
யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய் - என்று பினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்.  நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.  
என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.  
இத்தருணத்தில் விடாமுயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக, என் வாழ்வில் அச்சாணியாகத் திகழ்ந்த திருக்குறளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு  
இடும்பை படாஅ தவர்.
-அதாவது, தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்பதுதான் இந்தத் திருக்குறளின் மூலக்கருத்து ஆகும். 
நண்பர்களே, கடந்த 12 ஆண்டுகளில், இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். 
சமீபத்தில் இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில் என்ஜினீயர், டாக்டர் எத்தனை பேர்? ஐஏஎஸ்/ ஐபிஎஸ் ஆபீசர் எத்தனை பேர்? டீச்சர் எத்தனை பேர்? எத்தனை பேர் நிர்வாகி ஆகப் போகிறீர்கள்? என்று கேட்டேன். சில நூறு இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள். எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்துக்கும், போக விரும்புகிறீர்கள்? என்று கேட்டேன். அனைவரும் கையைத் தூக்கினார்கள். 
எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள்? என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள். அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். 
ஒரு மாணவன் 'இந்தியாவை 10 ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன்' என்று சொன்னான். ஒரு மாணவி சொன்னாள், 'லஞ்சத்தை ஒழிப்பேன்' என்று. இன்னொரு மாணவன் - ''இளைய சமுதாயத்துக்கு  'என்னால் முடியும்' என்ற நம்பிக்கையைக் கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால், 'இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என்று நம்பிக்கையைக் கொடுப்பேன்'' என்று கூறினான்.  
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களைப் பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைப்பேசியைப் பார்க்கும்போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகில் தோன்றுகிறார். 
சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்போது ஏன் கடலின் நிறமும், அடிவானமும் நீல நிறத்தில் தோன்றுகிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால், லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்குப் பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானிக்கு அந்தக் கேள்வி வந்தது. அந்தக் கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல், அதுதான் சர்.சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. 
இப்படிப்பட்ட வரலாற்றின் பக்கங்களை, தனது பக்கங்களாக மாற்றிய ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்தான். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒருபக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது இளைஞர்களாகிய உங்கள் ஒவ்வொருவரது கைகளில், சிந்தனைகளில், செயல்களில்தான் உள்ளது. 
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால், இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. 'அந்த மாய வலையில் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்' என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி, வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.  
மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள் ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிக்க, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ - மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.  
திருக்குறள் என் வாழ்வில் இணைந்த மிக முக்கிய வாழ்க்கைச் சித்தாந்தம். என் மாணவப் பருவத்தில் நான் அறிந்த திருக்குறள், என்னுடைய வாழ்வில் முக்கிய அங்கமாகி, என் மனதில் லட்சியப் பொறிகளை உருவாக்கியது.  1946-ல் ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர், வினைத்திட்பம் 67-வது அதிகாரத்திலிருந்து 666-வது திருக்குறளைப் பாடிப்பாடி பரவசப்படுத்தினார். அன்று மனதில் பதிந்த குறள், என் வாழ்வில் லட்சியங்களைக் கொண்டு வரும் விண்கலம் போன்றதோர் சக்தி மிக்க குறளானது.  
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  
திண்ணியர் ஆகப் பெறின்''.  
-இக்குறள்தான் என் வாழ்வின் அஸ்திவாரமானது. எனது விஞ்ஞானப் பணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் சோர்வுறச் செய்தபோது, உள்ளத்துக்கு உரமூட்டிய குறள் இது. 
இந்தியாவில் பல விஞ்ஞானிகளின் எண்ணங்கள் பல வடிவங்களில் உருவெடுத்து அக்னி எழுச்சி பெற்று, ஏவுகணைச் சக்தியாக மலர்ந்தது, இந்தியா பல துறைகளில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது. செயலில் உறுதி இருந்தால், வெற்றி நிச்சயம்.  
ஒருமுறை நான் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் சென்று இருந்தேன். அப்போது ஒரு மாணவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். 'நம் நாடு ஜனநாயக நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பல நன்மை, தீமைகள் நடக்கின்றன. வன்முறைகள், கலவரங்கள், நில அபகரிப்புகள், ஜாதி மத மோதல்கள், தீவிரவாதம், அடக்குமுறை, பழிவாங்குதல், யதேச்சாதிகாரம், சர்வாதிகாரம், வல்லவன் வகுத்ததுதான் வழி, பலமுள்ளவன்தான் பிழைக்க முடியும் என்பது போன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக இந்த ஜனநாயக நாட்டிலே நடக்கிறதே, அப்படி நடந்தால்கூட செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே. வாழ்க்கை எப்போதும் இனிப்பாக இருக்க முடியுமா?' என்று கேட்டார்.  
