நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.12.16

சோவுக்கு அஞ்சலி

 
சோ ராமசாமி  (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016)


பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) கடந்த டிச. 7-ம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

*சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

*சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

*20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக ‘கல்யாணி’ என்ற நாடகத்தில் நடித்தார். ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

*நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.

*‘துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

*20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது. நாடகம், நாவல், அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

*பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘யாருக் கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். பேச்சிலும் எழுத்திலும், நையாண்டியும், நகைச்சுவையும் இரண்டறக் கலந்திருப்பது இவரது தனிச்சிறப்பு.

*மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர் ‘சோ’ ராமசாமி.

தகவல்: தி இந்து

***

திரு. வண்ண நிலவனின் அஞ்சலி:

 ‘சோ’-கூர்மதியாளர்; ஆழ்ந்த மனிதாபிமானி


 சோவுடன் 1976-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரது துக்ளக் பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளனின் பணிகள் மற்றும் பொறுப்புகளை சோவுடன் பணியாற்றும்போதுதான் புரிந்து கொண்டேன்.

துக்ளக்கில் 1990-ம் ஆண்டு வரை நிரந்தரப் பணியாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு விலகி, வெளியிலிருந்து துக்ளக் பத்திரி கைக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சோ, முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார். சினி மாவில் முன்னணி கலைஞர்களுடன் நடித்தவர். எழுத்தாளர், விமர்சகர், சட்ட நிபுணர், சினிமா இயக்குநர் என பலப் பரிமாணங்கள் கொண்டவர். அபாரமான நகைச்சுவைத்திறன் உள்ளவர். சோவின் நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. எந்த அரசியல் தலைவர்களை அவர் கிண்டல் செய்தாலும், அவர்களே அதை ரசிப்பதாக அவரது எழுத்து இருக்கும்.

துக்ளக்கில் வெளிவரும் கேள்வி- பதில் தொடங்கி ஒவ்வொரு கட்டு ரையையும் கண்ணில் விளக்கெண் ணெய் விட்டுப் பார்ப்பார்கள். அந்த மாதிரியான காலகட்டத்தில் அபாரமான துணிச்சலுடன் செயல் பட்டவராக சோ இருந்தார். ஏனெ னில் எந்த அரசியல்வாதியின் தய வையும் நாடாதவராக இருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்

1970-களின் ஆரம்பத்தில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அதையொட்டி சென்ற ஊர்வலத் தில், இந்துக்கள் வணங்கும் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை கேலிச்சித்திரங்களாக வரைந்து எடுத்துச் சென்றனர். அந்த ஊர் வலத்தைப் பற்றிய செய்தியுடன் புகைப்படங்களையும் துக்ளக் பத்திரிகையில் சோ விமர்சித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது கருணாநிதி தலைமையிலான அரசால், துக்ளக் பத்திரிகைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அவசரநிலைக் காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோது நேரடியாக போய் பார்த்து ஆறுதல் சொன்னவரும் அவர்தான். அந்த சமயத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டதையும் அவர் எதிர்த்தார்.

கருணாநிதிக்கு பேச்சுரிமை யும் எழுத்துரிமையும் மறுக்கப் பட்டதால், அவரை இனி விமர்சிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

காமராஜர், மொரார்ஜி தேசாய், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா வரை அவருக்கு நல்ல நட்பு இருந்தது. அவர்களது செயல்பாடு களில் ஏதாவது குறைபாடோ விமர்சனமோ இருந்தால் அதை காட்டமாக விமர்சிப்பார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ஒரே நேர்காணல் துக்ளக் பத்திரிகைக்குத்தான். மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜெயவர்த் தனே என பல அரசியல் தலைவர் களின் விரிவான நேர்காணலைச் செய்தவர்.

தனிப்பட்ட முறையில் அவருக்கு எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்த தில்லை. அரசியல் தலைவர்களின் குடும்ப விவகாரங்களையோ, தனிப் பட்ட விஷயங்களைப் பற்றியோ இதுவரை ஒரு செய்திகூட வெளி யிட்டதில்லை.

