நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.10.10

பிரிவினைவாதத்திற்கு பலியான பிரதமர்



இந்திரா காந்தி
.
நினைவு நாள்: அக். 31

.
.
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் குறிப்பிடத் தக்க ஆளுமை வாய்ந்த பெண்மணி இந்திரா காந்தி. முதல் பிரதமர் நேருவின் மகள் (பிறந்த நாள்: 19.11.1917) என்ற முன்னுரிமை காரணமாக காங்கிரஸ் கட்சியில் முன்னிலைக்கு வந்தாலும், தனது தலைமை தாங்கும் பண்பு காரணமாக, நாட்டை தீரத்துடன் வழிநடத்தினார். 1966  முதல் 1977  வரையிலும், 1980  முதல் 1984  வரையிலும் பாரதப் பிரதமராக இருந்தவர். அரசியல் ராஜதந்திரி என்ற பெயர் பெற்ற இவரால் தான், வங்கதேசம் என்ற நாடு  உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த பாகிஸ்தானை, 1971 போரில் முழுவதுமாகத் தோற்கடித்து  சரணாகதி அடையவைத்தவர்; அதன் காரணமாக, 'இந்தியாவின் நவீன துர்க்கை'  என்று வர்ணிக்கப்பட்டவர் இந்திரா.
.
.
பார்சி குடும்பத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டவர். ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இரு புதல்வர்களின் தாய். ராஜீவ் காந்தி, இவரது மறைவுக்குப் பின்  (1984 - 89 ) பிரதமராக இருந்தார். பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பிரிவினைவாதப் போரை துணிவுடன் முறியடித்தவர். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பயங்கரவாதிகள் முகாமிட்டவுடன், பின்விளைவுகளைப் பற்றிய அச்சமின்றி 'ஆபரேசன் ப்ளூஸ்டார்' என்ற அதிரடி நடவடிக்கையால் கோயிலை மீட்டார். அதற்கு பழி வாங்க, அவரது மெய்க்காப்பாளர்களான இருவர், இவரை 1984 , அக்டோபர் 31ல் சுட்டுக் கொன்றனர். ஒருகாலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டதன் பலனை இந்திரா அடைந்தார்;  நாடு நல்ல தலைவியை இழந்தது.
.
.
வங்கிகள் தேசிய மயமாக்கம்,  ஜமீந்தாரிமுறை  ஒழிப்பு,   பசுமைப் புரட்சி   உள்ளிட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர். என்றபோதும் ஜனநாயக நெறிமுறைகளை மீறும்வகையில் 1975ல் இவர் நாட்டில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இவரது வாழ்வில் ஒரு கரும்புள்ளியே. சுயநலன்  இன்றி அரசியலில் நீடிக்க முடியாது என்றபோதும், நாட்டுநலனை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தவர் என்று இந்திரா காந்தி பாராட்டப்படுகிறார். இவரது மறைவுக்குப் பிறகு நாட்டில்  ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை  இன்னும் நீங்காமல் இருப்பதே, இவரது ஆளுமைக்கு சான்று. இவர் உயிருடன் இருந்திருந்தால் இலகையில் தமிழர்கள்  சொல்லொனாக்    கொடுமைகளுக்கு ஆளாக  விட்டிருக்க மாட்டார் என்று பலரும் கூறுவதே இவரது ஆற்றலை வெளிப்படுத்தும்.
 
காண்க:
.

2 கருத்துகள்:

vijayan சொன்னது…

இந்திய ஜன நாயகத்தை கேவலப்படுத்தியவர். ஜன நாயக கட்சியான காங்கிரஸ் இந்திராவின் குடும்ப சொத்தாக மாறியது.காமராஜரை ஒழிக்க எண்ணி கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஒழித்தவர்,பிரதமர் பதவி நேரு குடும்பத்தின் பிறப்புரிமை என்று நம்பி சஞ்சய் போன்ற கேப் மாறிகளை வளர்த்தவர்.எல்லா எதிர்கட்சிகளையும் உடைத்தவர்.அகாலி தள் கட்சியை உடைத்து பிந்தரன்வாலா வை வளர்த்தார், பின்னர் அதே பிந்தரன்வாலா ஆட்களால் மாண்டார். தன்னை பிரதமர் பதவியில் அமர்த்திய காமராஜரை who is kamaraj என்று நன்றி மறந்து கேட்டவர்.

தேசமேதெய்வம் சொன்னது…

எந்த ஒரு மனிதருக்கும் உள்ள குறைபாடுகள் இந்திரா காந்திக்கும் இருந்தன என்பது உன்மைதான். வாசகர் விஜயன் கூறுவது போல, பல அரசியல் சிக்கல்கள் இந்திராவால் உருவாகின என்பதும் உண்மையே. எனினும், இந்தியாவின் வளர்ச்சியில் இந்திராவின் பங்கு கணிசமானது என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய ஊழல் காங்கிரஸ் அரசுடன் ஒப்பிட்டால், இந்திரா ஆட்சியின் சிறப்பு தெரியவரும்.

இந்த வலைப்பூ, நாட்டிற்கு பெரும்பங்காற்றியவர்கள் யாரெனினும் அரசியல் வேறுபாடின்றி அவர்களை பதிவு செய்ய விரும்புகிறது. அவர்களது குறைகளைத் தவிர்த்து, பெருமைகளைப் பட்டியலிடவே விரும்புகிறோம். ஆயினும் வாசகர்களது எதிர்வினைகள் நிச்சயமாக பதிவு செய்யப்படும். நமது பதிவுகள் பக்குவத்துடன் அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் மீது ஜெயவர்த்தன அரசு கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டபோது, உலக நாடுகளைப் பற்றிய கவலையின்றி, வான்வழியாக இலங்கையில் உணவுப் பொட்டலங்களைப் போட இந்திரா ஏற்பாடு செய்தார். துரதிருஷ்டவசமாக அவர் 1984 ல் கொல்லப்பட, இலங்கைப் பிரச்னை வேறுவழியில் திசை திரும்பி பல லட்சம் தமிழர்களின் அழிவில் முடிந்தது.

தனக்கு சரியென்று பட்டதை துணிவுடன் நிறைவேற்றியதில் இந்திரா பாராட்டப்பட வேண்டியவரே. இன்றைய குழப்பமான, ஊழல் மிகுந்த, பிரிவினை கோஷங்கள் மலிந்த நாட்டிற்கு இந்திரா போன்ற வலிமையான ஆட்சியாளர் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

கருத்துரையிடுக