நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.10.10

பிரிவினைவாதத்திற்கு பலியான பிரதமர்



இந்திரா காந்தி
.
நினைவு நாள்: அக். 31

.
.
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் குறிப்பிடத் தக்க ஆளுமை வாய்ந்த பெண்மணி இந்திரா காந்தி. முதல் பிரதமர் நேருவின் மகள் (பிறந்த நாள்: 19.11.1917) என்ற முன்னுரிமை காரணமாக காங்கிரஸ் கட்சியில் முன்னிலைக்கு வந்தாலும், தனது தலைமை தாங்கும் பண்பு காரணமாக, நாட்டை தீரத்துடன் வழிநடத்தினார். 1966  முதல் 1977  வரையிலும், 1980  முதல் 1984  வரையிலும் பாரதப் பிரதமராக இருந்தவர். அரசியல் ராஜதந்திரி என்ற பெயர் பெற்ற இவரால் தான், வங்கதேசம் என்ற நாடு  உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த பாகிஸ்தானை, 1971 போரில் முழுவதுமாகத் தோற்கடித்து  சரணாகதி அடையவைத்தவர்; அதன் காரணமாக, 'இந்தியாவின் நவீன துர்க்கை'  என்று வர்ணிக்கப்பட்டவர் இந்திரா.
.
.
பார்சி குடும்பத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டவர். ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இரு புதல்வர்களின் தாய். ராஜீவ் காந்தி, இவரது மறைவுக்குப் பின்  (1984 - 89 ) பிரதமராக இருந்தார். பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பிரிவினைவாதப் போரை துணிவுடன் முறியடித்தவர். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பயங்கரவாதிகள் முகாமிட்டவுடன், பின்விளைவுகளைப் பற்றிய அச்சமின்றி 'ஆபரேசன் ப்ளூஸ்டார்' என்ற அதிரடி நடவடிக்கையால் கோயிலை மீட்டார். அதற்கு பழி வாங்க, அவரது மெய்க்காப்பாளர்களான இருவர், இவரை 1984 , அக்டோபர் 31ல் சுட்டுக் கொன்றனர். ஒருகாலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டதன் பலனை இந்திரா அடைந்தார்;  நாடு நல்ல தலைவியை இழந்தது.
.
.
வங்கிகள் தேசிய மயமாக்கம்,  ஜமீந்தாரிமுறை  ஒழிப்பு,   பசுமைப் புரட்சி   உள்ளிட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர். என்றபோதும் ஜனநாயக நெறிமுறைகளை மீறும்வகையில் 1975ல் இவர் நாட்டில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இவரது வாழ்வில் ஒரு கரும்புள்ளியே. சுயநலன்  இன்றி அரசியலில் நீடிக்க முடியாது என்றபோதும், நாட்டுநலனை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தவர் என்று இந்திரா காந்தி பாராட்டப்படுகிறார். இவரது மறைவுக்குப் பிறகு நாட்டில்  ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை  இன்னும் நீங்காமல் இருப்பதே, இவரது ஆளுமைக்கு சான்று. இவர் உயிருடன் இருந்திருந்தால் இலகையில் தமிழர்கள்  சொல்லொனாக்    கொடுமைகளுக்கு ஆளாக  விட்டிருக்க மாட்டார் என்று பலரும் கூறுவதே இவரது ஆற்றலை வெளிப்படுத்தும்.
 
காண்க:
.

இறைவன் உருவாக்கிய வீடு

                                                                      
                        "காக்கைச்  சிறகினிலே நந்தலாலா... நின்றன் கரியநிறம் தோன்றுதய்யா நந்தலாலா" என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளைப்  படிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

                         காக்கைச் சிறகுகளின் கரிய நிறத்திலும்,  பசுமை மரங்களின் பச்சை நிறத்திலும்,  பறவைகளின் கீச்சிடும் குரலிலும்,  தீக்குள் விரலை தீண்டும்போது ஏற்படும் இன்பத்திலும் எல்லாம் கவிஞன் இறைவனைக்  காண்கிறான்.

                         பஞ்சபூதங்களில் ஆன இவ்வுலகம், இந்த உடம்பு எல்லாம் ஒரே தன்மையைக் கொண்டவை  என்ற இயற்கையை மறந்து,  என்று மனிதன் தனது சுகத்துக்காக மற்ற உயிர்களை  அடிமைபடுத்தவும் அழிக்கவும் துணிந்தானோ, அன்றே மனிதன் மிருகமாக மாறத்  தொடங்கிவிட்டான். 

                                      ஓடுகிற நீரில்-
                                      கவி பாடுகிற குரலில்-
                                      நடனம் ஆடுகிற அழகில்-
                                      இறை தேடுகிற உயிர்களில்-
இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
 
அவர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசித்தார்கள். முல்லைக்கு தேர்  ஈந்த பாரி வள்ளல், புறாவுக்காக தசையைத் தந்த சிபி சக்ரவர்த்தி,  பசுவுக்காக  மகனையே தேர்க் காலிட்ட மனுநீதி சோழன்,  நாயையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற தர்ம புத்திரன்.. இவை நமது முன்னோர் நமக்கு வழங்கிச் சென்றுள்ள கதைகள். 

                         சமீப காலமாக "யானைகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்குகின்றன; சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து மனிதர்களை, கால்நடைகளைத்  தாக்குகின்றன"  என்ற செய்திகளை அடிக்கடி பத்தரிகைகளில் படிக்க நேர்கிறது. காடுகளை அழித்து வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதால் ஏற்படும் விளைவுகள் இவை.

                         இந்த பரந்த  உலகம் எல்லோரும் குடியிருக்கும் கோயில்; எல்லா உயிர்களும் வாழ இறைவனால் உருவாக்கப்பட்ட வீடு.  அதை மறந்துவிட்டு  உலகை மனிதன் ஆள்வதாக நாம் கொக்கரிக்கிறோம்.

                 "இறைவனை பிடித்தவர்கள் பட்டியலில்
                  அவன் பெயர் இல்லை; 
                  காரணம்
                  அவன் சாமி கும்பிடுவோன் அல்ல;
                  ஆனால்,
                  இறைவனுக்கு பிடித்தவர்கள் பட்டியலில்
                  அவன் பெயர் இருந்தது.
                  காரணம்
                  அவன் எல்லா உயிர்களையும் நேசிப்பதால்"

  -என்ற கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.
 
ம.கொ.சி.ராஜேந்திரன் 
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்
தமிழ்நாடு
.

இந்தியாவின் இரும்பு மனிதர்


சர்தார் வல்லபபாய் படேல்
.
பிறந்த நாள்: அக். 31

.
இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டிலிருந்த அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நிலப்பரப்பாக இந்தியாவை வடிவமைத்தவர்  சர்தார் வல்லபபாய் படேல். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அவரது உறுதியான தலைமை காரணமாகவே அனைத்து சமஸ்தான அரசுகளும் இயல்பான ஒத்துணர்வுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

.
குஜராத்தின் கேடா மாவட்டத்தில், கரம்சத் கிராமத்தில் 1875, அக்டோபர் 31ல் பிறந்த வல்லபபாய், லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று வந்தார். கோத்ரா, மும்பை, அகமதாபாத்  நகர்களில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், 1917 ல் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறைகளாலும் போதனைகளாலும் கவரப்பட்ட அவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்கள், கட்சி மாநாடுகளில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்கிய படேல், 1934 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க இயலாத தலைவராக  உயர்ந்தார்.

.
விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோருக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு ஆற்றியவர் படேல். காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பும் படேலை நாடி வந்தது. எனினும் கட்டுப்பாடுள்ள கட்சித் தொண்டனாக, காந்தியின் அறிவுரையை ஏற்று அமைதி காத்தார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த படேல், தேசப்பிரிவினை உள்ளிட்ட நெருக்கடியான காலத்தில் நாட்டை உறுதியாக வழிநடத்தினார். 1950, டிசம்பர் 15ல் உடல்நலக் குறைவால் படேல் மும்பையில் காலமானார்.
.
இந்தியா என்ற அரசியல் ஒருங்கிணைப்புக்கு சர்தார் வல்லபபாய் படேல் அளித்த பங்களிப்பு மகத்தானது. சர்வமத சமரசம் என்பது எந்த மதமும் சாராததோ, இந்து மதத்தை நிராகரிப்பதோ அல்ல என்று அவர் தெளிவு படுத்தினார். அதனாலேயே கஜினி முகமதுவால் இடிக்கப்பட்ட  சோமநாதபுரம் கோயிலை தானே முன்னின்று  மீண்டும் கட்டினார் படேல்.  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே சுக்கானாக இருந்து முறைப்படுத்திய ஆளுமைக்கு உரியவர் படேல்.

விரிவாக அறிய:

.

உலகின் முதல் மருத்துவர்



தன்வந்திரி பகவான்

தன்வந்திரி ஜெயந்தி
 ஐப்பசி 17  (நவ. 3)

பாரதத்தின் தொன்மையான   ஆயுர்வேத மருத்துவ  முறையின் பிதாமகர் தன்வந்திரி. மிகப் பழமையான, பக்க விளைவுகள் அற்ற, நோயின் மூலத்தை நீக்குவதுடன் உடலையும் போஷிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது ஆயுர்வேதம். மூலிகைகள், தாதுக்கள், இயற்கையில் கிடைக்கும் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு, உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது இதன் சிறப்பு. தமிழகத்திலும் கேரளத்திலும் தன்வந்திரிக்கு கோயில்கள் உள்ளன.  கேரளாவில்  ஆயுர்வேத  மருத்துவம் தனிச் சிறப்போடு பேணப்பட்டு வருகிறது.