நான் அவருக்குப் பதில் சொன்னேன். "ஒவ்வொருவரின் வாழ்விலும் பல புயல்களையும் சில தென்றல்களையுமே எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும்போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும் ஓரிரு சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால், பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெறவேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம்''.  
நான் ஒருமுறை 2003-ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 'தவாங்' என்ற இடத்துக்குச் சென்றேன். ஒருநாள் முழுவதும் இருந்து அங்கு புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். கடுமையான குளிரில், வாழ்வதற்கு மிகவும் சிரமப்படக்கூடிய சூழல் இருக்கும்போது அங்குள்ள மக்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பது கண்டேன். 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.  அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம் கேட்டேன். இது எப்படி சாத்தியமாகும் என்று? அதற்கு அவர் சொன்னார்: ''இந்த உலகத்தில், நமக்கு பல்வேறு பிரச்னைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூக பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்த தவஸ்தலம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் 'நான், எனது' என்ற எண்ணத்தை நம் மனத்தில் இருந்து அகற்றினால் நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும். தற்பெருமை மறைந்தால், மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பு அகலும். வெறுப்பு நம் மனத்தை விட்டுஅகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நம் மனத்தைத் தழுவும்''.  என்ன ஓர் அருமையான விளக்கம்! 
ஆனால், எப்படி 'நான், எனது' என்ற எண்ணத்தை நம் மனத்தில் இருந்து அகற்ற முடியும்? எவ்வளவு கஷ்டமான விஷயம்? இதற்கான பக்குவமான கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதுதான் நம்மிடையே உள்ள சவால். அந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது, அமைதியை எப்படி அடைவது என்ற என் கேள்விக்கு விடை தேடிய என் பயணம் தொடர்ந்தது. 
நான் பல்கேரிய நாட்டுக்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவ தவஸ்தலத்துக்குச் சென்றேன். தவாங்கில் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக அங்குள்ள முதிர்ந்த பாதிரியார் ஒரு வாக்கியத்தைத் தந்தார். 'மன்னிப்பு' என்ற உன்னதமான வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்பது எப்படி ஒரு வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் என்பதை பற்றிய அருமையான விளக்கம் பெற்றேன்.  
அதன் தொடர்ச்சியாக விவேகானந்தரது பிறந்த இடத்துக்குச் சென்றேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது அங்கு கிடைத்த பதில் என்னவென்றால், கொடை, அதாவது கொடுக்கும் குணம், இத்தனை குணங்களுடன் கொடையும் சேர்ந்து இருந்தால் நாட்டில் அமைதிக்கு அது வித்திடும் என்பதாகும். 
இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷெரீப் சென்றேன். அங்கு சென்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சுபி பெரியவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் ''ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு; சைத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கு வித்திடும், நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும், அன்பு அமைதிக்கு வித்திடும்'' என்றார்.  
நல்ல செயல்களைப் பற்றி எண்ணும்பொழுது, காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காந்திஜியின் 9-வது வயதில் அவரது தாயார், அவருக்கு ஓர் அறிவுரையைத் தந்தார். 
அந்த அறிவுரையாவது: 'மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாகப் பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்'. 
மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். 
ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா, பேராசைக்காரன் கேட்பான் - இதனால் எனக்கு என்ன லாபம் என்று,  தற்பெருமைக்காரன் கேட்பான் - நான் மகானாக முடியுமா என்று, இச்சையானவன் கேட்பான் - அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று, ஆனால், மனசாட்சி ஒன்றுதான் கேட்கும், அது சரியா என்று! ஆனால், ஒட்டுமொத்தமான பதில் என்ன - தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஒன்றுதான்.  
எனவே, மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே, கனவு காண்பது என்பது ஒவ்வொரு குழந்தையின் இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓர் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேறக் கடுமையாக உழைக்க வேண்டும். 
தொடர்ந்து அறிவைப் பெற, அதைத் தேடிச் சென்றடைய வேண்டும், விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மையைத் தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். 
தகவல் உதவி: வி ஸ்ரீநிவாசன்  
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக