ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பிறப்பு: பிப். 1
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர். 1895-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓமந்தூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் தெலுங்கு பேசுகின்ற ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். நல்ல எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று வளர்ந்ததற்கு இவர் ஒரு முக்கிய காரணம். இவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆச்சார்ய கிருபளானி உட்பட பலர் முயற்சி செய்தார்கள்.
தேர்தலில் என்னுடைய ஒத்துழைப்பு தேவை என்றால் இரண்டு நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று விளைச்சல் சரியில்லாத நிலங்களுக்கு வரி வசூல் செய்வதை ரத்து செய்வது, மற்றொன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறப்பது. இந்த இரண்டையும் செய்யாத வரையில் எந்தத் தேர்தலிலும் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். ஓமந்தூரார் சொன்ன இரண்டையும் அன்றைய அரசு செய்யவில்லை.
சோஷலிஸ்ட்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஓமந்தூரார் காங்கிரசுக்கு எதிராகப் போக முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "நான் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கு, நானே எப்படி கெடுதல் செய்ய முடியும்.'
இதுபோன்று மன உறுதியிருந்த காரணத்தால்தான் 1952- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சோதனையில் தமிழ்நாட்டில் ஓமந்தூரார் காங்கிரûஸ காப்பாற்றினார். மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் அந்த நிலை ஏற்படவில்லை.
அவர் காலத்தில் சென்னை கார்ப்பரேஷனில் நடந்த ஊழலைப் பற்றி பலவாறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அந்த ஊழலை விசாரிக்க அவர் ஒரு விசாரணைக் கமிட்டியை நியமித்தார். எதற்கும் பயப்படாமல் நேர்மையாக நடக்கக்கூடிய ஓமந்தூராரின் தைரியத்தின் மீது எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு.
பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு, ஓமந்தூராரை சாணை பிடிக்காத வைரம் என்று குறிப்பிடுவார். அதாவது நாசூக்காகப் பேசத் தெரியாதவர் என்று பொருள். எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி இருப்பார். ஆனால் பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம்,எளிமை ஆகியவற்றிற்குச் சொந்தக்காரர்.அவர் மகாத்மா காந்திஜியைக்கூட ஏற்றுக் கொள்ளாதவர். இந்தியாவிலே சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே நாணயமானவர் என்று சொல்லுவார்.
பிரகாசத்தை முதல் மந்திரி பதவியிலிருந்து இறக்க வேண்டுமென்று மூதறிஞர் ராஜாஜியும்,பெருந்தலைவர் காமராஜரும் ஏகமனதாக முடிவெடுத்தார்கள். ஆனால் பிரகாசத்துக்குப் பதிலாக யாரைப்போடுவது என்று பிரச்னை வந்தபோது, மூதறிஞர் ராஜாஜிதான், ஓமந்தூராரின் பெயரை பரிந்துரை செய்தார். ஓமந்தூரார் முதல் அமைச்சர் பதவிக்கு முயற்சியும் செய்யவில்லை. விலகியும் போகவில்லை. எனவே தானாக தன்னை மதித்து வரும் பதவியை ஒருவித வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
பிரகாசத்தை முதல் மந்திரி பதவியிலிருந்து இறக்க வேண்டுமென்று மூதறிஞர் ராஜாஜியும்,பெருந்தலைவர் காமராஜரும் ஏகமனதாக முடிவெடுத்தார்கள். ஆனால் பிரகாசத்துக்குப் பதிலாக யாரைப்போடுவது என்று பிரச்னை வந்தபோது, மூதறிஞர் ராஜாஜிதான், ஓமந்தூராரின் பெயரை பரிந்துரை செய்தார். ஓமந்தூரார் முதல் அமைச்சர் பதவிக்கு முயற்சியும் செய்யவில்லை. விலகியும் போகவில்லை. எனவே தானாக தன்னை மதித்து வரும் பதவியை ஒருவித வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
ஒரு துறவியின் மனப்பான்மையோடு முதல்வர் பதவியை அலங்கரித்தவர் என்பது ஓமந்தூராரைப் பற்றி அனைவரும் சொன்ன கருத்து. கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று பாரபட்சம் காட்டாமல் சட்டம் அனைவருக்கும் பொது என்று கருதி ஆட்சிக் கட்டிலில் இருந்தவர் ஓமந்தூரார். இவரைப் பதவயிலிருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரஸின் ஒரு பகுதியினர் குரல் எழுப்பியபோது, ராஜிநாமா செய்ய இவர் விதித்த ஒரே ஒரு நிபந்தனை என்ன தெரியுமா? "அடுத்த முதல்வரைத் தீர்மானிப்பது நானாகத்தான் இருக்கும்' என்பதுதான்.
