நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.4.14

தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு... தேசத்திற்கான மாற்று!






தேசிய சிந்தனைக் கழகத்தின்
மக்களவைத் தேர்தல் வேண்டுகோள்

***


ரும் தேர்தல் நம் முன்னே  ஒரு மாபெரும் சவாலை  வைத்திருக்கிறது. அது என்ன?
புதிதாக வாக்குகளைப் பதிவு செய்யப் போகும் இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லப் போகும் செய்தியும் வழிகாட்டுதலும் தான்  அவை !
வாழ்க்கையில் சாதிக்கவும்,  வெற்றி பெறவும்  துடிக்கும் இளைஞர்களுக்கு  எத்தகைய பாதையை,  களத்தை  நாம்  நம் வாக்கின் மூலம் அமைக்கப் போகிறோம்?  
கல்வியில்,  பொருளாதாரத்தில், அறிவியலில், ஆட்சியில், பல்வேறு துறைகளில் தங்களது சாதனைகளைப்  படைக்க  நம்பிக்கையுடன்  போராடும் இளைய தலைமுறையினருக்கு நாம்  நம்பிக்கையூட்டும் ஆட்சியைத் தானே தர வேண்டும்?
ஆம், அதற்கான  அருமையான வாய்ப்பே இப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-வது மக்களவைத் தேர்தல்.
இனிவரும் காலம்  இந்தியர்களின்  கைகளில். தேசிய சிந்தனைக் கழகம் இந்தச் சவாலைச்  சந்திக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.
இதுதொடர்பாக உங்களுடன் ஓர் உளமார்ந்த பகிர்வு இது...

         * * * 

நமது நாட்டின் சிறப்பு:

ல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது நமது நாடு. இன்று உலகின் வல்லரசுகளாகக் கருதப்படும் நாடுகள் உருவாகாத காலகட்டத்திலேயே, உலகின் நாகரிகத் தொட்டிலாக விளங்கியது பாரதம். 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கம் வரையிலும் உலகப் பொருளாதாரத்தின் மைய விசையாக இருந்தது பாரதம் தான் என்கின்றனர் மேலை அறிஞர்கள். 

நமது நாட்டின் பழமைக்கு உதாரணங்களாக இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் விளங்குகின்றன. மிகத் தொன்மையான இலக்கியங்களாக நமது நாட்டின் வேதங்களும் உபநிடதங்களும் மதிக்கப்படுகின்றன. இவற்றின் காலம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது. 

தமிழகத்தின் தொன்மையான நூல்களாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் விளங்குகின்றன. தமிழில் உருவான திருக்குறளும், சமஸ்கிருதத்தில் உருவான அர்த்தசாஸ்திரமும் நமது சமூக அறக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. 

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் உருவான கழனி பாரதம். நாட்டின் தொன்மையான வழிபாட்டுமுறைகள் ஒருங்கிணைந்த இந்துமதம், சகிப்புத் தன்மையை உலகிற்கு போதிக்கும் மதமாகத் திகழ்கிறது. உலகில் தோன்றிய அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழும் நாடாகவும் ஒளிர்வது நமது தேசம். 

உடலையும் மனதையும் ஒருங்குவிக்கும் யோகக்கலை, ஆன்மநேயத்தை உருவாக்கும் தியானம், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பின்விளைவுகளற்ற ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள், ஏழு சுரங்களில் இசையைக் கட்டுக்குள் கொண்டுவந்த மேன்மை, பாரம்பரியச் சிறப்புமிகு பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட நடன வகைகள், அறுசுவைகளில் உணவையே மருந்தாகக் கொண்ட நேர்த்தி, வாழ்வை ரசிப்பதற்கு இலக்கணமான விதவிதமான உணவு, ஆடை வகைகள், சிற்பங்களின் தொகுப்பான ஆயிரக் கணக்கான பெருங்கோவில்கள்,... 

எதனைச் சொல்வது? எதனை விடுவது?

நமது தாய்நாட்டின் சிறப்புகளை நினைக்குந்தோறும் பெருமிதம் மிகுகிறது.  ‘செப்புமொழி பதினெட்டுடையாள்என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட இங்கு, பலமொழிகள் பேசும் மக்கள் கூட்டம் எல்லா மாநிலங்களிலும் கலந்து பரவி இருக்கிறது. பல்வேறு இனமக்கள், பலவித பழக்கவழக்கங்கள், நில அமைப்பிலும் தட்பவெப்பத்திலும் பலவாறாக மாறுபட்ட தன்மை என, இந்தியா ஒரு மாபெரும் மானுட நாற்றங்காலாகவே தரிசனம் தருகிறது.

இவற்றையெல்லாம் இங்கு இப்போது கூற வேண்டிய தேவை என்ன? 

இந்தக் கேள்விக்கு பதில், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-ஆவது மக்களவைத் தேர்தல் தான். 

மக்களாட்சி முறையில் முதலிடம்:

நமது நாட்டின் மொத்த மக்கள்தொகை தற்போது 130 கோடியை நெருங்கிவிட்டது. மக்கள்வளத்தில் உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் நாம் தான் இந்த ஜனநாயக யுகத்தில் மாபெரும் மக்களாட்சி அரசாகச் செயல்படுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகின் வல்லரசான அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நடத்தப்படும் தேர்தலுடன் ஒப்பிட்டால், நமது தேர்தல் பல மடங்கு பெரியது. சீனா வல்லரசாக இருந்தாலும் அங்கு மக்களாட்சி நிலவவில்லை. பல ஐரோப்பிய நாட்டுகளின் தேசிய அளவிலான தேர்தலை, நமது பல மாநிலங்களில் நடத்தப்படும் சட்டசபைத் தேர்தலுடன் கூட ஒப்பிட முடியாது. 

ஆனால், நமது நாட்டில் 81.45 கோடி மக்கள் வாக்களிக்கும் மாபெரும் மக்களவைத் தேர்தல், ஐந்தாண்டு இடைவெளியில் ஆர்ப்பாட்டமின்றி நடத்தப்பட்டு அரசியல் மாற்றங்கள் இங்கு இயல்பாக நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகளிலும் அரசியல்நிலை மோசமாக மாறியுள்ளபோது, இந்தியா மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயகத்தை மேம்படுத்தி வருகிறது. 

நமது மக்களாட்சி முறையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், உலகு தழுவிய அளவில் எந்த அராஜகமும் இன்றி ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பலகோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்களது விருப்பங்களும் தேர்வுகளும் பலவிதமாகவே இருக்கும். அவற்றில் இணக்கம் கண்டு அமைவதே தேசிய மைய அரசாக இருக்க முடியும். இங்கு மட்டுமே சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவரும் கூட விரும்பினால் அதிகார மைய அரசியலுக்கு வர முடியும். 

மக்கள் குழுக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தால் தங்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், நடைமுறையில் திருத்தங்கள் செய்யவும் மக்களாட்சி முறை வழிவகுக்கிறது. இதனை உலக அளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் நாடு பாரதமே என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

கூட்டாட்சியும், குடிமகனும்:

நமது நாட்டின் ஆட்சி நிர்வாக முறை, மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிவாகங்கள் என மூன்றடுக்கு முறையைக் கொண்டது. இத்தகைய அற்புதமான தேர்தல் அமைப்பு முறை வேறெந்த நாட்டிலும் கிடையாது. 

நாட்டின் சிறு அலகான கிராமத்தில் வாழும் மக்களை நிர்வகிக்க, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான நிர்வாகத்திற்கு சட்டசபைத் தேர்தல்களும், மத்திய அளவிலான தேசிய நிர்வாகத்திற்கு மக்களவைத் தேர்தலும் நடத்தப்படுகின்றன. 

மக்களாட்சி முறையில் மக்களே எஜமானர்கள். மக்களுக்காக, மக்களே மக்களை ஆள்வது தான் ஜனநாயகம். இதனை நாட்டின் சிறுமூலையிலிருந்து நாட்டின் மையம் வரை ஒரே சீராக கொண்டுசேர்த்திருப்பதே, நமது சுதந்திரம் நமக்களித்த சிறப்புகளில் பெரியது எனலாம்.

அதேசமயம், மக்களாட்சி முறைக்கே உரித்தான முக்கிய குறைபாடான ஊழலால் நமது நாடு தத்தளிக்கிறது. மக்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தால், ஊழல் நிகழாமல், வளர்ச்சி பெருகும். மாறாக, பல்வேறு பிராந்திய, மத, மொழி அடிப்படையிலான சுயநலக் கண்ணோட்டத்துடன் வாக்காளர்களின் வாக்குகள் திசைதிருப்பப்படும்போது, இம்மாதிரியான தவறான விளைவுகளும் ஏற்படுகின்றன.

ஊழல், குடிமகனின் வாழ்வில் அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்லாட்சிக்கு ஊறு விளைவிக்கும் ஊழலால், நமது பாதுகாப்புத் துறை தடுமாறுகிறது;  விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்கிறது; பதுக்கல் பேர்வழிகளை ஊக்குவித்து விலைவாசியை உயர்த்த வழிவகுக்கிறது; நாட்டில் சமச்சீரான வளர்ச்சி குன்றி பொருளாதார வீக்கமும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்படுகின்றன.

சமச்சீரற்ற வளர்சி காரணமாக, பிரிவினைக் கோரிக்கைகள், மத தீவிரவாதம், நக்சலிஸ ஆபத்துக்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். தவிர எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாடு தவிக்கிறது. ஆதிக்க உணர்வுள்ள சில அண்டைநாடுகள் நம் நாட்டில் நிகழ்த்தும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் துணிவின்றி அரசு வேடிக்கை பார்க்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

முற்காலத்தில் மன்னராட்சிக் காலகட்டத்தில், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி (யதா ராஜா ததா பிரஜா) என்று கூறப்பட்டது. இப்போது ஜனநாயக யுகத்தில் இதுவே, மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று அதிகாரம் திசை திரும்பி இருக்கிறது. 

அதாவது, இந்த நாட்டின் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. மக்கள் நல்ல தேர்வைச் செய்தால் நல்லரசு அமையும். மக்கள் தேர்வு தவறானால், மக்கள் பிரதிநிதியும் மோசமானவராகவே இருப்பார். இதை நன்குணர்ந்த குடிமகனே மக்களாட்சி முறையின் நாயகன்.

நமது நாடு எத்தனையோ பாரம்பரியச் சிறப்புகளைப் பெற்றிருந்தும், நமது ஜனநாயகம் உலகிலேயே மிகப் பெரியது என்ற பெருமை பெற்றிருந்தும், ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் மக்களாட்சி முறை மீது விரக்தி ஏற்படுகிறது. இது இயற்கையே. 

ஆனால், இதற்கு காரணம் குடிமக்களான நாமே தான் என்பதை நம்மில் எத்தனை நம்மில் பேர் உணர்ந்துள்ளோம்?

கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல்கள் வெளியாகி மக்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. விலைவாசியின் ஏறுமுகத்தால் சாமானிய மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகிவிட்டது. கலாச்சாரச் சீர்கேடுகளால் சமூக அமைதியின்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்து, நாட்டில் குழப்பம் பெருகி வருகிறது. இவை நம்மைப் பீடிக்கும் நோய்கள். 

நல்ல மண்ணில் தான் நற்பயிர் விளையும். வயல் முழுவதும் முள்ளும் களையும் பரவிக் கிடந்தால் அங்கு விளைச்சல் எங்ஙனம் கிடைக்கும்? இதுதான் நமது ஜனநாயகத்தின் நோய்க்குக் காரணம். ஜனநாயக வயலின் நோயைத் தீர்ப்பது எங்ஙனம்?

இதனைத் தீர்க்கும் மருந்தும் நம்மிடம் தான் உள்ளது. அதுவே நமது வாக்குரிமை.

வாக்குரிமை என்ற மந்திரம்:

குடிமகனே நாட்டின் ஆதாரம். அவனது ஒற்றை வாக்குரிமையால் என்ன சாதனை நிகழ்ந்துவிடும்? என்ற கேள்வி எழலாம். குடிமக்கள் சேர்ந்து தேசம் ஆவது போலவே, குடிமக்களின் வாக்குகள் இணைந்து மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்டு, தனது பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். 

ஆகவே, நமது நாட்டின் பழமையான சிறப்பில் பெருமிதம் கொள்ளும் நாம், தற்போதைய தார்மிக வீழ்ச்சியால் வருத்தமுறும் நாம், இதனை எதிர்கால சந்ததியினருக்கு சீர்திருத்திக் கொடுத்தாக வேண்டிய கடமையில் உள்ளோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நமது முன்னோர் திருத்தியமைத்த பாதையில் எளிதாகப் பயணிக்கிறோம். அவர்கள் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். இந்த சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் நமது சந்ததியினரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் செல்வது நமது கடமை அல்லவா?

ஆகவே, தான் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாய்ப்புகள் வரும்போது சோம்பித் தூங்கிவிட்டு, பிறகு துயிலெழுந்து புலம்பிப் பயனில்லை. மக்களாட்சி முறையில் ஒவ்வொருமுறை நடத்தப்படும் தேர்தலும் மாற்றத்திற்கான அறைகூவலே.

ஆகவே, இந்த நாட்டை மறுமலர்ச்சி காணச் செய்ய விரும்பும் எவரும், வாக்குரிமையின் சிறப்பை அனைவர் மனதிலும் பதியச் செய்ய வேண்டும்; நமது வாக்குரிமையை நூறு சதவிகிதம் பயன்படுத்தி, முழுமையான மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்த நாட்டின் மீட்சி, ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்கும்போது தான் சாத்தியமாகும்.

நமது புனிதக் கடமை:

எனவே, வரும் ஏப்ரல் 24-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அனைத்துப் பகுதிகளிலும் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த முயற்சிப்போம்! 

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்காக இம்முறை ‘நோட்டாஎன்ற பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால், வாக்காளர் இதனைத் தேர்வு செய்யலாம். 

‘நோட்டாவுக்கு விழும் வாக்குகள் நமது ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு எச்சரிக்கை வடிகால். இதுவும் நமது மக்களாட்சி முறையைச் சீர்திருத்த உதவும் ஒரு கருவியே.

“வாக்குரிமை ஒரு புனிதமான கடமை. அது நாம் நாட்டுக்கு செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பும் கூட. எனவே, வாக்குரிமையைப் பயன்படுத்துவது என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய செயலாக இருக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்’’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

நாட்டின் தென்கோடியில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், தனக்கு நாடு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் நேரிய முறையில் பயன்படுத்திக் கொண்டதால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி. நமது நாட்டைச் சீரமைக்க விரும்பும் எவருக்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இந்தத் தேர்தல்.

ஆகவே, விரக்தியில் வாக்களிக்காமல் தவிர்ப்பதைவிட, உறுதியுடன் வாக்களிப்பது மேலானது என்பதை உணர்வோம். இதனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் பரப்புவோம். அதன்மூலமாக நூறு சதவிகித வாக்குப் பதிவை உறுதிப்படுத்துவோம்!

நமது பிரதிநிதியாக மக்களவையில் இயங்க உள்ள வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்பதையும், அவர்தம் தகுதியையும், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம், நேர்மை, வாக்குறுதிகள், அவர் சார்ந்த அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்போம்! வாக்குகளை விலைபேசும் எத்தர்களையும் புறக்கணிப்போம்! 

இது நமது நாடு; இந்த நாட்டை நமது வாக்குரிமையால் நாமே ஆள்கிறோம் என்ற பெருமிதத்துடன், நாட்டை ஆளத் தகுதியான நல்லோரைத் தேர்வு செய்வோம்! 

நம்மை ஆளுபவர்கள் அல்லது  நாம் தேர்ந்தெடுக்கும்  பிரதிநிதிகள்  தகுதியும் திறமையும் உடையவர்களாக  மட்டுமல்லாமல் ஆளுமைத்திறனும் அதிகாரத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர்களாகவும், விலைக்கு வாங்கப்பட முடியாத  வைராக்கியம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் 
.
நம் பண்பாட்டின் மீதும், தான்  வரித்துக்கொண்ட லட்சியத்தின் மீதும்  அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் நமது பிரதிநிதிகள் இருத்தல் அவசியம் இதனையும் கருத்தில் கொள்வோம்! 

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. இவ்விழாவில் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. நாடு என்பது நாமே என்பதால், நமது எதிர்காலம் இப்போது நம் கையில் தான் உள்ளது. எனவே, வரும் தேர்தலில், நாட்டின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் நல்லோரை நாயகராகத் தேர்ந்தெடுப்போம்! 

வாக்குச்சாவடிக்குச் செல்லும் பாதையும் புனிதப்பயணம் போன்றதே. 

வாக்களிப்பதென்பது நமது புனிதக் கடமை. 

நமது வாக்கை நல்லவர்களுக்கு அளிக்கும்போது நாடு உயரும். நமது சிறப்புகளும் அப்போது தான் மிளிரும்!
பாரத அன்னை வெல்க!

-கவிஞர் குழலேந்தி
 
* * * * * * * * * * * * * 

தொடர்புக்கு:

ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
1, சக்தி, எம்.வி. தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை- 600 031.

அலைபேசி: 90031 40968
மின்னஞ்சல்: makochirajendran@gmail.com, kuzhalendhi@gmail.com



வாக்களிப்பது நம் உரிமை!

 மாற்றம் காண்பது நம் கடமை!

2 கருத்துகள்:

venkat சொன்னது…

// வாக்குச்சாவடிக்குச் செல்லும் பாதையும் புனிதப்பயணம் போன்றதே. வாக்களிப்பதென்பது நமது புனிதக் கடமை. அதை நல்லவர்களுக்கு அளிக்கும்போது நாடு உயரும். நமது சிறப்புகளும் அப்போது தான் மிளிரும்.\\

அருமையான பதிவு
வாழ்த்துக்கள்.

v.dotthathri சொன்னது…

ஓம்
நல்லது இன்னவென்று சொல்லாமல், அடுத்தவரைக் குறைகூறும் போலி அரசியலாளர் மனித மூளையைச் சலவைசெய்து கொண்டிருக்கின்றனர்.கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று வள்ளுவம் சொல்லுகிறது.
கையூட்டும் கறுப்புப் பணமும், கல்வி என்னும் வணிகமும், இனாம் கொடுத்துக் கொடுத்து சோம்பேறித் தனத்தை வளர்த்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. விடிவு நம் கையில் தான்.
நல்ல பதிவு பாராட்டுக்கள்
வெ.சுப்பிரமணியன் ஓம்

கருத்துரையிடுக