நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

12.3.12

நிஜமான கவலை!


சிந்தனைக்களம் 


மும்பையில் கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடிய ஹோலி பண்டிகையின்போது வண்ணப்பொடி தூவிக் கொண்டவர்களில் 195 பேருக்கு அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 91 பேர் சிறார்கள். இவர்களில் விகாஸ் வால்மீகி என்ற 13 வயது சிறுவன் இறந்தான். 

இதற்குக் காரணம், தாராவி பகுதியில் அண்மையில் மூடப்பட்ட ஒரு சாயப்பட்டறையில் மிச்சமிருந்த ரசாயன வண்ணப்பொடிகள் அழிக்கப்படாமல், வெளியே கொட்டப்பட்டதாகவும், இதைச் சிறார்கள் எடுத்துவந்து ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடியிருக்கலாம் என்றும் காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது. அந்த ஆலையிலிருந்து ரசாயனப்பொடி வெளியே வந்தது உண்மையாக இருக்கலாம். அது தொடர்பாக 6 பேர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றைச் சிறார்கள் எடுத்து வந்தார்கள் என்பது உண்மையாக இருக்க முடியாது. நிச்சயமாக இந்த ரசாயன வண்ணப்பொடிகள் சிறு வியாபாரிகள் மூலமாகத்தான் விற்பனைக்கு வந்திருக்க முடியும். யாரையோ காப்பாற்றுவதற்காக மகாராஷ்டிர காவல்துறையினர் அதை மறைக்கப் பார்க்கின்றனர். மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ள 6 பேர் கொண்ட குழு இது தொடர்பாக நடத்தவுள்ள விசாரணையில் உண்மைகள் தெரியவரும் என்றும் அடுத்த ஆண்டு அரசு அங்கீகரிக்கும் வண்ணப் பொடிகள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும் நம்புவோமாக! 

இறந்துபோன சிறுவன் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நச்சுக்கலப்பு ஏற்பட்டதற்குக் காரணம், அவர்கள் இந்த ரசாயன வண்ணப்பொடியை தமது கைகளிலிருந்து முழுமையாகக் கழுவாமல், உணவுப் பொருளை உட்கொண்டதுதான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

கையைக் கழுவிய பின் எஞ்சிய சிறு நச்சுக்கே இத்தனை சிறார்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றால், நாம் தினமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வண்ணங்களை என்னவென்று சொல்வது? இனிப்புகளில், ஐஸ்-கிரீமில், பஞ்சுமிட்டாயில் கலக்கப்படும் வண்ணங்கள் மற்றும் அதில் உள்ள ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்டவைதானா? இவற்றை யார் கண்காணிக்கிறார்கள்? விலை மலிவு என்பதால் இனிப்புகளை வாங்குகிறோமே தவிர, அதில் வண்ணமேற்ற பயன்பட்ட ரசாயனப் பொடி எது என்று நுகர்வோர் யாராவது கேட்டதுண்டா? 

வீட்டுச் சுவர்களில், பொம்மைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன வண்ணங்களில் 0.06% காரீயம் (லெட்) மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், நாம் பயன்படுத்தும் வண்ணங்களில் இந்த அளவுதான் காரீயம் உள்ளதா? சந்தையில் உள்ள பெரும்பாலான வண்ணங்களில் இந்த அளவுகோல் நிச்சயமாக இல்லை. ஆனால், விற்பனையாகின்றன. கேட்பார் யாருமில்லை. தடுப்பாரும் யாருமில்லை. இருந்தாலும் தடுப்பதில்லை. 

வண்ணங்களில் 0.06% க்கு அதிகமாக காரீயம் இருக்குமேயானால், உடனடியாக மரணம் ஏற்பட்டுவிடாது. ஆனால், ஏன் என்று காரணம் சொல்ல முடியாத பாதிப்புகளைத் தொடர்ந்து சந்திக்க நேரும். குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கவனக்குவிப்புத்திறனை இழந்துவிடுவார்கள். எலும்பு மெலிவு, சிறுநீரகக் கோளாறு என ஒவ்வொன்றாக வெளிப்படும்போது, அந்தக் குழந்தைகள் பொம்மையுடன் விளையாடுவதையே நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இதற்கான காரணம் பொம்மையில் இருந்த வண்ணம்தான் என்பது புலப்படாமலேயே நாம் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கலாம். 