குழந்தைகள் இல்லாத பரம்பரைப் பணக்காரரும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக் காரருமான குமாரசாமி ராஜாவைத் தனக்குப் பிறகு முதல்வராக்கிய கையோடு, ஓமந்தூரார் அரசியலில் இருந்தே விலகிவிட்டார்.
ஓமந்தூரார் பதவியில் இருந்த காலத்தில் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயம் அவர் மருத்துவர்களுக்குச் சில நிபந்தனைகளை விதித்தார்.
1. எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும் கவனிப்பு முறைகளும் தான் எனக்கும் கொடுக்கப் படவேண்டும். எனக்கென்று தனியாக மருத்துகளோ, கவனிப்புகளோ, வெளிநாட்டிலிருந்து மருந்துகளையோ, மருத்துவர்களையோ வரவழைக்கக் கூடாது.
2. எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சிகிச்சைக்குப் பின் என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக் கூடாது.
அவர் கடைசி காலங்களில் வடலூரில் உள்ள வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1970ம் ஆண்டு இயற்கை எய்தினார். தற்போதுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு தமிழக முதல்வர், ஓமந்தூராரின் பெயரைத்தான் வைத்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஓமந்தூரில் அவருக்கு 40 லட்சம் ரூபாய் அளவில் ஒரு நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட உள்ளது.
அனைத்தையும் துறந்து வள்ளலார் வழியில் ஓமந்தூரார் வடலூரில் தனது கடைசிக் காலத்தைக் கழித்து மறைந்தாலும், "அரசியல் தூய்மையானவர்' என்கிற பெயரை மட்டும் இவரிடமிருந்து பிரிக்க சரித்திரம் அனுமதிக்கவில்லையே...
-ராஜேஷ்
நன்றி: முரண் சுவை/ தினமணிக் கதிர் (26.09.2010)
காண்க:
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (விக்கி)
O.P.RAMASWAMY REDDIYAR
கனவாகிப் போகுமோ?
.
3 கருத்துகள்:
தமிழக அரசும், இந்திய அரசும் அவரது தியாகத்தையும், ஊழலற்ற நல்லாட்சியையும் இருட்டடிப்பு செய்து விட்டன. ஒன்றுமே சாதிகாதவர்கள் பெயரில் பேருந்து நிலையம், விமான நிலையம்,மருத்துவ மனைகள்,பல்கலைகழகம் என சாதிய ஓட்டுக்காக செய்கின்றன. ஆனால் முதல்வரின் முதல்வர், உத்தமர் ஓ.பி ராமசாமி ரெட்டியாரின் பெயரில் சொல்வது மாதிரி எதுவும் செய்யவில்லை. வெட்கம் கெட்ட அரசியல் நாகரிகம்.
தமிழக அரசும், இந்திய அரசும் அவரது தியாகத்தையும், ஊழலற்ற நல்லாட்சியையும் இருட்டடிப்பு செய்து விட்டன. ஒன்றுமே சாதிகாதவர்கள் பெயரில் பேருந்து நிலையம், விமான நிலையம்,மருத்துவ மனைகள்,பல்கலைகழகம் என சாதிய ஓட்டுக்காக செய்கின்றன. ஆனால் முதல்வரின் முதல்வர், உத்தமர் ஓ.பி ராமசாமி ரெட்டியாரின் பெயரில் சொல்வது மாதிரி எதுவும் செய்யவில்லை. வெட்கம் கெட்ட அரசியல் நாகரிகம்.
True
கருத்துரையிடுக