நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.12.10

மௌனமே வழிபாடாய்க் கொண்டவர்


வாயிலார் நாயனார்
திருநட்சத்திரம்:
மார்கழி 1 - ரேவதி
(டிச. 16) 

வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.  இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும்.

இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்
- என்று கூறுகின்றார் சேக்கிழார்.

இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும். தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது.

வாயிலார் நாயன்மாருக்கு திருமயிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.

பக்திக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை; அமைதியான அன்பு வழியே போதும் என்பதை வாயிலார் சரிதம் காட்டுகிறது.

காண்க:

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறந்த தெளிவுரை முதல் முறை அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

கருத்துரையிடுக