வளர்ந்த நாடுகளில் இவ்வாறான, நம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளுடன் தொடர்புடைய வண்ணங்களில் இருக்க வேண்டிய ரசாயன நச்சு அளவு பரிசோதிக்கப்பட்டு பிறகுதான் சந்தையில் விற்பனைக்கே அனுமதிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய நிலைமை இல்லை. 

அமெரிக்காவில் நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்கள் பாதுகாப்பு குழு உள்ளது. அவர்கள் தரமற்றவை என ஆய்வில் கண்டறிந்து சந்தையிலிருந்து திரும்பப்பெற பரிந்துரைக்கும் வண்ணங்கள், உணவுப் பொருள்கள், பொம்மைகள், சோப்புகள், அழகுசாதனங்கள் பட்டியலை வெளியிடுகிறார்கள். இந்தியாவில் அத்தகைய அமைப்பு இல்லை.

குழந்தைகளுக்கான குளியல் சோப்புகளில்கூட மேலை நாடுகளில் அக்கறை காட்டப்படுகிறது. குழந்தையின் தோல் மிகமிக மென்மையானது. அதன் மீது ரசாயன சோப்புகளைப் போடுவதன் மூலம், தோலின் இயற்கையான எண்ணெய்த்தன்மை துடைத்தெடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் உலர்தோல் சிக்கல் ஏற்படுகிறது. நம் பாட்டிமார்கள் நம் குழந்தைகளுக்கு கடலைமாவு போட்டு குழந்தைகளைக் குளிக்க வைத்தார்கள். காரணம், கடலை மாவு, தோலின் இயற்கையான எண்ணெய்த்தன்மையை நீக்குவதில்லை. 

குழந்தைகளுக்கான பொம்மைகளுக்கு அமெரிக்க அரசின் கண்காணிப்பு ஒருபுறம் இருந்தாலும், அந்த அமைப்பு குழந்தை பொம்மைகள் குறித்து சொல்லும் பரிந்துரை இந்தியப் பெற்றோர்களுக்கும் பொருந்தும். 

"பொம்மையின் வண்ணநெடி அதிகமாக இருந்தால் அதை வாங்காதீர். ஏனெனில், அதன் மீது இரண்டுமுறை வண்ணப்பூச்சு செய்திருக்கக்கூடும். இந்த வண்ணப்பூச்சு விரைவில் உரியத் தொடங்கிவிடும். பொம்மையை உங்கள் குழந்தை வாயில் வைத்தால், உரியும் வண்ணக் கலவை வயிற்றுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் வண்ணம் பூசாத பொம்மைகளைத் தேர்வு செய்யுங்கள். வண்ணங்கள் பூசாத வெறும் மரபொம்மைகள் சாலச் சிறந்தது'.

அதாவது நம் மூதாதையர் நமக்கு மரப்பாச்சி பொம்மைகளைக் கொடுத்தார்களே, அதைத்தான் சாலச் சிறந்தது என்கிறார்கள். அன்னியச் செலாவணி இருப்பு, பங்குச் சந்தை சென்செக்ஸ், அன்னிய முதலீடு, உள்கட்டமைப்பு வசதிகள், பகட்டான வாழ்க்கை இதையெல்லாம் உத்தரவாதம் செய்வதுதான் அரசின் கடமை என்கிற மாயையில் சிக்கியிருக்கிறோமே, குடிமகனைப் பற்றியும், வருங்கால சந்ததியைப் பற்றியும், மக்களின் நல்வாழ்வு பற்றியும் எப்போது கவலைப்படப் போகிறோம்?
   

- தினமணி தலையங்கம் (12.03.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக