நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

22.11.10

மக்களின் மனசாட்சிக் குரல்

எழுத்தும் தெய்வம்
 தினமணி நாளிதழ்
(22.11.2010) தலையங்கம்
  
மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.
 
தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.
 
எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல், மக்கள் மத்தியில் பயமோ, வெறுப்போ இல்லாமல் பழகக்கூடிய வாய்ப்பும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான், குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநர்களாலும் பத்திரிகையாளர்களில் ஓரிருவர் அடையாளம் காணப்பட்டு மாநிலங்களவைக்கும், மேலவைக்கும் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். மக்களோடு மக்களாகப் பழகும் இந்தப் பத்திரிகைப் பிரதிநிதிகள் மக்களின் நிஜமான பிரச்னைகளை எடுத்துரைக்கவும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டவும் முடியும் என்பதால்தான் இத்தகைய ஒதுக்கீடு நமது அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
 
அதேநேரத்தில், பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில், நிருபர்களுக்குத் தரப்படும் மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி, தவறான வழிமுறைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதை நாம் எப்படி மறுப்பது? "எழுத்தும்  தெய்வம், எழுதுகோலும் தெய்வம்' என்று பத்திரிகைப் பணியை ஒரு தவமாக, சமுதாயப் பணியாகக் கருதிப் பணியாற்றுபவர்கள் மத்தியில், எழுத்தைப் பிழைப்பாக்கி, பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் செயல்படும் இடைத்தரகர்களும் பலர் மலிந்துவிட்டனர் என்கிற உண்மையை மறைத்துவிடவா முடியும்?
 
அரசியல்வாதிகள் மத்தியில் சேவையுணர்வு குறைந்து, பணம், பதவி, அதிகாரம் போன்றவைகளின் மீது மோகம் ஏற்பட்டு விட்டிருப்பதைப் போன்று, அதிகார வர்க்கத்தினர் மத்தியில், தாங்கள் மக்கள் சேவைக்காக மாதச் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்கிற எண்ணம் மறைந்து ஊழலுக்கு உதவிக்கரம் நீட்டும் போக்கு அதிகரித்திருப்பது போன்று, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது போன்று, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுத்துப் பணிக்குத் தொடர்பே இல்லாதவர்கள் பலர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உலவுகிறார்கள் என்பதும், இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதும் நிஜம்தானே!
 
சமுதாயப் பங்களிப்பாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளோடும், இலக்கியப் பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்துடனும் பத்திரிகை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களும், தினசரிகளும்கூட இந்தப் பட்டியலில் அடக்கம். அதேநேரத்தில், அதிகார வர்க்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அந்தத் தொடர்பின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராகிறதே, அதை எப்படித் தடுத்துவிட முடியும்?
 
சமீபகாலமாக, காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக்காகப் போராடும் பத்திரிகைகள் குறைந்து, நிருபர்கள் என்கிற போர்வையில் வியாபாரிகளின் சார்பிலும், சமூக விரோதிகளின் சார்பிலும், தவறுகளுக்குத் துணைபோகத் தயாராக இருக்கும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் போன்றோருடன் கூட்டணி ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை வேதனையுடன் வேடிக்கை பார்க்க முடிகிறதே தவிர, இவர்களை வடிகட்டவோ, விலக்கி நிறுத்தவோ முடியாதே, என் செய்ய?
 
மாவட்ட அளவில் இப்படி ஒரு நிலைமை இருந்ததுபோய், மாநில அளவிலும் தேசிய அளவிலும்கூட இந்தப் போக்கு, கடந்த இருபது ஆண்டுகளாக, மலிந்துவிட்டிருக்கிறது. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவும், "கார்பரேட்' கலாசாரத்தின் தாக்கமும், பத்திரிகையாளர்களை அரசியல் இடைத்தரகர்களாக மட்டுமல்லாமல், சமூக விரோதிகள், வர்த்தக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டணியில் இன்றியமையாத அங்கமாக மாற்ற முற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போது வெளியாகி இருக்கும் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்.
 
பொதுநல வழக்கு மையம் என்கிற சமூக ஆர்வலர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு வருமானவரி இலாகாவினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒட்டுக்கேட்ட தொலைபேசி உரையாடல்களுக்கு நீதிமன்றத்தில் மரியாதை தரப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பத்திரிகையாளர்கள் என்பதுதான் நமக்கு வேதனை அளிக்கும் விஷயம்.
 
பிரதமர் மீது படிந்திருக்கும் களங்கத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் ஊழல்களையும் திசைதிருப்ப, "அவுட் லுக்', "ஓபன்' போன்ற பத்திரிகைகளையேகூட விலைபேசி ஊழலில் தொடர்புடையவர்கள் இதுபோன்ற பரபரப்புச் செய்திகளை வெளியிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல, பத்திரிகையாளர்களும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாக வேண்டும்.
 
சிதைந்துவரும் மக்கள் மன்றத்தின் நம்பிக்கைக்கு நடுவில் இருக்கும் வெள்ளி ரேகை பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும்தான். அதுவும் சிதைந்துவிட்டால் இந்தியாவைக் குழப்பமும் பேராபத்தும் சூழ்ந்துவிடும். பத்திரிகையாளர்கள் இடைத்தரகர்களாகிவிடக் கூடாது!
 
நன்றி: தினமணி

21.11.10

கடைசி ஆழ்வாரான மன்னர்



திருமங்கையாழ்வார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை -5 (கிருத்திகை)
(நவ. 21)


திருமங்கையாழ்வார்   வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டில் பிறந்தவர்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.  அவை திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்),  சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்), பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்), திருநெடுந்தாண்டகம்  (30 பாடல்கள்),  திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்),  பெரிய திருமொழி (1084 பாடல்கள்)  ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளன.

திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின் இயற்பெயர் நீலன். லியன் என்றும் அழைக்கப்பட்டது உண்டு. சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவருக்கும் மனைவி வல்லித்திருவுக்கும்,  நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று, சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.

பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.

வாள், வில், வேல், ஈட்டி ஆகிய படைக்கலப் பயிற்சியிலும் வல்லவரானார்.  தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமையேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்கு பெரும் வெற்றிகளை தேடித் தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தார்.

நீலன் குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தைத் தொடங்கினார். மனைவி திருமணத்திற்கு விதித்த நிபந்தனைப்படி ஸ்ரீ வைஷ்ணவராக மாறிய நீலன்,  தன் கையில் கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமையால் அரசு காவலில் சிறை வைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான் வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.


பிறகு வினவ பக்தர்களுக்கு அமுது வழகுவதில் தனது பொருளனைத்தும்  செலவிட்ட நீலன், தனது செல்வம் அனைத்தும் கரைந்த நிலையில், பாகவத கைங்கர்யத்திற்காக வழிப்பரியிலும் இறங்கினார். அப்போது அவரை தடுத்தாட்கொண்ட திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் 'ஓம் நமோ நாராயணா' என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். அதன் பின் திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்ற நீலன், வைணவ நெறியைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார்.

இதன் பின் திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் ஆறு பிரபந்தங்களை (காண்க: கீழே இணைப்புகள்) அருளிச் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மனைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார். இவரே ஆழ்வார்களில் கடைசியாகக் கருதப்படுகிறார்.

காண்க:
திருமங்கையாழ்வார் (விக்கி)
திருமங்கையாழ்வார் (தேசிகன் பக்கம்)
திருமங்கையாழ்வார் சரிதம்
திருமங்கையாழ்வார் (தமிழ்வு)
திருவெழுகூற்றிருக்கை
திருநெடுந்தாண்டகம்
திருக்குறுந்தாண்டகம்
பெரிய திருமடல்
சிறிய திருமடல்
பெரிய  திருமொழி

விளக்கேற்ற முடி ஈந்தவர்


கணம்புல்ல நாயனார்

திருநட்சத்திரம்:
கார்த்திகை-5 (கிருத்திகை)
(நவ. 19) 


தமிழகத்தின் வாடா வெள்ளாற்றின் தென்கரையில், இருக்கு வேளூர் (பேளூர்) எனும் தலத்தில் அவதரித்தவர் கணம்புல்லர். தினமும் ஈசனின் ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றும் திருப்பணியைப் புரிந்து வந்தார். நாளடைவில் அவருடைய செல்வம் கரைந்தது. எனினும் தளராமல் அவர் சிதம்பரம்  சென்று தனது பொருட்களை விற்று திருப்புலீச்வரம் எனும் சிவன் கோயிலில் திருப்பணியைத் தொடர்ந்தார்.  