தடைகளைத் தகர்த்த படம்

துக்ளக் வந்த காலகட்டத்தில் புலனாய்வு பத்திரிகைகள் இல்லை. சமூக அரசியல் இதழாக வெளி வந்த ஒரே இதழ் அப்போது துக்ளக் தான். கூவத்தைச் சீரமைக்கப் போவதாக திமுக அரசு அறிவித்த போது, அதுதொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் முதல் முதலாக வெளியிட்ட இதழ் துக்ளக் தான்.

சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுத்தனர். அந்தச் செய்தி தெரிந்த வுடன், திமுக ஆட்சியாளர்களால் படத்தில் வேலைசெய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அச்சுறுத்தப் பட்டனர். அத்தனை இடைஞ்சல் களையும் மீறி படம் வெளியானது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு அரசியல் விவ காரங்களில் அவர் சொன்ன வார்த் தைகள் தீர்க்கதரிசனமானவை.

1977-ல் அவசரநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு ஜனதா ஆட்சி மத்தியில் வந்தபோது, அந்த ஆட்சி நிலைப்பட வேண்டுமென்று மிகவும் உழைத்தவர்களில் ஒருவர் சோ. ஆனால் சரண்சிங் போன்ற வர்களின் செயல்பாடுகளைப் பார்த்து சீக்கிரமே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதைக் கணித்த வரும் அவர்தான்.

கர்னாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருமையான புகைப்படக்கலைஞர் அவர். துக்ளக் கில் வெளிவரும் கார்ட்டூன் களுக்காக அவர் ஓவியர்களுக்கு கொடுக்கும் ஐடியாக்கள் வெவ் வேறு கோணத்தில் ஆச்சரியப் படும்படியாக இருக்கும்.

அரசியல் தலைவர்கள் குறித்து எத்தனையோ விமர்சனங்களை வைத்திருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும் அக்கறை யையும் பேணி வந்தவர். எல்லா வற்றையும்விட அவர் பெரிய மனிதாபிமானி. அதனால் தான் அவரது விமர்சனங்களை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.

***

 திரு. வ.ரங்காச்சாரியின் கட்டுரை:
 
தமிழ் இதழியலின் அங்கதக் குரல்! 


தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு நபர் ராணுவம்போல ஆசிரியர்கள் செயல்பட்டு, நடத்தப்பட்ட பத்திரிகைகள் குறைவு. அதில் வெற்றிகரமான வெகுஜனப் பத்திரிகை 'துக்ளக்' மட்டுமே. அரசியல் என்றால் வெறும் அரசியல் மட்டுமே. நடுப்பக்கத்திலே, கடைசிப் பக்கத்திலே என்றுகூட சினிமா கவர்ச்சியைத் தொடாமல் பத்திரிகையைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர் சோ. லட்சக்கணக்கில் விற்பனையாகவில்லை என்றாலும், விசுவாசமான வாசகர்களை ஆயிரக்கணக்கில் தக்கவைத்துக் கொண்டது 'துக்ளக்'.

அங்கதச் சுவையைக் குழைத்து அவர் எழுதிய கட்டுரைகளை ஏற்காதவர்கள்கூட, நமட்டுச் சிரிப்போடு படித்துக் கடப்பதுண்டு. சோ இப்படித்தான் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை எப்படித் தர்க்கரீதியாகச் சொல்கிறார் என்று பார்ப்பதற்காகவே படிப்பார்கள். அவருடைய வாசகர்களில் சரிபாதிக்கும் மேல் அவர் கருத்தை ஏற்றவர்கள் அல்ல; என்றாலும் அந்நாட்களில் 'ஜெலுசில்', 'கேஸக்ஸ்', 'பைலக்ஸ்', 'டயானில்' மாத்திரைகளோடு பல பெரியவர்களுக்கு வாரந்தோறும் தேவைப்பட்டது 'துக்ளக்'.

தேர்தல் நடப்பதற்கு முன்னால், சோவின் கணிப்பு என்ன என்று அறிய வாங்கிப் படிப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் முடிவுகளுக்கு அவர் என்ன வியாக்கியானம் சொல்கிறார் என்று படிப்பார்கள். ஜெயேந்திரர் கைதா, ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கா, நரேந்திர மோடியை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டமா சோ இதில் கூறும் அரசியல் வாதம் என்ன, சட்டப்பூர்வமான கணிப்பு என்ன என்று ஆர்வமாகப் படிப்பார்கள்.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர வேண்டும், அதிமுக தவிர மற்றவை செல்வாக் கிழக்க வேண்டும் என்று சோ மனதார விரும்பினார் என்றே தோன்றுகிறது. அதை அவர் மறைத்ததே இல்லை. காமராஜரின் பெருந்தன்மையை, நிர்வாகத் திறமையைக் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் எழுதிக் குவித்தார். நேரு, காந்தி மீது மரியாதை கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மீது நன்மதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தனிப்பட்ட வகையில் பாராட்டிக்கொண்டே கம்யூனிஸக் கொள்கைகளைத் தாக்கி எழுதினார்.

எப்பேர்ப்பட்ட தலைவரையும் கேலிசெய்ய 'துக்ளக்' தயங்கியதே இல்லை. தலையங்கம், கட்டுரைகளில் சொல்ல முடியாதவற்றைக் கேள்வி - பதிலில் அல்லது எச்சரிக்கையில் தெரிவித்துவிடுவார். 'துக்ளக்' விலை உயர்கிறது என்று அறிவிக்காமல், நல்ல தரத்துக்கேற்ப மதிப்பை அதிகம் பெறுகிறது என்று ஊசியைச் செருகுவார். 'துக்ளக்' வாசகர்கள் விழாவில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிப்பார். ஆனால், தருமசங்கடமான கேள்விகள் என்றால் தொடங்கும்போதே, 'கடைசியில் பதில் சொல்கிறேன்' என்பார் அல்லது அந்தக் கேள்வி கேட்கும் வாசகரையே பகடித்து காலிசெய்துவிடுவார்.

அவருடைய கேள்வி பதில் பகுதி 'துக்ளக்' பத்திரிகையில் பிரசித்தி பெற்றது. "சிக்கு மங்கு, சிக்கு மங்கு செச்ச பப்பா என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி. "சிக்கு என்ற அம்மாவுக்கும் மங்கு என்ற அப்பாவுக்கும் பிறந்த குழந்தை" என்று பதில் எழுதினார் சோ. "இந்த நேரத்தில் ராஜாஜி இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்?" என்று ஒருவர் கேட்க, "குசே பசே தசே" என்று அர்த்தமற்ற கேள்விக்கு அர்த்தமற்ற பதிலைப் பொருத்தமாகத் தந்திருப்பார். "சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?" என்று ஒரு கேள்வி. "அதுவும் கொஞ்சம் சாயும்" என்பது பதில்.

ஆளும்கட்சியின் வட்ட, மாவட்டச் செயலர்கள் அதிகார மையங்களாக அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைத்தபோது அவர் களுடைய அரசியல், பொருளாதார அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வட்டமும் மாவட்டமும் பேசிக் கொள்கிறார்போல குறுங்கட்டுரைகளை வெளி யிட்டார். "பணவீக்கத்தைப் போக்க என்ன செய்யலாம்?" என்று வட்டம் கேட்க, "அமிர் தாஞ்சனம் தடவலாம்" என்று பதில் தருவார் மாவட்டம். "ஏன் தவிட்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாதா?" என்று வட்டம் கேட்டதும், "நல்ல யோசனை தவிட்டு ஒத்தட வாரியம் தொடங்கலாம்" என்று பரபரப்பார் மாவட்டம்.

வெறும் அரசியல் மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் சுருக்கமான செய்திகளாகத் தந்தது 'துக்ளக்'. உலக சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையோ நல்ல திரைப்படங்கள் எது என்றோ அடையாளம் காட்டாவிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களை 'போஸ்ட்மார்ட்டம்' என்ற தலைப்பில் அலசினார். கூடவே இயக்குநரின் பதிலையும் வாங்கிப்போட்டார். ஒரு இயக்குநர் அவருடைய விமர்சனத்துக்குப் பதிலாக, "உங்களுடைய போஸ்ட்மார்ட்டம் என்ற பிணப் பரிசோதனைக்கு நான் பதில் தர விரும்பவில்லை" என்று தன்னுடைய ஆங்கிலப் புலமையை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் ரசித்து அடுத்த வாரம் செய்தியாக்கினார் சோ.

வழக்கமான நகைச்சுவை போதாது என்று கருதியபோது சிறப்பு நிகழ்வாக 'ஒண்ணரை பக்க நாளேடு, ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பத்திரிகை டூப் … கப்சா…' என்று போட்டுக் கலக்கினார். 'ஆனந்த விகடன்' அலுவலகத்திலிருந்துதான் 'துக்ளக்' வெளிவந்தது என்றாலும் 'ஆனந்த விகட'னையே கேலிசெய்து ஒண்ணரைப் பக்க நாளேட்டை வெளியிட்டு கலாய்த்தார். 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து சம்ஸ்கிருத சுலோகங்கள்' என்று தொடர்ந்து வெளியிட்டுவிட்டு, கடைசியில், "அதெல்லாம் உண்மையல்ல" என்ற குண்டு போட்டார். எழுதுவது யார் என்று தெரிவிக்காமல் உலக நடப்புகளை எழுத வைத்து, அவற்றை எழுதியது ஜெயலலிதா என்று பிறகு அறிவித்தார். விளையாட்டாக பத்திரிகையைத் தொடங்கியிருந்தாலும் எந்தவிதச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல் அதைத் தொடர்ந்ததுடன் மாதம் இரு முறை என்பதை வாராந்தரியாக மாற்றினார். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினாலும் அது கையைக் கடிக்கும் என்று தெரிந்ததுடன் நிறுத்திக்கொண்டார்.

தன்னுடைய வலிமை, வலிமையின்மை இரண்டையும் உணர்ந்து செயல்பட்டதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். அதிகம் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கைபோலத் தோன்றினாலும், அலட்டிக்கொள்ளாத மனம் அது என்று அவருடைய பணிகளைச் செய்யும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களுக்குப் புரியும். தமிழ்ப் பத்திரிகையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க குரல் அது. சம்பிரதாயமான சொற் களாக இருக்கலாம்; உண்மையாகவே சோவின் குரல் யாராலும் பூர்த்திசெய்ய இயலாதது!

***

திரு. அரவிந்தனின் கட்டுரை:

சோ என்னும் ஒற்றைச் சொல்லின் இரட்டை அடையாளம்!



 சோ 'வந்தே மாதரம்' என்ற தொடர்கதையை 'துக்ளக்'கில் எழுதிவந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டு ஒரு மேற்கோள் சம்ஸ்கிருதத்தில் தரப்பட்டு, அதன் தமிழாக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாரத்தின் கதையோட்டத்தில் இந்த மேற்கோள் தகுந்த இடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த மேற்கோள்களை எழுதியவர் சாணக்கியர் அல்ல என்பதையும் அவர் பெயரில் தானே எழுதியதையும் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து, வாசகர்களை அசடுகளாக்கி அழகு பார்த்தார் சோ.

வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவத்தில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. சாணக்கியர், அரிஸ்டாட்டில், காந்தி என்று பிரபலமானவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, மக்கள் அவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம், ஒரு சாதாரண மனிதர் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை இதன் மூலம் அம்பலப்படுத்தினார் சோ.

தனித்துவமான சாதனைகள்

இப்படிக் கூர்மையும் விளையாட்டுத் தனமும் கொண்ட தண்டவாளங்களின் மீது தனது கருத்துலக இயக்கம் என்னும் வாகனத்தை வெற்றிகரமாக ஓட்டியவர் சோ. அவருடைய நாடகங்கள், திரைப்படங்கள், 'துக்ளக்' என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரட்டை அடையாளமே அவரது ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்.