விக்கிரமாதித்த மன்னனின் அரசவை நவரத்தினங்களில்  ஒருவராக இருந்தவர்; மயக்கவியல், ஒட்டறுவை சிகிச்சைகளின் முன்னோடி என்ற கருத்துக்களும் உண்டு. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளியானவர் தன்வந்திரி என்று பாகவதம் கூறுகிறது. தீபாவளிக்கு முந்தைய திரயோதசி நாளில் இவரது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காண்க:
Dhanvantari  
Lord Dhanvantari 
Founder  of  Ayurveda 
.

வேத சமயம் காக்க வந்தவர்

 
சுவாமி தயானந்த சரஸ்வதி
 
மறைந்த  நாள்:  அக். 31
 
ஹிந்து மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கி, வேத சமயத்தை நிலைநாட்ட 'ஆரிய சமாஜம்' என்ற அமைப்பை நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.
 
குஜராத் மாநிலம்- மோர்வியில்,  1824 , பிப்ரவரி 24ல் பிறந்தவர். இயற்பெயர் மூல சங்கர். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள்  குறித்து  பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு வளர்ந்த அவர், சடங்குகளில்  நமது தொன்மையான  மதம் வீழ்ந்து கிடப்பதை சரிசெய்ய எண்ணம் கொண்டார். பல்வேறு  துறவிகளிடம் வேத பாடம் பயின்ற அவர், வேதமே கடவுள் என்ற  பழமையான இந்து மதக் கருத்தினைப் பரப்பத் திட்டமிட்டார். அதற்காக  ''ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பை நிறுவினார். 
 
ஹிந்து மதத்திலிருந்து  கட்டாயமாக வேற்று மதங்களுக்கு மாற்றப் பட்டவர்களை தாய்மதம் திருப்ப அக்காலத்தில் எதிர்ப்பு இருந்தது.  தனது 'சுத்தி இயக்கம்'  மூலமாக அதை அவர் சாதித்துக் காட்டினார்.
 
வாழ்நாளின் பெரும்பகுதியை சமய மறுமலர்ச்சி பிரசாரத்துக்கே  செலவிட்ட தயானந்தர், 60க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். அதில் முதன்மையானது 'சத்தியார்த்த பிரகாஷ்' (உண்மையின் ஒளி) ஆகும். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி உருவாக வேண்டும் என்று தயானந்தர் விரும்பினார்;  அதற்கான பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
 
மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளும் தயானந்தர் தீவிரமாக பாடுபட்டார். ராஜஸ்தானின் ஜோத்பூரில், சமஸ்தான ராஜாவின் ஆடம்பரப் போக்கைக் கண்டித்த காரணத்தால், அங்கேயே 1883 , அக்டோபர் 31 ல் விஷமிட்டுக்  கொல்லப்பட்டார் தயானந்தர். 
 
விரிவாக அறிய: 
 
 
.

29.10.10

தேசியமும் தெய்வீகமும் இவரது கண்கள்


பசும்பொன்
முத்துராமலிங்க
தேவர்

பிறந்த நாள் மற்றும்
நினைவு நாள்:
அக். 30

முத்து ராமலிங்க  தேவர் (அக்டோபர் 30, 1908  அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில்  பசும்பொன்  எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கம். தலைசிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு  தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தேசமும்  தெய்வீகமும் தனது  இரு கண்கள் என்று முழங்கியவர். நேதாஜி துவக்கிய 'பார்வர்ட் பிளாக்' கட்சியை தமிழகத்தில் வளர்த்தவர்.

பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.

பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்காக வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர். இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது. 

மேலும் அறிய:

 .

இந்திய அணுவியல் சாதனைகளின் தந்தை

 
 
டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா
(பிறந்த நாள்: அக். 30 )
 
இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் அடித்தளமிட்டவர்  டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா. ஹோமி பாபா ஒரு பார்ஸி குடும்பத்தில் 1909ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி மும்பையில்  பிறந்தார். தனது கல்வித் திறனால் உலக விஞ்ஞானிகள் மதிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இயற்பியலில், குறிப்பாக அணுக்கருவியலில் பல புதிய தேற்றங்களை உருவாக்கினார்.
 
சுதந்திர இந்தியாவில், இவரது மேதமையை உணர்ந்த பிரதமர் நேரு,  இவரைப் பயன்படுத்தி அணுவியல் துறையில் பாரதம் வளர வித்திட்டார். இவர் 1954ல் மும்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கினார். 1958 மார்ச் 14 ல் துவங்கிய இந்திய அணுசக்தி ஆணையகத்தின் [Indian Atomic Energy Commission] தலைவர் ஆனார்.  
 
நாடு முழுவதும் பல இடங்களில் அணுவியல் ஆய்வுக் கூடங்கள் நிறுவவும், அற்புதமான இளம் விஞ்ஞானிகள் உருவாகவும் இவரது தலைமை தான் காரணமானது. இன்று உலகின் ஆறாவது அணு வல்லமை பெற்ற நாடாக பாரதம் உள்ளதென்றால் அதற்கான பெருமை அனைத்தும் ஹோமி பாபாவையே சாரும்.
 
டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை.  அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்!   விமான விபத்தில் 1966  ஜனவரி 24ல்  ஹோமி பாபா காலமானார். இந்திய அணுஆயுத திட்டத்தைக் குலைக்கவே அமெரிக்க உளவு அமைப்பு நடத்திய விபத்தில் இவர் பலியானதாக சந்தேகிக்கப் படுகிறது. நேரடிப் பார்வையில் இவர் பம்பாயில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.
 
மேலும் அறிய: 

25.10.10

தவறாத சந்தானமும் தவறிய சிந்தனையும்

                                        
"செல்வாக்கு மிகுந்த பணக்காரனின் நாயாய் இருப்பதை விட, வறுமையில் வளரும் சுதந்திரமான பிச்சைக்காரனாய் இருப்பதே மேல்"  என்ற பழமொழியை என்றோ படித்தது  ஞாபகத்திற்கு வருகிறது.
பல்லாயிரக் கணக்கான வருடங்களைக் கொண்ட நமது பாரத நாட்டின் வரலாற்றில் எத்தனையெத்தனை பதிவுகள்,  பாதைகள்! எல்லாம் புனிதமானவை; பார்வையே புதியவைகளாக நமது முன்னோர்கள் இலக்கியங்களாக வாழ்க்கையை எழுதியிருக்கிறார்கள்.

அறம், பொருள், வீடு, இன்பம் என்பதிலிருந்து,  ஈதல், இசைபட வாழ்தலே வாழ்வின் ஊதியம்,  இறைவனடி சேர்தலே பிறவியின் நோக்கமாய் கொண்டுள்ளதில் அவர்களின்  உன்னதம் நமக்கு புரிகின்றது.

வேத வியாசர்,  வால்மீகி தொடங்கி சமிபகாலத்து ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ விவேகானந்தர், வள்ளலார் வரிசைகளில் இன்று ஸ்ரீ ரவிசங்கர்,  மாதா அமிர்தானந்தமாயி வரையிலும், நம் பாரத அன்னை 'தவறாத சந்தானத்தை'  புதல்வர்களை ஈன்றேடுத்துக் கொண்டுதான் வருகிறாள்.

என் மனக்குளத்தில் கல்லாய் விழுந்த கடந்த செப். 30 ம் தேதி 'அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு'  பல சலனங்களை நீரலைகளை என்னுள் ஏற்படுத்தியது. அவற்றில் கரைசேரும்  எழுத்துக்களை  உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன். 

நூறு கோடிக்கு மேல் இந்துக்களும், சுமார் 15 கோடி முஸ்லிம்களும், 5 கோடி கிறிஸ்தவர்களும் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் எல்லோரையும் திருப்திபடுத்தும், சமரசப்படுத்தும் நோக்கில் மத்தியஸ்த தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.    சற்றே நான் இதை வேறு கோணத்தில் சிந்திக்கிறேன்...

என்னுள் எழுந்த கேள்விகள் இரண்டு:

1 .  இதே போன்றதொரு நிலை  வேறு ஒரு ஐரோப்பா நாட்டிலோ, அரபு நாடுகளிலோ, ஆப்பிரிக்கா நாட்டிலோ ஏற்பட்டிருந்தால்?

2 .  நூறு கோடிக்கும் மேல் உள்ள இந்துக்கள் வழிபடும் ராமனுக்கு ஆலயம் கட்டப்படும் விதத்திலே இந்துக்கள் அமைதி கடைபிடிப்பதற்கு காரணம் தொன்றுதொட்டு வரும் நமது பண்பாடு காரணமா?  சகிப்புத்தன்மையா? அல்லது எது?

இதனை  உங்களது சிந்தனைக்கே  விட்டுவிடுவதற்கு முன்பு,  மீண்டும் ஒரு முறை இந்தக்  கட்டுரையின் தொடக்கத்திலுள்ள பழமொழியை மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டுகிறேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

என,
அன்புடன்
ம.கொ.சி.இராஜேந்திரன்
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்
.

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்



சகோதரி நிவேதிதை

(அக். 28, 1867 - அக். 13,1911)

ஐரிஷ்  நாட்டில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபில், பாரதத்தையே  தாயகமாக   சுவீகரித்துக் கொண்டவர்.  உலகம் முழுவதும் திக்விஜயம் செய்து ஹிந்து தர்மத்தின் மேன்மையைப்  பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட மார்கரெட், அவரது பிரதம சிஷ்யையாகி சகோதரி நிவேதிதை என்று பெயர் பெற்றார்.

ஆன்மிகப் பணி மட்டுமல்லாது, நாட்டு விடுதலைக்காகவும் உழைத்தார் நிவேதிதை. ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீச சந்திர போஸ், மகரிஷி அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடனும் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். இவரது சந்திப்பால், மகாகவி பாரதி, பெண்மையின் உயர்வு குறித்து அதிகமான கருத்துக்களை எழுதினார். தனது  ஞான குரு என்று பாரதி  இவரை வரித்திருக்கிறார்.

எளிய மக்களின் கல்விக்காக கொல்கத்தாவில் பள்ளியை நடத்தியவர். ஜெகதீச சந்திர போஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக கெளரவம் பெறக் காரணமாக இருந்தவர். இந்தியர்களுக்கு தேசபக்தியைப் புரியவைக்கவே ஐரிஷ் நாட்டிருந்து (அதுவும் ஆங்கிலேயனால் அடிமைப்பட்ட நாடு தான்) வந்தவராக வாழ்நாள் முழுவதும் பாரத நலனுக்காக உழைத்தார்.

காண்க: சகோதரி நிவேதிதை
காண்க: பாரதியின் வழிகாட்டி
காண்க: குருவின் ஆசி 

24.10.10

விடுதலைப் போரின் முதல் குரல்கள்

மருது சகோதரர்களும்
ஊமைத்துரையும்
பலிதானம் - அக். 24 (1801 )
தமிழகத்தில் நாட்டு விடுதலைக்காக ஒலித்த தன்மானக்  குரல்களுக்கு சொந்தக்காரர்கள் மருது சகோதரர்களும்  ஊமைத்துரையும். கட்டபொம்மன், திப்புவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையில் இருந்தபடி இவர்கள் ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்கள். வெள்ளையனை எதிர்த்து போர் புரிந்த இவர்கள் காளையார்கோயிலைக் காக்க தங்கள் உயிரை அர்ப்பணம் செய்தவர்கள்.

இவர்கள் பலிதானம் ஆன நாள் 1801, அக்டோபர்- 24.

.................................................................

சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்

 இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்




  • ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,


  • மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். 


  • ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். 


  • அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்... 


  • ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.  


  • ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... 


  • இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்...

  • இப்படிக்கு,
    மருது பாண்டியன் 
    பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

    (1801ம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித்தரப் பட்டுள்ளது).

    ..................................................................


    அன்னமிட்ட கை

    இடங்கழியார் நாயனார்

    திருநட்சத்திரம்:

    ஐப்பசி 8 - கார்த்திகை (அக். 25 )


    ஒருவன் திருடினான் என்றால், அதற்கான காரணம் வறுமையே என்று உறுதியாகத் தெரிந்தாலும் கூட, அவனைச் சிறையில் அடைக்கிறது அரசாங்கம். ஆனால், இடங்கழியார் ஒரு நாட்டின் மன்னராக இருந்தாலும், நியாயமான காரணத்துக்காக திருடிய ஒருவரை விடுதலை செய்தார். இதன் காரணமாக சிவபெருமானின் அருளுக்கே பாத்திரமானார்.

    கோனாடு எனும் குறுநிலப்பகுதியை ஆட்சி செய்தவர் இடங்கழியார். இவரது நாட்டைச் சேர்ந்த ஒரு சிவபக்தர், சிவனடியார்களுக்கு தினமும் அன்னதானம் அளித்து வந்தார். இவரது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். பக்தருக்கு வறுமையை உண்டாக்கினார். அடியவர்கள் வந்து, "அன்னம்' என்று கேட்டால், என்ன செய்வது என்ற சிந்தனை ஏற்பட்டது. தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, தன்னை நம்பி வரும் பக்தர்கள் பட்டினியாக செல்லக்கூடாது என்ற எண்ணம் மேலிட்டது. அது, "திருடினால் என்ன?' என்ற விபரீத எண்ணத்தை வளர்த்தது.

    எனவே, அரண்மனை நெற்களஞ்சியத்தில் இருந்து நெல்லைத் திருட திட்டமிட்டார். அரண்மனை களஞ்சியத்துக்குள் யாரும் அறியாமல் புகுந்து விட்டார். சிறிய மூடை ஒன்று சற்று உயரமான இடத்தில் இருந்தது. அதை மெதுவாக இழுத்தார். ஆனால், அது சரிந்து கீழே விழுந்தது. இந்த சப்தம் கேட்டு சுதாரித்து விட்டனர் காவலர்கள். களஞ்சியத்துக்குள் வந்து பார்த்த போது, உடல் நடுங்கி நின்றார் சிவபக்தர். "வெண்ணீறு பூசிய நீர், இப்படிப்பட்ட செயலில் ஈடுபடலாமா?' என, அவரை நோக்கி கடுமையாகக் கேட்ட காவலர்கள், மன்னர் இடங்கழியாரிடம் அவரை இழுத்துச் சென்றனர். தன் முன் அப்பாவியாய் திருநீறு பூசிய மேனியுடன் வந்து நின்ற சிவபக்தரைப் பார்த்த மன்னர் இடங்கழியார், "வெண்ணீறு பூசி பக்திப்பழமாய் இருக்கும் நீர், எதற்காக திருட வந்தீர்? உம்மைப் பார்த்தால் திருடன் போல் தெரியவில்லையே...' என்றார்.

    "அரசே... நான் சிவனடியார்களுக்கு அன்னமிடும் பணியைத் தவறாது செய்து வந்தேன். இப்போது, என்னை வறுமை வாட்டுகிறது. அடியவர்களுக்கு அன்னமிட நெல் இல்லாததால், இங்கே திருடப் புகுந்தேன். என்னை தண்டிப்பது பற்றி கவலையில்லை; ஆனால், எக்காரணம் கொண்டும் நான் செய்து வந்த இந்தத் தொண்டு மட்டும் நின்றுவிடக்கூடாது...' என, கண்ணீருடன் சொன்னார்.         

    வருத்தப்பட்டார் மன்னர் இடங்கழியார். "பக்தரே... இந்தப் பணியை நான் செய்திருக்க வேண்டும். ஆனால், என் குடிமக்களில் ஒருவரான நீர் செய்திருக்கிறீர். இனி, ஏழை அடியவர்களுக்கு உணவிடுவது என் கடமை. நீர் திருட வேண்டிய அவசியமிருக்காது. நானே அப்பணியைச் செய்வேன். உமக்கும் தேவையான நெல் தருகிறேன்...' என்றார். இத்தகைய அருமையான தீர்ப்பளித்த இடங்கழியார், சிவனடியார்களுக்கு அன்னதானத்தைக் குறைவின்றி நடத்தியதால், சிவலோகம் அடைந்தார்.

    அவரது குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நடத்தப்படும். அனைவருக்கும் உணவு கிடைத்து விட்டால், திருட்டுக்கு இட மில்லை என்பதை இடங்கழியாரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    நன்றி: தினமலர்
    காண்க:  இடங்கழி நாயனார் புராணம்
    காண்க: இடங்கழி நாயனார்

    சமயப் பற்றால் சரிதமானவர்

    சத்தி நாயனார்
    திருநட்சத்திரம்:
    ஐப்பசி- 13 - பூசம் (அக். 30 )
    சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.
    “கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”
     – திருத்தொண்டத் தொகை
    காண்க: சத்தி நாயனார்
    காண்க: சத்தியார்
    காண்க: திருத்தொண்டர் புராணம் 

    சைவம் காத்த வள்ளல்

    நாயன்மார் திருநட்சத்திரம்
    ஐப்பசி- 7 பரணி (அக். 24)

    பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர் நின்றசீர் நெடுமாறர், சமண மத தாக்கத்தால் சைவ நிந்தனை செய்தவர். இவருக்கு சூலைநோய் தாக்கியது. அதனை 'மந்திரமாவது நீறு' என்று துவங்கும் திருநீற்றுப் பதிகம் பாடி குணப்படுத்தினார் திருஞான சம்பந்தர். அதையடுத்து மனந்திருந்திய நெடுமாறர், சமணரை மறந்து சைவம் திரும்பினார். நாயன்மார்களில் ஒருவரான நெடுமாறர், திருஞான சம்பந்தர், மகையர்க்கர்சியார், குலச்சிறையார் ஆகியோரின் சமகாலத்தவர். மதுரையில் இருந்து ஆண்ட இவரது ஆட்சிக்காலம், சைவ சமய புத்தெழுச்சிக்  காலம்.
    .
    .

    22.10.10

    சித்தர்களில் முதல்வர்

    திருமூலர் திருநட்சத்திரம்
    ஐப்பசி 6 - அஸ்வினி

    தமிழகத்தின் அறிவுச்சுடர்களான பதினெண் சித்தர்களில் முதலாமவர் திருமூலர். திருக்கயிலாய பரம்பரையைச் சேந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னமே அறிவித்தவர். 

    9  தந்திரங்களுடன் கூடிய 3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரின் தெய்வ வாக்கால் இயற்றப்பட்டது. இது சைவர்களின் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்கும்   தனிச் சிறப்புடையது.

    கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்களின் சித்து காரணமாக ஆட்டிடையன் உடலில் புகுந்து இவர் நடத்திய திருவிளையாடல் நாம் அறிய வேண்டியது. சமரச நாட்டமும், தெய்வீக ஆற்றலும் கொண்டதாக இவரது உபதேசங்கள் விளங்குகின்றன. தமிழுக்கு இவர் அளித்த அறிய கருவூலமான திருமந்திரம் உள்ளவரை தமிழின் தெய்வீகத் தன்மை நீடூழி வாழும்.

    ''என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத்  தமிழ் செய்யுமாறே'' என்பது திருமூலர் வாக்கு.

    .

    17.10.10

    அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்!


    " இந்த உலகம் எனது வீடாக இருந்தால்,  அதில் பாரத  தேசம் பூஜை  அறையாக இருக்கும்" என்ற கருத்தை வேதாத்திரி மகரிஷியின் நெருங்கிய சீடரும் யோக விஞ்ஞானியுமான அழகர் ராமானுஜம் பேச சென்னையில் நடந்த ஒரு விழாவில் கேட்க நேர்ந்தது.  இதில் ஆச்சரியப்படத்தக்கது ஏதெனில்,  இவ்வாறு பேசியது ராமானுஜம் அல்ல , அமெரிக்காவில் அவர் கலந்துகொண்ட ஓர் ஆய்வரங்கில் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் சொன்னதையே அவர் வெளியிட்டார்.
    .
    உலகம் இன்னும் நெருக்கடியான காலக்கட்டத்தில் சவால்களை எதிர்க்கொள்ளும்  நிலையிலுள்ளது. உணவுப்பற்றாக்குறை,  வெப்பமயமாக்கல்,  இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல்  இவற்றிற்கெல்லாம் மேலாக உயிர்களுக்கிடையே இருக்க வேண்டிய இணக்கமான நெருக்கம் குறைந்துகொண்டே வருதல்.  ஒவ்வொரு நாடும் தனக்கேன்றே உரித்தான இயல்பான இறைத்தன்மையை இழந்து வருகிறது.
    .
    மாயத்தோற்றத்தில் மறைவது போல பொருளாதார, செயற்கை போராட்டத்தில் தொலைந்து நாடுகளிக்கிடையே உள்ள உறவைக் குறைக்கின்றன.
    .
    இதற்கு என்ன தீர்வு? 
    .
    அந்தந்த நாடுகளுக்குரிய உயிர்ப்பான 'தேசியம்' மட்டுமே.
    .
    நமது பாரதத்திற்கே உரித்தான தர்மம்,  சத்தியம், பண்பாடுகளை நாம் தொடர்ந்து பேணிக் காக்க உருவானதுதான் 'தேசிய சிந்தனைக் கழகம்'.
    .
    இதன் மூலம் 'தேசமே தெய்வம்'  என்ற வலைப்பூ இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
    .
    இதற்கான ஆதரவை நல்லோர்களிடம் நாடுகின்றோம்.
    .
    அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்!
    அன்புடன்,
    .
    ம.கொ.சி. இராஜேந்திரன்
    .
    ஸ்ரீ விக்ருதி வருடம், புரட்டாசி மாதம்- 31 ; (17.10.2010 ).
    சிறு குறிப்பு:
    • காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாம் இடத்தை நாம் பெற்றது வாய்ப்புகளும், வசதிகளும் இருந்தால் நம்மால் சாதிக்கமுடியும் என்பதினை பறைசாற்றுகிறது. அதே சமயம், தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம்  8-௦0 ௦  என்ற கணக்கில் தோற்றது தேசிய விளையாட்டின் மீது நமது அரசிற்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

    .

    ஜய ஜய பவானி!


    கவிதை

    ஜய ஜய பவானி! ஜய ஜய சங்கரி!
    ஜய ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரி!

    (ஜய ஜய)

    வில்லினில் ஒலியென, விஜயத் திருவென,
    இல்லினில் ஒளியென, இருட்பகை சிதறிட,
    நின்றிடும் உமையவளே!
    நின்னடி பணிகின்றோம்!

    (ஜய ஜய)

    நீதி நிலைத்திட, நியமம் காத்திட,
    சாதி ஒழித்திட, சதிகளை வென்றிட,
    உன்னருள் வேண்டுகிறோம்!
    விண்ணவர் தலைமகளே!

    (ஜய ஜய)

    அன்புடன் அனைவரும் இன்புற வாழ்ந்திட,
    'தன்'னெனும் ஆணவ மாயை அகன்றிட,
    எம் மனம் ஏங்கிடுதே!
    இன்னருள் தந்திடுவாய்!

    (ஜய ஜய)

    பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட,
    சாரணர் போற்றிடு தர்மம் பரவிட,
    ஆசி அளித்திடுவாய்!
    ஈசனின் இருதயமே!

    (ஜய ஜய)
    -குழலேந்தி
    . 

    ராமாயணத்தை வழங்கிய அருளாளர்

    வால்மீக ஜெயந்தி

    நாள்:  புரட்டாசி-31

    வழிப்பறி செய்த வேடன் ஒருவன் ராம மந்திரத்தால் மகத்தான முனிவராகி, உலகுக்கே நல்வழி காட்டும் ராமாயண காவியத்தை எழுதினார். அவர் தான் வால்மீகி முனிவர். இன்று அவரது அவதார ஜெயந்தி தினம்.

    நாரதரின் வழிகாட்டுதலால் 'மரா மரா' என்ற சொல்லையே பல்லாயிரம் முறை ஜபித்ததன் வாயிலாக, அறியாமலே 'ராமராம' மந்திரம் ஜபித்ததன் பலனை அடைந்தவர் வால்மீகி. தவத்தின் போது கரையான் புற்று மூடியதும்கூடத் தெரியாத வைராக்கிய சித்தராக அவர் இருந்ததன் பலன், இறையருள் அவர்மீது பொழிந்தது.

    பூர்வாசிரமத்தில் தனது குடும்பத்திற்காக வேட்டை ஆடியும் வழிப்பறி செய்தும் வாழ்ந்த வால்மீகி, இறைவன் அருளால் மனம் திருந்தி, ரகுகுல வீரனின் சரிதத்தை அற்புதமான சந்தங்களுடன் கூடிய 24000 பாடல்களுடன் 6  காண்டங்களாக  ராமாயண இதிகாசமாக வழங்கினார். எவருடைய பிறப்பும் தாழ்ந்ததல்ல என்று காட்டுகிறது வால்மீகி முனிவரின் சரிதம். இறைவன் அருள் இருந்தால் யாராலும் மாபெரும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு வால்மீகி முனிவர் உதாரணம். எனவே தான் வால்மீகி 'ஆதிகவி' என்று அழைக்கப்படுகிறார்.

    முழு விபரங்களுக்கு:
    வால்மீகி காண்க: வழிப்பறி செய்த வால்மீகி
    காண்க: வால்மீகி கோயில், திருவான்மியூர்
    காண்க: வால்மீகி ஆசிரமங்கள்
    .

    காவியத் தாயின் இளைய மகன்


    கவியரசு கண்ணதாசன்
    நினைவு தினம்: அக்.17

    தமிழ்மொழிக்கு துள்ளும் நடையை வழங்கிச் சென்றவர் கண்ணதாசன். துவக்கத்தில் நாத்திகராக இருந்து, பிறகு ஆத்திகரானவர். இவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்'  வெளிவந்த காலத்தில் கடவுள் நிந்தனை செய்தவர்களுக்கு சரியான பதிலடியாகத் திகழ்ந்தது.  வனவாசம்,  ஏசு காவியம்,  மாங்கனி,  கடைசிப் பக்கம்  உள்ளிட்ட  எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

    திரைப்படப் பாடலாசிரியாரக முப்பது ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியவர். தனது பாடல்களில் சமூகக் கருத்துக்களையும் செந்தமிழையும் புகுத்தி, திரைப்பாடல்களுக்கு புதுச்சுவை சேர்த்தவர். தனது சேரமான் காதலி புதினத்திற்காக 'சாகித்ய அகாதெமி' விருது (1980) பெற்றவர். தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும்  வளர பெருந்துணை புரிந்தவர்.

    பிறந்த நாள்:  24 , ஜூன், 1927. தமிழக அரசவைப் புலவராக வீற்றிருந்த பெருமை இவருக்குண்டு. 1981-ல் மறைந்தார்.
    காண்க: கண்ணதாசன்
    .

    நாட்டு வணக்கம்

    
    
    மகாகவி பாரதி
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ? - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?


    இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
    ஈந்ததும் இந்நாடே - எங்கள்
    அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
    அறிந்ததும் இந்நாடே - அவர்
    கன்னிய ராகி நிலவினி லாடிக்
    களித்ததும் இந்நாடே - தங்கள்
    பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
    போந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?


    மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
    வளர்த்ததும் இந்நாடே - அவர்
    தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
    தழுவிய திந்நாடே - மக்கள்
    துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
    சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
    அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
    ஆர்ந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?


    -மகாகவி பாரதி

    (ராகம் - காம்போதி; தாளம் - ஆதி)
    .