நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

2.10.14

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

-லா.சு.ரங்கராஜன்


 ‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.

1936-இல் காந்தி சேவா சங்க அமைப்பாளர் கூட்டத்தில் காந்திஜி பேசுகையில், "காந்தியிசம் என்று நான் எதையும் உருவாக்கவில்லை. எந்த ஒரு சமய உள்பிரிவையும் விளக்க முற்படவில்லை. எந்த ஒரு தனி சித்தாந்தத்தையும் தோற்றுவித்ததாக உரிமை கொண்டாடவில்லை. அவ்வாறு தோற்றுவிக்க முயற்சி செய்யவும் விரும்பவில்லை. எவ்விதப் பொருள் கூறுகளையும் விரிவாகத் திட்டமிட்டு ஆய்வு செய்யாமல், சத்தியம், அகிம்சை எனும் நிரந்தர நியதிகளை நமது அன்றாட வாழ்வில் அனுசரிப்பதற்கும், எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீர்வுக்குப் பயன்படுத்துவதற்கும் என் வழியில் முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.

இந்து மதத்திலும், புத்த, ஜைன சமயங்களிலும் அகிம்சை வெவ்வேறு விதமாக அடிப்படைத் தத்துவமாகப் போதிக்கப்பட்டுள்ளது.  ‘அகிம்ஸா பரமோ தர்மஹ' (அகிம்சையே தலையாய நெறி) என்பது மகாபாரத வாக்கியம். அதனை காந்திஜி அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

ஆயினும், முனிவர்கள், சாதுக்கள், துறவிகள் போன்ற புனிதர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய தர்மமாகவே அகிம்சை பண்டைய காலத்தில் கருதப்பட்டு வந்தது. இந்த மனப்பான்மையை மாற்றி, அகிம்ஸா தர்மத்தைச் சமூகமும், நாட்டு மக்களும் பின்பற்றுவதற்கான வழிமுறையாக வகுத்தளித்ததுதான் காந்திஜி புகுத்திய மகத்தான புரட்சியாகும்.

"அரசாங்கமே கூட அகிம்சை அடிப்படையில் அமையப் பெறலாம், மக்கள் மனம் வைத்தால்” என்றார் அண்ணல் காந்தி. "பெருவாரியான மக்கள் அகிம்சையைப் பின்பற்ற முடியும் என்கிற என் முயற்சி, உலக வரலாற்றிலேயே ஒரு புதிய பரிசோதனை ஆகும்” என்று காந்திஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆயினும், ஒரு அரசாங்கம் முற்றிலுமாக அகிம்சை அடிப்படையில் அமைவது என்பது இயலாத காரியம் என்பதை அவர் பின்னர் உணர்ந்தார். "அரசாங்கம் அகிம்சையாளர்களின் தனியுரிமை ஆட்சி அல்ல. ஆகவே, முழுமையான அகிம்சாபூர்வ ஆட்சி முறை என்ற பொற்காலத்தை நான் இன்று கனவு காண்பதற்கில்லை.  அவ்வாறாயினும், ஒரு சமூகம் பெருமளவில் அகிம்சையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அத்தகைய சமூகத்தினரை ஆளும் அரசாங்கமும், சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதன் பொருட்டு, மிகக் குறைந்த அளவே வன்முறையைக் கையாளும். ஏனெனில், எந்த அரசும் அராஜகத்தை அனுசரிப்பதற்கில்லை அல்லவா?” என்றார்.

காந்திஜி ஒரு யதார்த்தவாதி. ஆகவே தான், தாம் வகுத்த அகிம்சை நியதிக்கு விதிவிலக்குகளையும் அளித்தார். "எந்த ஒரு உன்னதக் கொள்கையையும் எவராலும் நூற்றுக்கு நூறு சதவீதம் அனுஷ்டிக்க இயலாது. உடலோடு கூடிய இக வாழ்வில் இம்சையை அடியோடு தவிர்க்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

அவ்வப்போது அவர் அளித்த விதி விலக்குகளின் பட்டியல் வெகுநீளம்! உதாரணமாக, "கள்வர்கள், கொள்ளையர்கள், அத்துமீறி அக்கிரமாக நடந்து கொள்பவர் யாராயினும் அது அகிம்சையா, ஹிம்சையா என்ற கேள்விக்கு அத் தருணங்களில் இடமில்லை” என்றார்.

"பெண்கள் தமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பற்கள், நகங்கள், ஏன், கத்தியால்கூட அந்த அயோக்கியர்களைத் தாக்கலாம்” என்றார்.

"விஷ ஜந்துக்களையும், பாம்புகளையும், குரங்குகளையும், எலிகளையும், மக்களை அச்சுறுத்தும் தெருநாய்களையும் கொல்லலாம். விலங்குகளைக் காப்பாற்றும் பொருட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை நான் ஒருபோதும் ஒப்ப மாட்டேன்” என்று கூறினார்.

 ‘சத்தியாக்கிரகம்' எனும் தத்துவம் காந்திஜியின் கண்டுபிடிப்பு.  ‘சத்தியாக்கிரகம்',  ‘சத்தியாக்கிரகி' என்ற சொற் பிரயோகங்கள் பண்டைய வடமொழி நூல்களில் கூடக் கிடையாது.

ஸ்ரீராமர், பீஷ்மர், அரிச்சந்திரன் போன்றவர்களை  ‘சத்திய விரதன்',  ‘சத்திய சந்தன்' என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால்,  ‘சத்தியாக்கிரகி' (சத்தியத்தை நிலைக்களனாகக் கொண்டவர்) என்பது காந்திஜி உருவாக்கிய சொற் பிரயோகம்.

"தீமையைத்தான் எதிர்க்க வேண்டும், தீமை விளைவிப்பவனை அல்ல” என்பதே காந்திஜியின் சத்தியாக்கிரகக் கொள்கை.

சத்தியாக்கிரகம் என்பதன் கருத்தை காந்தி மகான் தோரோ நூலிலிருந்து கிரகித்தார் என்று கூறுவோர் உண்டு. ஹென்றி டேவிட் தோரோ (1817-1862) என்ற அமெரிக்க நூலாசிரியர் எழுதிய நூலில் அரசாங்கத்திற்கு எதிராகத் தனி மனிதனின் உரிமைகளைப் பற்றி அலசியுள்ளார்.

மக்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தவும், மக்கள் விரோத சட்டதிட்டங்களை எதிர்க்கவும் சட்ட மறுப்பு மேற்கொள்ளலாம் என்பது போன்ற கருத்துகளை முன்வைத்துள்ளார்.

ஆனால், காந்திஜி இந்திய ஊழியர் சங்க முக்கிய உறுப்பினரான பி. கோதண்டராவ் என்பவருக்கு 1935 செப்டம்பர் 10 அன்று எழுதிய கடிதத்தில் "நான் தோரோவின் நூல்களிலிருந்து சத்தியாக்கிரகக் கருத்தை கிரகித்தேன் என்று கூறுவது தவறு. தென்னாப்பிரிக்காவில் எனது சத்தியாக்கிரக இயக்கம் வெகுவாக முன்னேறிய பிறகே நான் தோரோவின் ‘சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்' என்கிற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதன் பிறகு ஆங்கிலேய வாசகர்களுக்குப் புரிவதற்காக, குஜராத்தி சொல்லான சத்தியாக்கிரகத்தை,  ‘சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்' என்று குறிப்பிடத் தொடங்கினேன். ஆனால், அந்த சொல் எனக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. ஆகவே, பின்னர்,  ‘சிவில் ரெஸிஸ்டன்ஸ்' (சட்ட மறுப்பு) என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கினேன்' என்று விளக்கியுள்ளார்.

நந்தனார் சரித்திரத்தை 1927-இல்  ‘யங் இந்தியா' வார இதழில் படித்த காந்திஜி, "நந்தனார் தன்னை வருத்திக் கொண்டாரே தவிர, தன்னை இழிவு செய்தவர்களை எதிர்க்கவோ, கடிந்துரைக்கவோ இல்லை. தனது தூய பக்தியால் இறுதியில் வெற்றி பெற்றார் என்பது சத்தியாக்கிரகிக்கு ஓர் எடுத்துக்காட்டு” என்றார்.

 ‘சத்தியாக்கிரகம், நியாயமான கோரிக்கைகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். சத்தியாக்கிரகிகளுக்குக் கடவுள் பக்தி மிக அவசியம். சத்தியாக்கிரகிகளுக்குக் கடவுள்தான் துணை' என்றெல்லாம் காந்திஜி வலியுறுத்தியுள்ளார்.

19.2.1925 தேதியிட்ட  ‘யங் இந்தியா' வார இதழில் பின்வருமாறு முத்திரை குத்துகிறார்: "நான் படித்தறிந்த தமிழ்ப் பாடங்களில் ஒரே ஒரு பழமொழி மட்டும் என் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்துள்ளது.  ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பதே அப் பழமொழி. சத்தியாக்கிரகம் எனும் எனது தத்துவம் அந்தப் பழமொழி உணர்த்தும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே ஆகும்”.


‘ஒத்துழையாமை' என்ற சொல்லை முதன்முதலாக அரசியலில் புகுத்திப் புதுமை விளைவித்தவரும் மகாத்மா காந்திதான்.

1919 நவம்பரில் தில்லியில் ஒரு கிலாபத் முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றியபோது,  பிரிட்டிஷ் அநீதி அரசுடன் இனி ஒத்துழைக்க மாட்டோம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது தான் அதற்கு  ‘ஒத்துழையாமை இயக்கம்' என்று பெயர் சூட்ட வேண்டுமெனத் தமக்குத் திடீரென்று தோன்றியதாக காந்திஜி தமது சுயசரிதையில் கூறியுள்ளார்.

 ‘ஒத்துழையாமை என்பது சத்தியாகிரகத்தின் ஒரு கிளை' என்றும், "சத்தியாக்கிரக ஆயுதக் கிடங்கில் ஒத்துழையாமை ஒரு முக்கிய ஆயுதம்” என்றும் காந்திஜி விளக்கம் அளித்துள்ளார்.

பொருளியல் பற்றித் தமக்கு அதிகம் தெரியாது என்று காந்திஜி கூறிவந்த போதிலும் பொருளாதார மேதை பெந்தாம் அறிவித்த  ‘பெரும்பாலான மக்களின் அதிகபட்ச நலன்’ (The greatest good of the greatest number) என்கிற குறிக்கோளை காந்திஜி கண்டனம் செய்தார். "அவ்வாறெனில், பெரும்பாலானோரின் நலன் பொருட்டு சிறுபான்மையினரின் நலன் பாதிக்கப்படினும் அக்கறையில்லை என்றாகிறது” என்றார்.

அனைத்து மக்களும் நலன் பெறுதல், ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற மாற்றுக் கருத்தை முன்வைத்தார். நலன் பெறுதல் என்றால் வெறும் உலகாயத பொருள் குவிப்பும், தேவைகளை அளவுக்கு மீறி பெருக்கிக் கொண்டே போவதும் அல்ல. அரசியல், சமூக, குறிப்பாக, ஆன்மிக ரீதியில் அனைவரும் உய்வு எய்த வேண்டும் என்பதே காந்தி மகானின் லட்சியக் கனவான சர்வோதய சமுதாயம்!


***
இன்று மகாத்மா காந்தியின் 146-ஆவது பிறந்த நாள். 

நன்றி: தினமணி (02.10.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக