நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக