நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.12.11

முல்லைப் பெரியாறில் மூழ்கும் தேசிய உணர்வு

 
சிந்தனைக் களம்
 

1895ல் ஆங்கிலேயரான கர்னல் பென்னி குக்கின் விசாலமான பார்வையாலும்  விவேகத்தாலும் அவரது  மனைவியின் நகைகளை விற்றுக் கட்டிய அணை தான்,  கேரளாவும், தமிழ்நாடும் வளம் பெற உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணை குறித்து 'மலையாள மனோரமா' என்ற கேரளா செய்தித்தாள் 1979, அக்டோபர் 23 ம் தேதி சிறு நெருப்பைப் பற்ற வைத்தது. நிலநடுக்கம் குறித்த பீதியைக் கிளப்பிய அந்தச் செய்தியின் பலனாக அணையின் நீர் மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாய் மாறிப்போனது. கேரளாவின் ஆட்சிப் பீடத்திற்கு மாறி மாறி வரும் தேசியம் பேசும் காங்கிரஸ் கட்சியும், சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட்களும் 'எலியும் பூனையுமாகஇருந்ததை மறந்து முல்லைப் பெரியாறு அணையில் கைகோர்த்துக் கொண்டன.
தமிழகத்தில் நவகிரகங்களாய் திராவிட கட்சிகளும், தேசியத்தைக் கொண்டாடும் தேசிய கட்சிகளும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தன.  அரசியல்அமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி எடுத்த இரு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் 'விசாலமான'  தங்கள் மாநிலப்பற்றை வெளிப்படுத்தினர்.  ஒருபடி மேலாக, உச்சநீதி மன்ற நீதிபதியாய் இருந்த ஒருவரே கேரளாவில் மனிதச்  சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது கூடுதல் விஷயம்.  
தமிழக அரசியல்வாதி ஒருவர் வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு "அணையை உடைத்தாலோ அல்லது புதிய அணை கட்டினாலோ இந்திய தேசமே பல துண்டுகளாய்ச்  சிதறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
கேரளாவிலும், தமிழகத்திலும் முல்லைப்பெரியாறு விவகாரம் மக்களைப்  பிளவுப்படுத்தும் விவகாரமாக உருவெடுத்துக் கொண்டு  இருக்கிறது. கோவையிலும், சென்னையிலும்  மலையாள மொழிபேசும் மக்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. கேரள - தமிழ்நாடு எல்லைப்பகுதியான குமுளியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் குறையாத மக்கள் கேரளாவை நோக்கி ஊர்வலமாய் புறப்பட்டனர். தடுத்த காவல் துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். எந்த அரசியல்கட்சியின் பின்னணி இல்லாமலும் இந்த அளவு எண்ணிக்கையில் மக்கள் ஊர்வலம் செல்வதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், கல்லெறிதலில் ஈடுபடுவதும் இதுவரை தமிழகத்தில் நடந்திராத சம்பவங்கள்.    
கேரளாவில் நடந்த சம்பவங்களும் இதற்கு சற்றும்   குறைவானவை  இல்லை. சபரிமலை பக்தர்களைத்  தாக்குவதும் தமிழர்களின் கடைகளைச் சூறையாடுவதும்  தொடர்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 'தேசிய கட்சிகள்' என்ற போர்வையில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் நாட்டின் தலைமை சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன; புரிகின்றன.
சுதந்திரப்போராட்ட காலத்தின் போது மாநில வித்தியாசங்கள் பாராது மக்களும், தலைவர்களும் ஒன்றாக  நின்று ஆங்கிலேயரை எதிர்த்தனர் ரத்தம் சிந்தினர் தூக்குமேடை ஏறினர்; 1905ல்  வங்காளத்தை இரண்டாகப்  பிரிக்க நினைத்தபோது அதை எதிர்த்து நாடு முழுவதும் ஓரணியில் திரண்டனர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி தோல்வியை தழுவியது. "வந்தே மாதரமும்" "பாரத் மாதா கீ ஜெய்" கோஷமும் ஜாதி, மத, அரசியல், மாநில வேறுபாடுகளை தாண்டி மக்களை பாரதீயர்களாய் இணைத்தது;
அன்றைய தலைவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல், தேசிய சிந்தனையுடையவர்களாய் மட்டுமல்லாமல், தியாக சீலர்களாகவும் இருந்தனர். மக்களும் அவர்களின் வழி நடந்தனர். இன்றைய அரசியல்வாதிகளோ ஆங்கிலேய ஆட்சியாளர்களை 'நல்லவர்களாக'   மாற்றாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.
அரசியல் லாபங்களுக்காகவும், அதிகார சுகங்களுக்காகவும் இன்றைய எல்லா அரசியல் கட்சிகளும் (குறிப்பு: எல்லா அரசியல்வாதிகளும் இல்லை) எந்த விதத்திலும் தங்களை அடமானம் வைக்கவும்,  தங்கள் கொள்கைகளில் நீர்த்துப் போகவும் தயங்குவதே இல்லை.
இவர்களது இன்றைய அரசியல் சித்து விளையாட்டுகளில் மீறப்படுகிற விதிகளால் காணாமல் போவது, வெறும் மாநில நலன்கள் மட்டுமல்ல; இந்த தேசத்தின் இறையாண்மையும், தேசிய உணர்வும்தான் என்பதை நமது தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலை விட அரசு பெரியது; அரசை விட மக்களின் நலன் பெரிது அதாவது ஒரே தேசம் அல்லது ராஷ்ட்ரம் என்னும் உணர்வு பெரியது.  அவ்வுணர்வு முல்லைப் பெரியாறில் மூழ்காமல் காப்பாற்றுவதில் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அக்கறையும் இல்லை; ஆர்வமும் இல்லை.
அதை மாற்றி உண்மையுடன் கூடிய தேசிய உணர்வுள்ள தலைவர்களை சிந்தனையாளர்களை, தேச பக்தர்களை உருவாக்குவது, நல்ல பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல; நம்மைப் போன்ற  மக்களுக்கும் கடமை.
எப்போதோ, எங்கேயோ ஒரு சமயத்தில் கேட்ட ஒரு பாடல் இந்நேரத்தில் நினைவுக்கு வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்:
 "தொழில் செய்தாலும், கல்வி கற்றாலும்
 தேசத்தின் நன்மைக்கே
மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று!
                 
 
பாரதத் தாயைப்  பணிந்து வணங்கும் 
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே 
தூய மலர்கள் நாம்!"
-ம.கொ.சி.ராஜேந்திரன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக