நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.11.10

பக்திப் பயிர் வளர்த்த பல்லவன்


ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

திருநட்சத்திரம்: ஐப்பசி 24  - மூலம்  ( நவ. 10 )

சைவ இலக்கியத்  தொகுப்பான பன்னிரு திருமுறைகளில், பதினொன்றாவது திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.
ஐயடிகள்  உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி, தமிழ்மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர், அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார்.

அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்தினார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

இந் நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர்  க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார். காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்மப் பல்லவனின்  தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் என அவர் தெளிவு செய்துள்ளார். இவர் காலம் பொதுயுகம் (கி.பி) 670 முதல் 685 வரையாகும்.

ஐயடிகள் காடவர்கோனின்  ஒரு பாடல்:

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் 
கோடுகின்றார் மூப்பும் குறுகிற்று - நாடுகின்ற 
நல்லச்சிற்றம்பலமே நண்ணா முன் நன்னெஞ்சே 
தில்லைச் சிற்றம்பலமே சேர்.
 


நன்றி: நாயன்மார்கள் வரலாறு

மேலும் காண்க:
ஐயடிகள் காடவர்கோன்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக