நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

27.2.11

மழலை இலக்கியம் படைத்த மாமா


ஆனந்த்  பை

மறைவு: பிப். 24


அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை.

கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா - சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற ஆனந்த் பை,  1954  ல் 'மானவ்' என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்டார். பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'இந்திரஜால்' காமிக்ஸ் வெளியீட்டு பிரிவில் பணி புரிந்தார். 

1967  ல் இவரது மனக்கண்ணைத் திறக்கும் ஒரு  நிகழ்ச்சி நடந்தது.  தூர்தர்ஷன்  நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட பதில் அளித்த குழந்தைகள்,  நமது இதிகாசமான ராமாயணத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். ஸ்ரீ ராமனின் தாய் பெயர் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.

நல்ல ஊதியம் தரும் வேலையைக் கைவிட்டு, 'அமர் சித்திரக் கதா'  நிறுவனத்தை அதே ஆண்டில்  தொடங்கினார். பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்திய புக் ஹவுசின் ஜி.எல்.மிர்ச்சந்தனி ஆனந்த் பைக்கு கை கொடுத்தார். பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார் ஆனந்த் பை.

ராமாயணம்,  மகாபாரதம்,  பாகவதம் கதைகள் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  நமது நாட்டின் மன்னர்கள்,  வீரர்கள், புலவர்கள், ஆன்மிக ஞானிகள், துறவிகள், சமயச் சான்றோர்கள், தொண்டுள்ளம் படைத்த மகான்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் குறித்த படக்கதைகளை அமர் சித்திரக் கதா நிறுவனம் வெளியிட்டது.  தற்போது, 440  தலைப்புகளில் 8.6  கோடி காமிக்ஸ் புத்தகங்களை, இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த சித்திரக் கதை படித்து வளர்ந்த குழந்தைகளின் ஞானம் பாரதப் பாரம்பரியம் குறித்த தெளிவுடன் விசாலமானது.

1969 ல் ஆனந்த் பை நாட்டின் முதல் கார்டூன் சிண்டிகேட் நிறுவனமான 'ரங் ரேகா பியுச்சர்ஸ்' நிறுவினார்; 1980 ல் 'டிவிங்கிள்'  என்ற ஆங்கில குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதன்மூலமாக லட்சக் கணக்கான குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தார்.

ராமுவும் சாமுவும், கபிஷ், லிட்டில் ராஜி, பேக்ட் பேண்டசி, பன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள்  ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவை பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் வெளியாகி, மழலைகளை மகிழ்வித்தன. தமிழில் வெளியான பைக்கோ  நிறுவனத்தின்  'பூந்தளிர்' மாத இதழ், அமர் சித்திரக் கதா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இக்கதைகளை தமிழில் (தமிழாக்கம்: வாண்டுமாமா) வெளியிட்டது.

'ஏகம் சத் (இறைவன் ஒருவரே)', 'வெற்றிக்கு ஏழு பாதைகள்' ஆகிய இரு வீடியோ படங்களையும் ஆனந்த் பை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் நூல்கள், ஆளுமை வளர்ப்பு நூல்களையும் பை எழுதியுள்ளார். தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை.

இவரது வாழ்வே, நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவு படுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த  வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால்  'பை மாமா' ஆனார்.

குழந்தைகள்  இலக்கியம் படைப்பதில் பாரம்பரியம் காத்த ஆனந்த் பை, கடந்த பிப். 24  ம் தேதி மறைந்தார். ஆயினும், அவர் படைத்த அமர் சித்திரக் கதைகள் உள்ள வரையிலும் அவர் என்றும்,  புதிய புதிய  குழந்தைகளின் வாசிப்பில் வாழ்வார்.

-குழலேந்தி

காண்க:







.

1 கருத்து:

virutcham சொன்னது…

கபீஷ் கார்டூன் இவருடையதா ?
முதன் முதலில் சிறு வயதில் இதை மலையாள பூம்பாற்றாவில் பார்த்து இதை சுயமாக வாசித்து விட வேண்டும் என்று நாலு நாட்களுக்குள் மலையாளம் வாசிக்கக் கற்று எழுத்துக் கூட்டி அதை வாசித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. ஒரு மொழியையே என்னைக் கற்றுக் கொள்ள வைத்த கார்டூன் கபீஷ்.

ஆனந்து பையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

கருத்துரையிடுக