விற்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் கணம்புல்லை அறுத்து விற்று அதில் வரும் வருமானத்தில் விளக்கேற்றினார்.  அதனால் அவர் கணம்புல்லர் என அழைக்கப்பட்டார். கணம்புல்லும் விற்காத போது, தன் தலைமுடிக்குத் தானே தீ  வைத்து அதையே விளக்காக்கி ஈசனருள் பெற்றார். தனது அதிதீவிர பக்தியால் ஈசனின்  அருளைப் பெற்ற கணம்புல்லர், தனது பிறவிப் பயனை நீங்கி அழியா சிவபதம் பெற்றார் என்று பெரிய புராணம் கூறுகிறது.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள பேளூர் (இருக்கு வேளூர்)தன்தோன்றீஸ்வரர் கோயிலில் நந்தி முன்பு, திருவிளக்கை கையில் ஏந்தியவாறு கணம்புல்ல நாயனாரின் சிலை உள்ளது.

இறைபக்தியில் இமயமாய் உயர்ந்தவர்கள்  நாயன்மார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஈசனை மேவுவதில் விஞ்சி நிற்கிறார்கள். தவிர சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் பக்தியாளர்கள் சைவம் வளர்த்ததையும் நாயர்மார் சரிதங்கள் காட்டுகின்றன. கணம்புல்லர் தன் முடிஈந்தும் திருவிளக்கு எரியச் செய்தது பக்தியின் வைராக்கிய நிலையை வெளிப்படுத்துகிறது.


காண்க:
கணம்புல்ல நாயனார்
தாராசுரம் சிற்பத்தில் கணம்புல்லர்
பெரியபுராணம்
நக்கீரன் கட்டுரை
கணம்புல்லர் சரிதம் (வீடியோ)
தமிழ் களஞ்சியம்

சித்ராவின் கேள்வி... சிந்தனைக்கு வேள்வி!


                      "எல்லோரும் சந்தோஷத்தை தேடுகிறார்கள்; வசதியாய் வாழ பொருளைத் தேடுகிறார்கள் ஆனால் நான் உண்மையான அப்பா, அம்மாவைத் தேடுகிறேன்" -  இப்படிச்  சொன்ன அந்தச்  சிறுமியின் பெயர் சித்ரா; வயது 14 அல்லது 15 இருக்கலாம். முகத்தில் பரிதாபத்தையும் பேச்சில் ஏமாற்றத்தையும் கொண்டு தொடர்ந்தாள் அச்சிறுமி. பார்வையாளர்களையும், நிகழ்ச்சி அமைப்பாளரை அவரது குரல் கட்டிப் போட்டது.

                       "அறியா வயதில் என் குடிகார அப்பாவுக்கும் முரண்டு பிடிக்கும் அம்மாவுக்கும் நடக்கும் தினசரி சண்டை. எனக்கும் என் அண்ணனுக்கும் பார்த்துப் பார்த்து மனதில் வெறுப்பும் பயமுமே நிறைந்திருந்தது. ஒரு நாள் இருவரும் திரும்பவும்  புதிதாக திருமணம் செய்து கொண்டார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. என்னை (அம்மாவின் அம்மா) பாட்டியும், என்  அண்ணனை (அப்பாவின் அம்மா) வளர்த்தார்கள். பத்து வருடங்களுக்கு பிறகுதான் எனக்கு ஒரு அண்ணன் இருப்பதை, அதுவும் ஒரு சுற்றுச்சுவர் குறுக்கில் இருந்த பள்ளிக்கூடத்தில் இருப்பதையும் அறிந்தேன். எனக்கு ஒரு அண்ணன் இருப்பதைக்  கேட்டு மனதில் சந்தோஷம். ஆனால் பார்க்க முடியவில்லை.  10 கி,மீ. தூரத்தில் வளர்ந்துவரும் அவனை நான் இதுவரை பார்த்ததே இல்லை''...

                        தன்னை வளர்க்கும் பாட்டி குடிப்பழக்கம் உள்ளவராய், உடல் வலு இல்லாதவளாய் வேண்டா வெறுப்பாய் இருப்பதை உணர்ந்த சித்ரா அரங்கத்தை நோக்கி கேட்ட கேள்வி அரங்கத்தையே நிசப்தத்திலும்  எல்லோரின் மனங்களையும்  துக்கத்திலும்  நிறைந்தது.

                        "பாட்டிக்கு பிறகு என் எதிர்காலம் என்னவாகும்? " அழுகையும் ஆவேசமாய் வெளிவந்த அவளது குரல் சமுதாயத்தை குற்றவாளிக்   கூண்டில் நிறுத்தியது;பார்வையாளர்கள் பலரின் கண்களில் நீர் ததும்பியது. சிலர் வெளிப்படையாகவே கட்டுப்படுத்த முடியாமல்  கண்ணீர் விட்டு அழுததையும் காணமுடிந்தது.

                       நிகழ்ச்சி அமைப்பாளர் ஒலிபெருக்கியை (மைக்)  மேசைமீது வைத்துவிட்டு வெளியேறுகிறார். அரங்கமே அதிர்ச்சியில் உறைந்ததுபோல் அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர் திரும்புகிறார்.  அவரது நடையில், முகத்தில் சித்ராவின் கேள்விக்கு விடை கண்ட உறுதி பிரதிபலித்தது.

                      -மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி, கடந்த ஒரு வருடத்திற்கு முன் தர்மபுரியில் நடந்த ஜெயா டிவியின் 'மக்கள் அரங்கம்' ஆகும். நிகழ்ச்சி அமைப்பாளர்: பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான விசு அவர்கள்.

                       இன்று சித்ரா +2 படிக்கும் பெண்.  தனது வாழ்க்கையில் நம்பிக்கை ஒழி ஏற்றிய விசுவை அவள் அப்பாவாகவே பார்க்கிறாள்; தனக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சாரதா ஆசிரமத்தை கோயிலாகவே காண்கிறாள்.

                      விசு, ஜெயா டிவி, சாரதா ஆசிரமத்  துறவிகள் இருக்கும் திசையை நோக்கி எனது வணக்கங்களை  சமர்ப்பிக்கிறேன்.

                      சித்ராவை  போல் எத்தனைச் சித்ராக்களுக்கு விசு மாதிரி அப்பாக்கள் கிடைப்பார்கள்?  இல்லை, கோயிலாக சாரதா ஆஸ்ரமங்கள்  அமையும்?   நாம் ஒவ்வொருவரும் நல்ல தந்தையாக, நல்ல தாயாக, நல்ல ஆசிரியனாக, நல்ல குடிமகனாக, நல்ல தேசபக்தனாக மாறத்தான்  வேண்டும்.

-ம.கொ.சி.ராஜேந்திரன்.

19.11.10

வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை



ஜான்சி ராணி லக்ஷ்மிபாய்
பிறப்பு: நவ. 19 (1828)

வீரத்தின் மறு உருவமான ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் பிறந்த வருடம் 1834. இவரது வீரதீரச் செயல்கள், மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் அவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

லக்ஷ்மிபாய், (நவம்பர்  19, 1828 – ஜூன் 17, 1858) வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் ராணி. 1857 முதல் இந்திய சுதந்திரப் போரில் பெரும் பங்காற்றி இந்தியாவில்  பிரித்தானியரின்  ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

1828ம் ஆண்டளவில் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. தனது 4 வயதில் தாயை இழந்தார்.

ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842ல் மணி கர்ணிகாவை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. மணிகர்ணிகா லக்ஷ்மிபாய், ஜான்சியின் ராணியானார். 1851ல் அவருக்குப் பிறந்த மகன் 4 மாதங்களில் இறந்து போனது.  1853ல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். இதனால் தனது நாட்டின் வாரிசு வேண்டித் தனது தூரத்து உறவினச் சிறுவனான தாமோதரராவ் என்பவனைத் தத்தெடுத்தார். நவ. 21, 1853 ல் மன்னர் இறந்தார். அதையடுத்து தத்துபிள்ளையை ஆட்சியில் அமர்த்தினார்.

அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி இந்த தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார்.  "ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்" என உரிமை (வாரிசுரிமை சட்டம்)  கொண்டாடி வந்த பிரித்தானியர் ஜான்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரித்தானியர், அரண்மனையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர். ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமிபாய்.
பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்.

தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும், மிகத் துணிச்சலுடனும், புரட்சிவீரர்  தாந்தியாதோபே  உடன் இணைந்து  போர் புரிந்தார். 1858 ம் வருடம், ஜூன் மாதம் 18 ம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி.

பாரத சரித்திரத்தில் பெண்களின் பங்களிப்புக்கு அற்புதமான உதாரணம் ஜான்சி ராணி லட்சுமிபாய். இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகப் போராடிய மகளிரின் பங்களிப்புக்கும் ஜான்சிராணி உதாரணம்.


காண்க:
 .