நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

22.6.14

தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேச்சு 



சென்னை, ஜூன் 21: தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர்? நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்?

அப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.

செல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் ?

இதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.

ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.

சின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.

நன்றி: தினமணி (22.06.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக