நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.10.10

இறைவன் உருவாக்கிய வீடு

                                                                      
                        "காக்கைச்  சிறகினிலே நந்தலாலா... நின்றன் கரியநிறம் தோன்றுதய்யா நந்தலாலா" என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளைப்  படிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

                         காக்கைச் சிறகுகளின் கரிய நிறத்திலும்,  பசுமை மரங்களின் பச்சை நிறத்திலும்,  பறவைகளின் கீச்சிடும் குரலிலும்,  தீக்குள் விரலை தீண்டும்போது ஏற்படும் இன்பத்திலும் எல்லாம் கவிஞன் இறைவனைக்  காண்கிறான்.

                         பஞ்சபூதங்களில் ஆன இவ்வுலகம், இந்த உடம்பு எல்லாம் ஒரே தன்மையைக் கொண்டவை  என்ற இயற்கையை மறந்து,  என்று மனிதன் தனது சுகத்துக்காக மற்ற உயிர்களை  அடிமைபடுத்தவும் அழிக்கவும் துணிந்தானோ, அன்றே மனிதன் மிருகமாக மாறத்  தொடங்கிவிட்டான். 

                                      ஓடுகிற நீரில்-
                                      கவி பாடுகிற குரலில்-
                                      நடனம் ஆடுகிற அழகில்-
                                      இறை தேடுகிற உயிர்களில்-
இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
 
அவர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசித்தார்கள். முல்லைக்கு தேர்  ஈந்த பாரி வள்ளல், புறாவுக்காக தசையைத் தந்த சிபி சக்ரவர்த்தி,  பசுவுக்காக  மகனையே தேர்க் காலிட்ட மனுநீதி சோழன்,  நாயையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற தர்ம புத்திரன்.. இவை நமது முன்னோர் நமக்கு வழங்கிச் சென்றுள்ள கதைகள். 

                         சமீப காலமாக "யானைகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்குகின்றன; சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து மனிதர்களை, கால்நடைகளைத்  தாக்குகின்றன"  என்ற செய்திகளை அடிக்கடி பத்தரிகைகளில் படிக்க நேர்கிறது. காடுகளை அழித்து வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதால் ஏற்படும் விளைவுகள் இவை.

                         இந்த பரந்த  உலகம் எல்லோரும் குடியிருக்கும் கோயில்; எல்லா உயிர்களும் வாழ இறைவனால் உருவாக்கப்பட்ட வீடு.  அதை மறந்துவிட்டு  உலகை மனிதன் ஆள்வதாக நாம் கொக்கரிக்கிறோம்.

                 "இறைவனை பிடித்தவர்கள் பட்டியலில்
                  அவன் பெயர் இல்லை; 
                  காரணம்
                  அவன் சாமி கும்பிடுவோன் அல்ல;
                  ஆனால்,
                  இறைவனுக்கு பிடித்தவர்கள் பட்டியலில்
                  அவன் பெயர் இருந்தது.
                  காரணம்
                  அவன் எல்லா உயிர்களையும் நேசிப்பதால்"

  -என்ற கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.
 
ம.கொ.சி.ராஜேந்திரன் 
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்
தமிழ்நாடு
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக