நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

8.10.11

திருநீற்றுக்கு அடியார்

 
நரசிங்க முனையரைய நாயனார்
(திரு நட்சத்திரம்: புரட்டாசி - 21 - அவிட்டம்)

சோழநாட்டிற்கும் தொண்டைநாட்டிற்கும் இடையில் உள்ள நாட்டிற்கு நடுநாடு என்று பெயர். அந்நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டில் தான் சமயக்குரவர்களாகிய நால்வர்களில் திருநாவுக்கரசர் சுவாமிகளும்,  சுந்தரமூர்த்தி நாயனாரும் அவதரித்தனர்.
திருமுனைப்பாடி மன்னர் மரபில் நரசிங்க முனையரைய நாயனார் அவதரித்தார். இவர் திருநீற்றின் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தார். சிவபெருமானுடைய கோயில்தோறும் வழிபாடுகள் வழுவாது நடைபெறுமாறு செய்தார். திருவாதிரை தோறும் சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்வதோடு அடியவர்களுக்கு அன்னமளித்து ஒவ்வோர்  அடியவருக்கும் ஒரு நூறு பொன் கொடுத்து வணங்குவார்.
ஒரு நாள் திருவாதிரை நாளில் வழக்கம் போல அடியார்கள் வந்தார்கள். ஒருவர் தீய எண்ணம் கொண்டவராகவும், காமக்குறியுடனும் காணப்பட்டார். அவரைக் கண்டு மற்ற அடியவர்கள் ஒதுங்கினர். அதைப் பார்த்த நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி, “நீங்கள் இவ்வாறு இகழக் கூடாது. தீயவராக இருந்தாலும் திருநீறு பூசியவர்களை இகழ்ந்தால்  நரகம் அடைவது நிச்சயம். எனவே, எவராக இருந்தாலும் திருநீறு பூசியவரைப் பூசிக்க வேண்டும்என்று கூறினார். அதோடு மட்டுமின்றி அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொன் கொடுத்து, கனியமுதன்ன இனிய மொழி கூறி விடைகொடுத்தனுப்பினார்.
இந்தக் கதையில் தீயவராக இருந்தவருக்கு திருநீறு  அணிந்த காரணத்தினால் மன்னன் இருநூறு பொன்கொடுத்து, மதித்த செயல் பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. இந்நிகழ்விற்கு திருமுருக கிருபானந்த வாரியார் தரும் விளக்கம் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
“திருநீறு பூசினால் யாவராயினும் அவரை வணங்கி வழிபட வேண்டும் என்பதை நரசிங்க முனையரைய நாயனார் உலகமறியக் காட்டியருளினார். அது சரிதானா? என்று ஐயுறுவாரும் உளர். அரசாங்கத்தில் வேலை பார்ப்போரில் ஒழுக்கமில்லாதவர், அரசாங்க உடையுடுத்து வருவாராயின் அவரை ஏனைய குற்றங் குறைகளைக் கவனியாது, அந்த உத்யோக உடை கண்டு அவரை மதிக்கின்றோமல்லவா? அதேபோல நீறணிந்தார்,  அந்தரங்கத்தில் தவறுளராயினும் அவர் அணிந்த திருநீற்றை மதித்து வணங்குதல் வேண்டும் என உணர்க என்று கூறுகின்றார்.
திருநீறு அணிந்தவரை மதிக்கும் பழக்கம் குற்றம் குறைகளை காணும் குணத்திலிருந்து நம்மை விடுதலை செய்கின்றது என்பது இவரது புராணத்தின் மூலமும், வாரியாரின் விளக்கத்தின் மூலமும் உணர முடிகின்றது. 

நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர்தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர், சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார்.
நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்க முனையரையர்   அவரை அரசத்  திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றார்.

-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:
நரசிங்க முனையரைய நாயனார் (தினமலர்)

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

NARASINGA MUNAIYARAYA NAIYANAR

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் (வினவு)

.
 

1 கருத்து:

Pmuthuraj சொன்னது…

பயனுள்ள பக்தி பதிவு.
தொடரட்டும் தங்களின் தொண்டு.
அன்பன்,
ப.முத்துராஜ்

கருத்துரையிடுக