சிந்தனைக்களம் -தெ.ஞானசுந்தரம்
அண்மையில் செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என்னை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காஞ்சிபுரத்தை அடுத்த ஒருபள்ளியில் பணியாற்றும்
ஆசிரியர் ஒருவர் சங்கிலிப்பறிப்புத் திருட்டில் ஈடுபட்டுப் பிடிபட்டார்
என்பதே அச்செய்தி.
இதற்குச் சில நாட்களுக்கு முன்பு வகுப்பில் படிக்கும் பெண்ணிடம்
பாலியல் தொந்தரவு செய்தார் என்று ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஊர்மக்கள்
கிளர்ந்தெழுந்து போராடினார்கள் என்னும் செய்தி நாளிதழில் வந்திருந்தது.
இப்படி வரும் செய்திகள் ஆசிரியர்கள் எந்த அளவு தரம்தாழ்ந்து
மதிப்பிழந்து நிற்கிறார்கள் என்பதனைக் காட்டுகின்றன. ஆசிரியர்களை உயர்வாகப்
போற்றும் இந்த மண்ணிலா இந்த நிலை என்று மனம் துணுக்குறுகிறது.
ஆசிரியரைத் தோழராகவும், சிந்தனையாளராகவும் வழிகாட்டியாகவும் கருதுவது
மேலைநாட்டுப் போக்கு. தெய்வமாகப் போற்றுவது இந்திய மண்ணின் இயல்பு.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்கிறார் அதிவீரராம பாண்டியர்.
1955 -57இல் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த எனக்கு வகுப்பு ஆசிரியர் எம்.ஏ. பி.டி. என்று அழைக்கப்பட்ட
சுந்தரராம அய்யர். மாலையில் என் வீட்டின் வழியாக நடைப்பயிற்சிக்குப்
போகும்போது சில நாள் என்னையும் கூட்டிச் செல்வார். மாயூரம் - தரங்கம்பாடி
ரயில் பாதை ஓரமாக நடந்து செல்வோம். வழியில் எல்லாம் ஆங்கில இலக்கணம்
சொல்லிக் கொடுத்துக்கொண்டே வருவார்.
ஒருநாள் கீழ்வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தும்போது மதிப்பெண்களைக்
கூட்டிப் போடுவதற்காக தன் வீட்டிற்கு வரும்படி சொன்னார். 1957ஆம் ஆண்டில்
ஆப்பிள்பழம் மயிலாடுதுறையில் இருந்தவர்கள் அறியாத ஒன்று. சென்னையிலிருந்து
யாரோ சில பழங்களை அவருக்கு அனுப்பியிருந்தனர். அதில் ஒன்றை எடுத்துவந்து
சீவி எனக்கு ஒரு துண்டு தந்துவிட்டுத் தன் சின்னஞ்சிறு மகளுக்கும்
ஊட்டினார். நான் ஆப்பிள்பழத்தைப் பார்த்ததும் சுவைத்ததும் அன்றுதான்.
இன்றும் எப்பொழுது ஆப்பிள்பழம் சாப்பிட்டாலும் என் ஆசிரியரின் செயல்
நினைவுக்கு வரும். ஒரு சாதாரண செயல்தான். அதில்தான் எத்தனை அன்பு!
1958ஆம் ஆண்டு குடந்தை அரசினர் கல்லூரியில் இளங்கலை பயின்றபோது
எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர்களுள் ஒருவர் கோவை ஆசான் அமரர் ப.சு.மணியம்.
மேனியில் தூய கதராடை, நெற்றியில் திருநீறு, புருவ நடுவில் சந்தனம்,
அதன்மேலே சிவப்பு பொட்டு வைத்த முகம். இந்தக் கோலத்தில்தான் வகுப்புக்கு
வருவார். கையில் மறைமலையடிகள் வாழ்க என்று பச்சை குத்தி இருப்பது தெரியும்.
அமுதும் கன்னலும் பாலும் தேனும் கலந்து ஓடுவது போன்று வாயிலிருந்து
சொற்கள் வெள்ளமிட்டு ஓடும். சங்க இலக்கியமும் திருக்குறளும் பரிமேலழகர்
உரையும் திருவாசகமும் அவ்வெள்ளத்தில் புரண்டு ஓடிவரும். அவர் வகுப்பு
எப்பொழுது வரும் என்று காத்துக்கிடந்தார்கள் மாணவர்கள்.
அந்நாளில், கல்லூரியில் தி.மு.க மாணவர்களும் அவர்களுக்கு நிகரான
எண்ணிக்கையில் தி.க. மாணவர்களும் இருந்தார்கள். கடவுள் மறுப்பினரும் அவரது
புலமைக்கு மயங்கி ஐயா என்று வாய்மணக்க அழைத்து வணங்கிப் போற்றினர். அப்போது
அங்கு பணியாற்றிய மற்றொருவர் செ. கந்தப்பன். அவர் பின்னாளில்
திருச்செங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத்
திகழ்ந்து மறைந்தவர். அவரும் மாணவர்களிடம் செல்வாக்கோடு இருந்தார். அவர்
கட்சிச்சார்பை மாணவர்கள் அறிவர். அவரும் அதனை மறைத்துக்கொள்ளவில்லை.
இருகட்சி மாணவர்களினிடையே கடும்பகை நிலவிவந்தது. அதனால் அவரைத்
தாக்குவதற்கு தி.க. மாணவர்கள் சிலர் முடிவுசெய்தனர். காவிரியின் வடகரையில்
வரிசையாக உள்ள ஆசிரியர் அறைகளில் ஒன்று தமிழ்த்துறை அறை. அதில் அவர்
அமர்ந்திருக்கிறார். காவிரி நடைபாலத்தைக் கடந்து வரட்டும் இன்று அவரை
ஒருகை பார்த்துவிட வேண்டும் என்று கறுவிக்கொண்டு தி.க. மாணவர்கள்
ஆயுதங்களோடு காவிரியின் தென்கரையில் காத்திருந்தார்கள்.
செய்தி அறிந்த ப.சு மணியம் ஐயா கந்தப்பனைத் தம்மோடு அழைத்துக்கொண்டு
பாலத்தின் வழியாக நடந்தார். ப.சு. ஐயாவோடு அவர் வந்ததைப் பார்த்த அந்த
மாணவர்கள் திகைத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒதுங்கி நின்றனர். "ஏன்
நிற்கிறீர்கள்?' என்றார் ஐயா. "ஒன்றுமில்லை, ஐயா' என்றவாறு கலைந்து
சென்றனர். எங்களுக்கு அன்று அவர் கோவூர்கிழாராகக் காட்சி அளித்தார்.
ஆசிரியர்களுக்கு இருந்த அந்த ஆளுமை இன்று எங்கே போயிற்று?
இப்படி எண்ணிப்பார்த்து மனம் நெகிழ்வதற்குரிய ஆசிரியர் பலர் அன்று
இருந்தனர். அவர்களில் பாடம் நடத்துவதில் முன்பின்னாக இருந்த ஆசிரியர் சிலர்
உண்டு. ஆனால் எல்லோரும் பண்பில், ஒழுக்கத்தில் பத்தரை மாற்றுத் தங்கம்.
இன்று அத்தகைய ஆசிரியர் தொகை அருகிவிட்டது. ஒருசிலர் இருக்கலாம். ஆனால்,
பங்குனிமாதப் பனியால் பாசன ஏரி நிரம்பிவிடுமா?
இத்தகைய ஆசிரியர் கூட்டத்திலா தெருவில் செல்லும் பெண்களின் கழுத்துச்
சங்கிலியை அறுக்கும் கீழ்கள்? மகள் போலக் கருத வேண்டிய மாணவியிடம் தகாத
முறையில் நடக்கும் வக்கிரங்கள்? நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.
இதற்கு என்ன காரணம்? முன்பு ஆசிரியர்களுக்குத் தாங்கள் மற்றவர்களைப்
போன்று தொழிலாளிகள் அல்லர், சமுதாயத்திற்கு வழிகாட்டிகள் என்ற எண்ணம்
இருந்தது.
அன்று தெருவில் இறங்கிப் போராடுவது ஆசிரியர்கள் தகுதிக்குக் குறைவானது
என்று கருதினார்கள். காலத்தின் கட்டாயம் ஆசிரியர்கள் தெருவில் இறங்கும்
நிலை உருவாயிற்று. சங்கங்கள் வலுவடைந்தன. விளைவு? ஆசிரியர்கள்
வாழ்க்கைத்தரம் உயர்ந்தது, கல்வித்தரம் தாழ்ந்தது. சங்கங்கள் வலுப்பெற
வலுப்பெறச் சங்கங்களே கல்வி நிறுவனங்களைப் பின்னால் இருந்துகொண்டு இயக்கத்
தொடங்கிவிட்டன. தலைமையாசிரியர்களும் கல்லூரி முதல்வர்களும் அவற்றோடு சமரசம்
செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. யாரையும் தட்டிக் கேட்க முடியாத
நிலை உருவாகிவிட்டது.
ஆசிரியர்கள் தரம் மேன்பட அரசு என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர்களைத்
தேர்வு செய்யும்போது அவர்கள் கல்வித்தகுதியோடு ஒழுக்கம் குறித்த புலனாய்வு
அறிக்கையையும் பெற்று தகுதியானவரை நியமிக்க வேண்டும். அவ்வப்பொழுது
முதன்மையான மாணவர்கள் சிலரிடமிருந்து ஆசிரியர்களைப் பற்றிய கருத்துரைகளைக்
கேட்டறிந்து அதற்கேற்ப கல்வித்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் ஆசிரியப்பணி பல இலட்சம்
கையூட்டுப் பெற்று நிரப்பப்படுவதாகச் சொல்கிறார்கள். பணம்கொடுத்து பதவியை
விலைக்கு வாங்கும் ஆசிரியர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்?
அப்படி வருபவர்களிலும் எத்தனை பேர் நல்லவர்களாக இருப்பார்கள்? ஒளிவு
மறைவின்றி நேர்மையான முறையில் தேர்வுசெய்து தகுதியானவர்களை நியமனம்
செய்தால்தான் களைகள் புகாமல் தடுக்கலாம்.
அரசின் செயற்பாட்டால் இன்று ஆசிரியர்களிடையே நிரந்தரப் பணியில்
இருப்பவர், தொகுப்பூதியம் பெற்றுப் பணிபுரிபவர் என்று இருபிரிவுகள்
ஏற்பட்டுள்ளன. முன்னவர் சுதந்திரமாகத் தம் விருப்பம்போல் இயங்குகின்றனர்.
பின்னவர் வருத்தி வேலை வாங்கப்படுகின்றனர். ஒரே பணிக்கு இருவேறு வகை ஊதியம்
வழங்குவது என்ன முறை? ஒரு பக்கம் பல்லாயிரம் ஊதியம் மறுபக்கம் பற்றாக்குறை
ஊதியம். வாழ்க்கை நிலைப்படாத நிலையில் அவர்களால் எவ்வாறு செம்மையாகப்
பணியாற்ற முடியும்? சிக்கன நடவடிக்கை கல்வித்துறையைப் பாழ்படுத்திக்
கொண்டிருக்கிறது. ஆளில்லா இடங்களை உடனே நிரப்பி தொகுப்பூதியப் பிரிவினை
அறவே அகற்றினால்தான் கல்விச்சூழல் ஏற்றம் பெறும்.
முன்பெல்லாம் காலை பத்துமணிமுதல் மதியம் ஒருமணிவரையிலும், பிற்பகல்
இரண்டு முதல் ஐந்துமணிவரையிலும் வகுப்புகள் நடந்தன. இதனால்
ஆசிரியர்களிடத்தும் மாணவர்களிடத்தும் கட்டுப்பாடு இருந்தது. இன்று
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பணி முற்பகல் பன்னிரண்டு மணிக்குள்ளேயே
முடிந்துவிடுகிறது. போதிய ஆசிரியர்கள் இருக்கும்போதுதான் வகுப்புகள்
முழுமையாக நடைபெறும். ஆசிரியர் இன்மையால் வகுப்பு நடத்தப்படாமல்
விடப்படுவது தவிர்க்கப்பட்டால் மாணவர்கள் வெளியில் சுற்றுவதும் வீண்
செயல்களில் ஈடுபடுவதும் குறையும்.
ஆசிரிய சங்கங்கள் தங்கள் எல்லையை அறிந்து நடந்துகொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது.
வயலுக்குப் போதிய உரம் போடாமலும் கவனிக்காமலும் விட்டுவிட்டு பின்பு
களைமண்டி விட்டதே என்று கவலை கொள்வதால் என்ன பயன்? நிலைமை இப்படியே போனால்,
தேவர்கள் கூட்டத்தில் அவர்கள் வேடத்தில் கலக்கும் பிசாசுகள் எண்ணிக்கை
மிகுந்துவிடும்.
குறிப்பு: கட்டுரையாளர், தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு) பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
----------------------------
நன்றி:
தினமணி (01.10.2013)