விளையாட்டுத்தனமான சாகசமாகத் தொடங்கப்பட்ட 'துக்ளக்' பத்திரிகையின் மூலம் சோ செய்த சாதனைகள் தனித்து வமானவை. அவரது அரசியல் விமர்சனங்கள் எள்ளலும் கூர்மையும் நிறைந்தவை. அரசியல்வாதிகளின் விவரங்கெட்ட தன்மை யையும் நேர்மையின்மையையும் அவரைப் போல அம்பலப்படுத்தியவர் யாருமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிய கவலையே அவருக்கு இருந்ததில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் 'துக்ளக்' செயல்பட்ட விதம் தமிழ் இதழியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

கருத்துலகின் மையம்

கருத்தளவில் மட்டுமல்லாது, இதழியலின் பிற பரிமாணங்களிலும் சோ கவனம் செலுத்தினார். நேரடியாகக் கள ஆய்வுசெய்து நிகழ்வுகளை அலசும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். கி.வீரமணி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்கள் ஒரு காலத்திய 'துக்ளக்' இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. கறாரான திரை விமர்சனங்களை வெளியிட்டு, அந்த விமர்சனங்களுக்கு இயக்குநர்களின் பதில்களையும் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதம் உருவாக வழி வகுத்தார். தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும் அவருடைய பத்திரிகையில் இடம் இருந்தது. அரசியல் பத்திரிகையாகவே அறியப்பட்டாலும் உடல் நலம், சட்டச் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளுக்கும் அதில் இடமுண்டு.

வெகுஜனச் சிந்தனைகளுக்கு முரணாக இருப்பதுபோலத் தோன்றினாலும் மைய நீரோட்டச் சிந்தனைகளை அடியொற்றியே சோவின் கருத்துலகம் அமைந்திருந்தது. பொது வாழ்வில் நேர்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தார்மிக உணர்வு ஆகியவையே அவரது கருத்துலகின் மையம். அவருடைய கருத்துக்களின் அடிப்படையை அனைவரும் அறிந்திருந்தாலும், அதை முன்வைக்க அவர் பயன்படுத்தும் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவை வாசகர்களிடத்தில் அவருக்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தன.

விமர்சனப் பார்வை

விமர்சனங்களில் சமரசமற்ற கடுமையும் யாருக்கும் சலுகை அளிக்காத போக்கும் அவரது கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தன. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதை முற்றாகத் தவிர்த்துவந்தார். பலருடன் நட்புப் பேணிவந்த அவர், விமர்சனம் என்று வரும்போது நட்பைக் குறுக்கே வர அனுமதிக்க மாட்டார். அதேசமயம், நட்பையும் அவர் இழந்ததாகத் தெரியவில்லை. அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சோ மரபுவாதி. தேசியவாதி. இந்திய மரபைப் போற்றியவர். அவரது சிந்தனைகள் என்று புதிதாக எதையும் சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் மனித உரிமைக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சோ, பின்னாளில் காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் கொலைகள், ராணுவ, காவல் துறைகளின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சினைகளில் மனித உரிமைகளின் பக்கம் நிற்காமல், அமைப்பின் சார்பில் நின்று வாதிடு பவராக மாறினார். அவரது மைய நீரோட்டச் சிந்தனை, நடுத்தர வர்க்கச் சார்பு ஆகியவற் றின் பின்னணியில் வைத்துத்தான் இந்தப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மரபைப் போற்றிய அவர் அதன் ஞான மரபை முன்னிறுத்தாமல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமயச் சடங்குகள், வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.

பாதை மாறிய பார்வை

தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னும் அவரது விமர்சனக் கத்தியின் கூர்மை மழுங்கத் தொடங்கியது. விமர்சனங்களில் சார்பு நிலைகள் முளைத்துவிட்டன. பொது வாழ்வில் நேர்மை என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்த அவர், மைய நீரோட்ட தேசியவாதத்தை அந்த இடத்தில் வைத்து ஆராதிக்கத் தொடங்கினார். மாநில உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் நியாயங்களை அவர் பேசவில்லை. விளிம்பு நிலைகளின் நியாயங்களைப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் நாத்திகவாதத்தோடு, அவ்வியக்கம் முன்னிறுத்திய மாநில உரிமைக் குரலையும் புறமொதுக்கினார். மார்க்ஸியச் சித்தாந்தங்களைக் கொள்கை அளவில் எதிர்த்த அவர், மார்க்ஸிய இயக்கங்களின் மக்கள் சார்பு அரசியலுக்கான மரியாதையைக் கொடுக்கத் தவறினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தேசியவாதத்தை ஒரு மதமாகவே முன்னிறுத்தினார், பிற விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளவும் தலைப்பட்டார். கறாரான அரசியல் விமர்சக ராக இந்திய அளவில் புகழ்பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அரசியல் பேரங்களை நடத்தித் தருவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எனினும் தமிழ் இதழியலில் சோ ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. பொழுதுபோக் கையே முதன்மைப்படுத்திய வெகுஜன இதழியலில் மாற்றுப் போக்குகளுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்தவர் சோ. எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதலான சில ஆளுமைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சில பிம்பங்களைக் கட்டமைத்ததில் அவரது எழுத்துகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. லட்சங்களில் விற்கும் பல இதழ் களுக்குச் சாத்தியமாகாத சாதனை இது. புதிய சிந்தனைகளை முன்வைத்ததன் மூலம் அவர் இதைச் சாதிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் ஆழ்மன அபிலாஷைகளையும் கருத்துக்களையும் அழுத்தமான மொழியில் தர்க்கபூர்வமாக முன்வைத்ததன் மூலம் சாதித்தார். ஒரு தலைமுறையின் அறிவார்த்த அடையாளமாக 'துக்ளக்' பத்திரிகையை வளர்த்தெடுத்தார். தன் கருத்துக்களுக்கு அழுத்தம் தந்த அதே வேளையில், பல்வேறு விதங்களில் இதழியலின் வரையறைகளை விரிவுபடுத்தினார். விமர்சனங்களைத் தாண்டி அவரை வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அம்சமாக இது இருக்கும்!

***
 திரு. மணாவின் கட்டுரை:

 சோ என்கிற மனிதர்


 "எந்த ஒரு மனிதரையும் நான் பார்த்ததும் நம்பிவிட மாட்டேன். அவரைத் தொடர்ந்து கவனிப்பேன். எந்தெந்தச் சமயங்களில் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து, அவரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவேன். அப்படியொரு முடிவுக்கு நான் வர ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோகூட ஆகலாம். ஆனால், அவரைப் பற்றி நானே சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். யார் வந்து அவரைப் பற்றி என்ன சொன்னாலும், சட்டென்று என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். பெரும்பாலும் என்னுடைய இந்தக் கணிப்பு பொய்த்ததில்லை" - இது அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது துக்ளக் ஆசிரியரான சோ சொன்னவை.

அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் ரகளைதான்!

நண்பர்களுக்கு முதலிடம்

துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அதில் பப்ளிஷராக இருந்தவர் சோவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.

ஒருமுறை துக்ளக் ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது, அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோவுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர். மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு, சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.

"டேய் சோ.. இங்கே பார்றா.."

அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.

அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன்.. "என்னதான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் 'வாடா.. போடா' என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?"

கேட்டவுடன் 'சுருக்'கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு. மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப்போனார். அதற்குள் மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.

போனவுடன் "நான் உன்னை 'வாடா'ன்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதை 'அப்ஜெக்ட்' பண்றதை என்னால் தாங்க முடியலை. உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா.. இல்லையா? நீ சொல்லு" என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும்... வழக்கமான குபீர் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.

"இவன்கிட்ட போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே மட்டுமில்லை.. எந்த இடத்தில், எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் 'வாடா.. போடா'ன்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னப்பா.. போதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?" என்று சொன்னபடி உதட்டைச் சுழித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!

சோவின் குரு

"உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?"

"இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்ல இருக் கான். அவனோட முழுப் பெயர் நாராயணசாமி" - இப்படி சோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை.. குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதிவந்த 'ஒசாமஅசா' தொடருக்காக பெங்களூரிலிருந்து வரவழைத்திருந்தார் சோ.

நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும், குஷியாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும் நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டுக்கு நகர்ந்தது கார்.

"டேய்.. நிஜமாவா சொல்றே. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? இவர் வேற டேப்ரெக்கார்டைக் கையில் வெச்சிருக்கார். அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா?" என்றார் நானி.

அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லி, "எல்லாத்தையும் சொல்லிறவா?" என்று பீடிகையும் போட்டார்.

"நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரெக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா" என்று சிரிப்பு பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.

தேன் பாய்ந்த அனுபவம்

சோவின் குசும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு, "இவன் அப்படி.. இப்படி" என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக்கொண்டே வந்தார் சோ.

அப்புறம் அதை ஒருவழியாக 'எடிட்' பண்ணி, அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்கள் வெளியானது.

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்குப் பெரும் பாக்கியம்! கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்டபடி இருக்கும்.

இலவச இணைப்பும் சோவும்

ஒரு சமயம், துக்ளக் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரத் தாடியுடன் சோகமாக உட்கார்ந்திருந்தார். மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர். அதனுடன் ஓர் இலவச இணைப்பு.

இணைப்பைப் பிரித்துப் பார்த்தால், பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு. அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது, சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.

'முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக்கொண்டு வரவும்.'

ஜூவுக்குப் போனா விதவிதமாப் பார்க்கலாம்

துக்ளக் ஆபீஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.

"என்ன விஷயம்?"

"மெட்ராஸுக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்று இழுத்ததும்… சோவிடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.

"மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கிறதைவிட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுதுபோகும். சரி.. நான் என் வேலையைப் பார்க்கட்டுமா?"

வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?

எல்லாம் ஒரே கப்சா

துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோவிடம் சொன்னேன்.

"அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட லாம். நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர், கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்" - இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார். முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர், அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.

அதில் இப்படி எழுதியிருந்தார், 'உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா.'

சோ பாடிய பாடல்

சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும், அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

துக்ளக்குக்கு ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாகியிருக்கிறது. போனில் அழைத்தவர் வழக்கத்தைவிட உரத்த குரலில் கத்தியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது.

மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்னாடக இசையில் ஒரு பாடல். சோ சார்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.

"நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.. என்ன?"

திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.

கட்டுரைகளுக்காக 


வேறுவேறு ஊர்களுக்குப் போய், அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.

"என்ன.. இப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?"

"ஏன்.. என்ன சார்?"

"ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனி தங்காதீங்க. நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான்தாங்க கொடுக்கப்போறேன்" - போனை வைத்துவிட்டார்.

நம்பிக்கையின் பெருமிதம்


ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயம்.. மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜுக்காகப் போனேன்.

சென்னை துவங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச் சூழல், "கார்ல போனாலும் பார்த்துப் போங்க" - சொல்லியனுப்பினார் சோ.

ராஜீவ் கொலையில், கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்துதான் ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார். சுபா சுந்தரம் தாங்கள் சென்ற காரில் 'பிரஸ்' ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவைத்தார்.

நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன், கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில், சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

துக்ளக் இதழில் கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.

துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில் 'படங்கள்: சுபா' என்று வெளியானது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லி யிருக்கிறார் சோ.

"நான்தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை. அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்" என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது, அவருடைய நம்பிக்கையின்மீது பெருமிதம் ஏற்பட்டது.

ஒசாமஅசா…

மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியான 'ஒசாமஅசா' தொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக்கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன், "நான் சொல்றேன்.. நீங்க எழுதுங்க. ஆனால், 'எழுத்தும் தொகுப்பும்' என்று உங்க பெயர்தான் வரணும்."

அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு. அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.

துக்ளக்கில் ஏற்கெனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின. கேலியும் கிண்டலுமாகப் பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள், அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.

"இதுதான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்னு வெச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம். சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை. ஒருவேளை, நான் இல்லாமல் போனபிறகு, அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்" என்று மிகுந்த உரிமையுடனும் நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார். மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது, என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.

"ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்.."

சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்தியபோது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.

அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்!

- மணா, முப்பத்தாறு நூல்களை எழுதியிருக்கிறார். 'துக்ளக்'கில் பதினான்கு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். சோவின் வாழ்வனுபவங்களைத் தொகுத்துத் தொடராகவும் எழுதியிருக்கிறார்.

நன்றி: தி இந்து




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக