நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.2.11

தமிழின் மொழிஞாயிறு

 



தேவநேயப் பாவாணர்
 பிறப்பு: பிப். 7
 "மொழிஞாயிறு" என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 1902, பிப். 7ம் தேதி நெல்லை மாவட்டம்சங்கரநயினார் கோயிலில், ஞானமுத்தன் - பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். அதனால் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியால், வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசெளரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளியில் பயின்றார்.
பின்னர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.
1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். பின்னர் பி..எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்..எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை.
பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லைமுகவை மாவட்டத்திலுள்ள சீயோன் மலை உயர்நிலை தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பின்லே கல்விச்சாலையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் சேலம் நகராண்மைக் கல்லூரியிலுமாகப் பற்பல இடங்களில் பணிபுரிந்தார்இஃது இவரது சொல்லாய்வுக்கு உறுதுணையாய் இருந்தது. வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் ராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்மொழிப் புலவராகிய பாவாணர் வீட்டில் உலக மொழிகளில் உள்ள அனைத்து அகராதித் தொகுப்புகளும் இருந்தன. பாவாணர் தாமே முயன்று பல மொழிகளையும் கற்றார். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர் என அறிஞர் கூறுவர்.
சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியினை ஆராய்ந்து அதில், ஆயிரக் கணக்கான தென் சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும் தமிழ்ச் சொல் மறைப்பாகும் என பாவாணர் சுட்டிக்காட்டினார்.
காலமெல்லாம் பாவாணர் சொல் வழக்காறுகளைத் தொகுத்தார். அவர் தொகுத்த சொற்களஞ்சியச் செல்வத்தினைத் தாம் எழுதியவற்றில் வாரி வழங்கினார். எழுதுவது போலவே பேசுவார். அவர் நூல்கள் போலவே உரையாடலிலும் ஊடகமாகச் சொல்லாய்வு தலைதூக்கி நிற்கும். பாவாணரைப் பற்றி, 'சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று யாம் உண்மையாகவே கருதுகின்றோம்" என மறைமலையடிகளார் குறிப்பிடுகிறார்.
பலசொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்று பலர் கூறியபோது அதனை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர். "புத்தகம்" எனும் சொல் வடசொல்லில் இருந்து வந்ததாகக் கூறுவர். இதனை மறுத்து பாவாணர், "புத்தகம்" என்னும் சொல் "பொத்தகம்" என்பதன் வழிவந்த சொல்லாகும். அதாவது புல்லுதல் - பொருந்துதல், புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொட்டு, பொத்துதல் - பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து - பொத்தகம் - பொத்திய (சேர்த்தல்) ஏட்டுக்கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி என விளக்கி இஃது தூய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார்.
சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் பாவாணர். "மொழியாராய்ச்சி" என்ற பாவாணரின் முதற்கட்டுரை, செந்தமிழ்ச்செல்வி ஜூன் - ஜூலை திங்களிதழில் 1931ம் ஆண்டு அவரது 29ம் அகவையில் வெளிவந்தது. "உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு" என்ற அவரது இறுதிக் கட்டுரை அதே இதழில் 1980ம் ஆண்டு டிசம்பர் திங்களில் வெளிவந்தது. இருப்பினும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை நகரில் 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியபோது வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்றதும், பாவாணரால் மாநாட்டரங்கில் படிக்கப்பெற்றதும் ஆகிய கட்டுரை, "தமிழனின் பிறந்தகம்" என்னும் கட்டுரையாகும்.
மாநாட்டு அரங்கில் இக்கட்டுரைக்கு பாவாணர் விளக்கம் கூறிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது 79ம் அகவையில் இயற்கை எய்தினார்.  
தொகுப்புக் கலைத்தோன்றலாகிய பாவாணர் அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டுழைத்தார். அப்பணி வளர்ந்து கொண்டே இருந்ததுஅவரது மூச்சின் ஓய்வில்தான் அத்தொகுப்பு முடிவுற்றது. வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தார் 

-முனைவர் சி.சேதுராமன்
நன்றி: தினமணி- தமிழ்மணி
காண்க:
.

5.2.11

குருவுக்கு பெருமை சேர்த்த நாயனார்


அப்பூதி அடிகள் நாயனார்  
திருநட்சத்திரம்: தை -  22 - சதயம்

அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர்,  அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான  திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறைநம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது. 

தமது ஆதர்ஷ நாயகர் பெயரில் தான தருமங்களும் தண்ணீர்ப் பந்தல்களும்   மடங்களும் நடத்திவந்த அப்பூதி அடிகளின் பெருமை திருநாவுக்கரசரையும் எட்டியது. திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். யாரப்பா அந்த திருநாவுக்கரசர் என்று அப்பூதி அடிகளிடமே கேட்க, இதுகூடத் தெரியாமல் இருக்கலாமா என்று திருநாவுக்கரசரையே  கடிந்துகொண்டாராம் அப்பதி அடிகள். பிறகு உண்மை அறிந்த அப்பூதியடிகள், பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு செல்லுமாறு வேண்டினார்.

அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் திருநாவுக்கரசன் (தனது மக்களுக்கெலாம் தனது ஆதர்ஷ நாயகர் பெயரையே வைத்திருந்தார் அப்பூதி அடிகள்) பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை உணவுண்ண வருமாறு அழைத்தார்.

ஆயினும் முகக்குறிப்பால் உண்மை உணர்ந்த திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைத்தார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார். தமிழின் மந்திரச் சொல்லாற்றலுக்கு இன்றும் அந்தப் பதிகம் உதாரணமாகத் திகழ்கிறது.

சைவ அடியாரின் அடியாராகத் திகழ்ந்து மானிட சேவை ஆற்றிய அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரின் அடியொற்றி, நாயன்மார்களுள் ஒருவராக உயர்ந்தார். தெய்வீகத் தமிழின் பெருமையும் தனது மகன் மறுவாழ்வு பெற்றதன் மூலம் வெளிப்படுத்தினார். தனது மானசீக குருவாக வரித்துக்கொண்ட குருவுக்கே அறப்பணிகளாலும் அரிய வாழ்வாலும் பெருமை சேர்த்தவர் அப்பூதி அடிகள்.

காண்க:
.

3.2.11

மேடைத் தமிழில் மேவிய தலைவர்




அறிஞர் அண்ணாதுரை

நினைவுதினம்: பிப். 3

தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியவருமான, அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை மேடைப் பேச்சிலும் சட்டசபை பேசுகளிலும் வல்லவர். அவரது மேடைப் பேச்சுத் திறனே திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் அரசியல் களத்தில் முன்னணியில் கொண்டுவந்து நிறுத்தியது. இன்று அவரது நினைவுதினம். அவரது பேச்சாற்றல் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வோமே...

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சாக இருந்தாலும், சட்டமன்ற உரையானாலும், நாடாளுமன்ற உரையானாலும் எங்கும் நகைச்சுவையுடன் பேசி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்தார்.

சிலுவையும் சீடர்களும்:

ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா. அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?

மற்றொரு முறை திரு.வினாயகம் (காங்) எழுந்து, நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.  புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.


எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்:

1957-க்கு முன்பு காமராசரும்,  காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம் பெற்ற போதும், 1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்சிரசார் - அதன் அமைச்சர்கள் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும்  கிண்டலும் செய்தனர்.

அப்போது அண்ணா, நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

யாருக்காக இந்தக் குறள்?

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.  திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!  டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.

நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

திரும்பும் சொல்லம்பு!

ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து,  ''யுவர் டேஸ் ஆர் நம்பர்ட்'' (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, ''மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்'' (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம் மிகுந்திருந்தது.

***

அரசியல்ரீதியாக அண்ணாதுரையின் கருத்துகளில் மாறுபாடு உள்ளவர்களும் கூட, அவரது இனிய பேச்சாற்றலால் வசீகரிக்கப்பட்டனர். சமயோசிதமான பதில் கூறும் முறையால் எத்தகைய சிரமத்திலிருந்தும்  எளிதாகத் தப்புவதில் அண்ணாதுரை வல்லுனராக இருந்தார்.

அவரது திராவிட அரசியல்,  பிரிவினைவாதம்,  பகுத்தறிவு என்ற பெயரிலான இந்துமத விரோதம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, மொழிப்பற்று, மக்கள்நலன்  மீதான கவனம், தலைமை தாங்கும் பண்பு, சமூக சீர்திருத்த சிந்தனை   போன்றவற்றின் அடிப்படையில் பார்த்தால், அண்ணாதுரை மகத்தான தலைவரே.

எந்த ஒரு மனிதரிடமும் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் கவனம் கொண்டால், அவற்றை மட்டும் கிரகித்துக்கொள்ள முடியுமானால், நாம் ஒவ்வொருவரும் அறிஞர் அண்ணா போல உயர்வடைய முடியும்.

அண்ணாதுரை பிறந்த நாள்: 15.09.1909
அண்ணாதுரை நினைவுநாள்: 03.02.1969

காண்க:

கா.ந.அண்ணாதுரை (விக்கி)
C.N.ANNADURAI
அண்ணாவின் நகைச்சுவை
அண்ணாவின் கண்ணியம்
அண்ணாவின் நாடகநடை
அண்ணா சகாப்தம்
Anna and  Periyar - Cho .Ramaswamy
தாய்க்கு பெயர் சூட்டிய தனையன்
.
 

1.2.11

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்


பம்மல் சம்பந்த முதலியார்
பிறப்பு: பிப். 1

தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம்.

மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர,  மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.

சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்த பிறகே தமிழில் நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873, பிப். 1 ம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள். "நாடக உலகப் பிதாமகர்" என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர். 

சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார். தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.

வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891, ஜூலை 1ம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை" அன்றுதான் நிறுவப்பட்டது.

பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.

அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை".

அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா" என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.

அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.


மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை" எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.

நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.

அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி".  அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா".

மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.

"என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.

மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்" வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.

"என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி" என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்டு" செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).

மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.

சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.  பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.  நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள்.  நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.

"நாடகத் தந்தை" என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்" என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்" விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).


தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார்,  91வது வயதில், 1964,  செப். 24 ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு,  நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

- கலைமாமணி விக்கிரமன்
நன்றி: தினமணி (தமிழ் மணி-15.08.2010)


காண்க:
பம்மல் சம்பந்த முதலியார் (விக்கி)
பம்மல் சம்பந்தனார் (தமிழ்வு)
தமிழ் நாடகத் தந்தை (திண்ணை)
Pammal Sambanda Mudaliar
பம்மல் சம்பந்தனார் (கூட்டாஞ்சோறு)
தமிழ் நாடகப் பேராசிரியர் (டோண்டுஸ்)
.

அரசியலில் ஓர் அபூர்வ வைரம்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பிறப்பு: பிப். 1
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர்.​ 1895-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓமந்தூர் என்ற ஊரில் பிறந்தார்.​ இவர் தெலுங்கு பேசுகின்ற ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்.​ நல்ல எழுத்தாளர்,​​ ராஜதந்திரி,​​ வக்கீலுக்குப் படித்தவர்.​ 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று வளர்ந்ததற்கு இவர் ஒரு முக்கிய காரணம்.​ இவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆச்சார்ய கிருபளானி உட்பட பலர் முயற்சி செய்தார்கள்.

தேர்தலில் என்னுடைய ஒத்துழைப்பு தேவை என்றால் இரண்டு நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.​ ஒன்று விளைச்சல் சரியில்லாத நிலங்களுக்கு வரி வசூல் செய்வதை ரத்து செய்வது,​​ மற்றொன்று ​ பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறப்பது. 
இந்த இரண்டையும் செய்யாத வரையில் எந்தத் தேர்தலிலும் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.​ ஓமந்தூரார் சொன்ன இரண்டையும் அன்றைய அரசு செய்யவில்லை.

சோஷலிஸ்ட்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஓமந்தூரார் காங்கிரசுக்கு எதிராகப் போக முடியாது என்று சொல்லிவிட்டார்.​ அதற்கு அவர் சொன்ன காரணம்:​ "நான் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கு,​​ நானே எப்படி கெடுதல் செய்ய முடியும்.'

இதுபோன்று மன உறுதியிருந்த காரணத்தால்தான் 1952- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சோதனையில் தமிழ்நாட்டில் ஓமந்தூரார் காங்கிரûஸ காப்பாற்றினார்.​ மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.​ தமிழ்நாட்டில் மட்டும் அந்த நிலை ஏற்படவில்லை.

அவர் காலத்தில் சென்னை கார்ப்பரேஷனில் நடந்த ஊழலைப் பற்றி பலவாறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.​ அந்த ஊழலை விசாரிக்க அவர் ஒரு விசாரணைக் கமிட்டியை நியமித்தார்.​ எதற்கும் பயப்படாமல் நேர்மையாக நடக்கக்கூடிய ஓமந்தூராரின் தைரியத்தின் மீது எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு.

பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு,​ ஓமந்தூராரை சாணை பிடிக்காத வைரம் என்று குறிப்பிடுவார்.​ அதாவது நாசூக்காகப் பேசத் தெரியாதவர் என்று பொருள். எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார்.​ ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி இருப்பார்.​ ஆனால் பெருந்தன்மை,​​ உண்மை,​​ நாணயம்,​​ நேர்மை, ஒழுக்கம்,​​எளிமை ஆகியவற்றிற்குச் சொந்தக்காரர்.​அவர் மகாத்மா காந்திஜியைக்கூட ஏற்றுக் கொள்ளாதவர்.​ இந்தியாவிலே சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே நாணயமானவர் என்று சொல்லுவார்.​

பிரகாசத்தை முதல் மந்திரி பதவியிலிருந்து இறக்க வேண்டுமென்று மூதறிஞர் ராஜாஜியும்,​பெருந்தலைவர் காமராஜரும் ஏகமனதாக முடிவெடுத்தார்கள்.​ ஆனால் பிரகாசத்துக்குப் பதிலாக யாரைப்போடுவது என்று பிரச்னை வந்தபோது,​​ மூதறிஞர் ராஜாஜிதான்,​​ ஓமந்தூராரின் பெயரை பரிந்துரை செய்தார்.​ ஓமந்தூரார் முதல் அமைச்சர் பதவிக்கு முயற்சியும் செய்யவில்லை. விலகியும் போகவில்லை.​ எனவே தானாக தன்னை மதித்து வரும் பதவியை ஒருவித வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.

ஒரு துறவியின் மனப்பான்மையோடு முதல்வர் பதவியை அலங்கரித்தவர் என்பது ஓமந்தூராரைப் பற்றி அனைவரும் சொன்ன கருத்து. கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று பாரபட்சம் காட்டாமல் சட்டம் அனைவருக்கும் பொது என்று கருதி ஆட்சிக் கட்டிலில் இருந்தவர் ஓமந்தூரார். இவரைப் பதவயிலிருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரஸின் ஒரு பகுதியினர் குரல் எழுப்பியபோது, ராஜிநாமா செய்ய இவர் விதித்த ஒரே ஒரு நிபந்தனை என்ன தெரியுமா? "அடுத்த முதல்வரைத் தீர்மானிப்பது நானாகத்தான் இருக்கும்' என்பதுதான்.

குழந்தைகள் இல்லாத பரம்பரைப் பணக்காரரும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக் காரருமான குமாரசாமி ராஜாவைத் தனக்குப் பிறகு முதல்வராக்கிய கையோடு, ஓமந்தூரார் அரசியலில் இருந்தே விலகிவிட்டார்.

ஓமந்தூரார் பதவியில் இருந்த காலத்தில் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் சென்னை பொது மருத்துவமனையில் ​ அனுமதிக்கப்பட்டிருந்தார்.​ அந்த சமயம் அவர் மருத்துவர்களுக்குச் சில நிபந்தனைகளை விதித்தார்.​ ​

1. எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும் கவனிப்பு முறைகளும் தான் எனக்கும் கொடுக்கப் படவேண்டும்.​ எனக்கென்று தனியாக மருத்துகளோ, கவனிப்புகளோ, வெளிநாட்டிலிருந்து மருந்துகளையோ,​​ மருத்துவர்களையோ வரவழைக்கக் கூடாது.

2.​ எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்,​​ சிகிச்சைக்குப் பின் என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக் கூடாது.​ ​

அவர் கடைசி காலங்களில் வடலூரில் உள்ள வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.​ 1970ம் ஆண்டு இயற்கை எய்தினார்.  தற்போதுள்ள புதிய   தலைமைச் செயலகத்திற்கு தமிழக முதல்வர்,​ ஓமந்தூராரின் பெயரைத்தான் வைத்துள்ளார்.​ தமிழக அரசு சார்பில் ஓமந்தூரில் அவருக்கு 40 லட்சம் ரூபாய் அளவில் ஒரு நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட உள்ளது.

அனைத்தையும் துறந்து வள்ளலார் வழியில் ஓமந்தூரார் வடலூரில் தனது கடைசிக் காலத்தைக் கழித்து மறைந்தாலும், "அரசியல் தூய்மையானவர்' என்கிற பெயரை மட்டும் இவரிடமிருந்து பிரிக்க சரித்திரம் அனுமதிக்கவில்லையே...
-ராஜேஷ் 
நன்றி: முரண் சுவை/ தினமணிக் கதிர் (26.09.2010)

காண்க:
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (விக்கி)
O.P.RAMASWAMY REDDIYAR 
கனவாகிப் போகுமோ?

.